

மொழிபெயர்ப்பாளர் மருத்துவர் ஜெ.பிரியதர்ஷினி எளிமையும் செறிவும் கொண்ட மொழியில் தன்னுடைய தாத்தாவான புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் பொன்னீலனின் ‘கரிசல்’ நாவலை மொழிபெயர்த்துள்ளார். பிரியதர்ஷினி, மொழிபெயர்ப்பு மொழியின் கூர்மையான உரையாடல்கள், உணர்வுமிக்கக் காட்சிகள் வழிக் கிராமப்புற வறுமையை, ஒடுக்குமுறைகளைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார். இது ஒரு மொழிபெயர்ப்பாளரின் முக்கியமான வேலை.
பிரியதர்ஷினி 27 வயது இளம் மகப்பேறு மருத்துவர். தன்னுடைய தாத்தாவின் மீதும் அவரது எழுத்துகள் மீதும் அன்பும் அர்ப்பணிப்பும் கொண்டவர். செறிவான இந்த நாவலின் மொழிபெயர்ப்பின் வழி பிரிதயர்ஷினி நமக்கெல்லாம் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். ‘கரிசல்’ தமிழில் 1976இல் வெளிவந்தது.
அப்போது இந்த இளம் மொழிபெயர்ப்பாளர் பிறக்கவே இல்லை. அதற்குப் பல வருடங்கள் கழித்து அவரது பன்னிரண்டாம் வயதில் அவர் இந்த நாவலை வாசித்துள்ளார். இந்த நாவலால் வசீகரிக்கப்பட்டார். அவருள் அந்த நாவல் இறங்கிவிட்டது. பல வருடங்கள் கழித்து, அவர் மருத்துவராகப் பணியாற்றும் காலத்தில் இந்த நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் முயற்சியில் இறங்கினார்.
இந்தப் புத்தகத்தை அவர் தனது மருத்துவ அங்கிக்குள்ளே வைத்திருந்துள்ளார். ஓய்வு நேரம் கிடைக்கும்போதெல்லாம் தனது திறன்பேசியில் இதை மொழிபெயர்த்ததாக அவர் கூறியுள்ளார். இது அவர் அந்தப் பணிமீது கொண்டுள்ள அன்பு. இதற்காக அவரை மனதாரப் பாராட்டுகிறேன்.
மூல மொழி தெரியாத ஒருவர் இந்தக் கதையுடன் தன்னைத் தொடர்புபடுத்திக் கொள்ளவும் அதை ஆழ்ந்து வாசிக்கவும் செய்வதுதான் ஒரு மொழிபெயர்ப்பின் நோக்கம். அதை பிரியதர்ஷினி சிறப்பாக நிறைவேற்றியுள்ளார். ஆங்கிலத்தில் வாசிக்கும் வாசகர்களுக்கு அவர் தனது தாத்தாவின் எழுத்துகளை அளித்துள்ளார்.
பொன்னீலன் சித்தரித்துள்ள அநீதிக்கு எதிரான கோபம், எழுச்சி, விருப்பம், ஈடுபாடு ஆகியவற்றை நாமும் உணர்ந்துகொள்ள இந்த மொழிபெயர்ப்பு உதவுகிறது. அதே நேரம், பொன்னி, கண்ணப்பனின் காதலையும் நாவல் சொல்கிறது. மற்ற கதாபாத்திரங்களுக்கு இடையிலான உறவுகளும் நாவலில் அழுத்தமாக விவரிக்கப்பட்டுள்ளன.
கரிசல் பகுதியின் மோசமான தட்பவெப்ப நிலையையும் மழைக் கால வெள்ளப் பாதிப்புகளையும் நாவல் விவரிக்கிறது. கரிசல் மக்கள் பசியாலும் ஒதுங்க இடமில்லாமல் படும் கஷ்டங்களையும் பொன்னீலன் சொல்லியுள்ளார்.
