

சிலப்பதிகாரக் காப்பிய நாயகி கண்ணகி, ஒரு கருத்தியல். இந்தக் கண்ணகியை திராவிட முன்னேற்றக் கழகம், திருஉருவாக்கியது. கண்ணகி என்னும் அந்தக் கருத்தியல் திராவிட இயக்கத் தலைவரான அண்ணாவின் நாவல்களில் எவ்விதம் தொழிற்பட்டுள்ளது என்பதை இந்தச் சிறு நூலில் பேராசிரியர் இரா.அறவேந்தன் ஆராய்கிறார்.
ஆனால், இளங்கோவடிகளின் கண்ணகி கதாபாத்திரத்துக்கு மாறான இயல்பு கொண்டவர்களாக அண்ணாவின் நாயகிகள் உள்ளனர். உதாரணமாக, ‘கலிங்கராணி’ நாவலின் நாயகி, சோழ அரசனால் துரோகி எனக் குற்றஞ்சாட்டப்பட்ட தன் காதலனைச் சோழனை எதிர்த்துத் தேடிக் கண்டடைகிறாள்.
அதுபோல் ‘ரங்கோன் ராதா’வில் ரங்கம்மாளின் கணவனின் முறையற்ற பாலியல் உறவுகளால் அவள் பாலியல் தொழிலாளியாகிறாள். அவள் மகள் ராதா, படித்து வளம்பெறுவதுடன் தன் தந்தையைத் தண்டிக்கவும் செய்கிறாள். படித்துப் பார்க்க வேண்டிய ஆய்வு நூல் இது. - ஜெய்
அண்ணாவின் நாவல்களில் கண்ணகி எனும் கருத்தியல்
இரா.அறவேந்தன்
என்சிபிஎச் வெளியீடு
விலை: ரூ.55
தொடர்புக்கு: 044 26251968
நம் வெளியீடு: பயண வழிகாட்டி நூல்!
இலங்கை முதல் அமெரிக்கா வரை 20க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பயணம் செய்திருக்கிறார் நூலாசிரியர். காமதேனு மின்னிதழில், ‘சிறகை விரி... உலகை அறி’ என்ற தலைப்பில் தொடராக வெளிவந்த கட்டுரைகளுக்குக் கிடைத்த பரவலான வரவேற்புக்குப் பிறகு அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் முதல் பாகமாக, ‘மண்ணுக்குள் அரண்மனையும் மரண ரயில் பாதையும்’ என்ற தலைப்பில் அண்மையில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றது.
அதைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக இந்நூல் வெளிவந்துள்ளது. இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கட்டுரையும் வாசகர்களை அந்த நாட்டிற்கே கைப்பிடித்து அழைத்துச் செல்லும் வகையில் எழுதப்பட்டுள்ளன. இதுவரை பயணம் செய்வதில் ஆர்வம் கொள்ளாதவர் மனத்திலும் ஆசை துளிர்க்கச் செய்யும் எழுத்துகள் இவை. முக்கிய நகரங்கள், அங்குள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்கள், சின்னங்கள், அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள் உள்ளிட்டவை குறித்து அழகிய ஒளிப்படங்களுடன் கூடிய அருமையான பயண வழிகாட்டியாக இப்புத்தகத்தைப் பயணிகள் கொள்ளலாம்.
சிறகை விரி...
உலகை அறி!
சூ.ம.ஜெயசீலன்
இந்து தமிழ் திசை வெளியீடு
விலை: 275
தொடர்புக்கு: 7401296562