இந்த நாவல் கீழ்வெண்மணிப் படுகொலையையும் எதிரொலிக்கிறது. வர்க்கப் போராட்டம், அதில் பெண்கள் வகித்த முக்கியப் பங்கு ஆகிய அம்சங்களையும் பொன்னீலன் இந்த நாவலில் குறிப்பிட்டுள்ளார். கரிசல் பகுதியின் வாழ்க்கையைத் தெளிவாக இதில் உணர்த்திவிடுகிறார் பொன்னீலன்.
இதன் வழி நீங்கள் கரிசல் காட்டுக் கிராமத்துக்குப் போனதைப் போன்று உணர்வீர்கள். அந்தக் கிராமத்தின் வெயில், வறட்சி முழுவதையும் நீங்கள் அனுபவிப்பீர்கள். அநீதியான சமூக நிலைகளைக் காண்பீர்கள். இவற்றையெல்லாம் சொல்ல பிரியதர்ஷினி எளிமையான, தெளிவான, துலக்கமான ஒரு மொழியைப் பயன்படுத்தியுள்ளார்.
கதையை அதன் இயல்பான ஓட்டத்தில் சொல்வதில் பிரியதர்ஷினி விசுவாசமாக இருந்துள்ளார் என்பது சுவாரசியமான விஷயம். அவருடைய வயதில் இந்திய மொழி நூல்களின் மொழிபெயர்ப்புகளை வாசிப்பது எனக்குச் சவாலானதாக இருந்தது. ஏனெனில், நமது மொழிபெயர்ப்புகளை எளிதாகப் புரிந்துகொள்ள முடியாது.
மொழிபெயர்ப்பின் சவால் என்பது மூலச் சொற்களை ஆங்கிலத்தில் அல்லது வேறு மொழிகளில் அளிப்பது மட்டுமல்ல. எழுத்தாளரின் உணர்வு, ஆன்மா, மொழியின் தொனி, எழுத்தாளர் சொல்ல விரும்பிய உட்பொருள் ஆகியவற்றைத் தகுந்த, இயல்பான மொழியில் பெறுமொழிக்குக் கடத்துவதுதான் உண்மையான சவால்.
அது அப்படியே நேரடியான மொழிபெயர்ப்பாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. மூல நாவலை நான் வாசித்ததில்லை. ஆனால், பிரியதர்ஷினியின் இந்தப் படைப்பு ஒரு மொழிபெயர்ப்பு போல் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இது ஆங்கிலத்தில் எழுதப்பட்டதுபோல் உள்ளது.
மக்களைக் குறிக்கும் சில தமிழ்ச் சொற்கள் மட்டும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், ஒரு தமிழர் ஆங்கிலத்தில் எழுதும்போது இது இயல்பானது. நீங்கள் சில தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த வேண்டிவரும். ஆனால், தமிழ் தெரியாதவர்களுக்கு இதெல்லாம் ஒரு தடையை உருவாக்கவில்லை என்பது சிறப்புக்குரியது. இது மொழிபெயர்ப்பாளரின் குறிப்பிடத்தகுந்த ஆற்றல்.
பொன்னீலன் திறமையான எழுத்தாளர். எழுத்தில் தேர்ச்சி பெற்றவர். அவரது இந்த நாவலை வாசித்ததில் உண்மையில் மகிழ்ச்சி. அவரது சொந்தக் குடும்பத்திலிருந்து ஒருவர் அவர் எழுத்துக்குப் பெருமை சேர்த்திருப்பதில் கூடுதல் மகிழ்ச்சி.
பிளாக் சாயில் (Black Soil)
பொன்னீலன் (மொழிபெயர்ப்பு: ஜெ. பிரியதர்ஷினி)
பென்குயின் ராண்டம் ஹவுஸ்
விலை: ரூ.699
தமிழில்: மண்குதிரை
- எழுத்தாளர், நாடாளுமன்ற உறுப்பினர்; தொடர்புக்கு: shashitharoor56@gmail.com