நூல் நயம்: சுடர் ஏற்றும் கருத்துகள்

நூல் நயம்: சுடர் ஏற்றும் கருத்துகள்
Updated on
2 min read

நூலாசிரியர் சுவாமி அத்யாத்மானந்தா, கேரளத்தில் நன்கு அறியப்பட்ட துறவி. கதை, கவிதை கட்டுரைகள் எழுதுவதில் வல்லவர். இந்த நூலில், இளைய தலைமுறையின் பல்வேறு சிக்கல்களுக்கு நடைமுறையில் சாத்தியமாகும் தீர்வுகளைத் தமக்கே உரிய எளிய நடையில் விளக்கியிருக்கிறார்.

வாழ்வியல் தத்துவங்களையும் வழங்கியுள்ளார். கல்வி, விழுமியங்கள், மறைவு குறித்த ஐயத்தையும் அச்சத்தையும் கதை வடிவில் விளக்கிச் சிந்தனைத் தெளிவை இந்நூல் அளிக்கிறது. ஆசிரியர் - மாணவர், தந்தை - மகன், கணவன் - மனைவி உள்ளிட்ட மனித உறவுகளுக்கு வலுச் சேர்க்கும் விதத்தில் விழுமியம் சார்ந்த வாழ்வுக்கும் இந்நூல் வழிகாட்டுகிறது. ஆங்காங்கே ஆழமான கருத்துகளை அழகாகப் பதிவுசெய்கிறது.

‘யார் பார்த்தாலும் இல்லையென்றாலும், காட்டுச் செடி பூக்களைத் தந்துகொண்டே இருக்கிறது’, ‘நமது அறிவின்மை உருவாக்கும் விபத்துகளுக்கு, விதியையும் கர்ம வினைகளையும் பழி சொல்வது அநியாயம்’, ‘ஒவ்வொருவரின் உள்ளும் அன்னியத் தன்மை ஊடுருவி உள்ளது’, ‘(சமூகத்தில்) செயற்கைத் தன்மை அதிகரித்து வருகிறது’ உள்ளிட்ட பல நினைவில் வைக்கத்தக்க எச்சரிக்கைக் கருத்துகளையும் நூல் எடுத்துச் சொல்கிறது.

மலையாளத்திலிருந்து தமிழுக்கு இராதாதேவி தேவராஜன் மொழிபெயர்த்துள்ளார். இவரின் மொழிப் புலமையும் ஆன்மிக விசாரணையும் பல இடங்களில் பளிச்சிடுகின்றன. இந்த நூல் மூலமாக கேரளத்தின் மாத்ருபூமி பதிப்பகம், தமிழில் அடி எடுத்து வைத்துள்ளது. - பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

வித்யா ஸ்மிருதி லயம்
சுவாமி அத்யாத்மானந்தா

மாத்ருபூமி பதிப்பகம், கோழிக்கோடு, கேரளா
விலை: ரூ 250
தொடர்புக்கு: 0495 – 2362000

ஈரம் மிக்க கதைகள்: தன்னைச் சுற்றி வாழ்ந்துவரும் சக மனிதர்களின் வாழ்க்கையும், அவர்கள் எதிர்கொள்ள நேரிடும் சம்பவங்களுமே இத்தொகுப்பிலுள்ள கதைகளுக்கான மூலதாரம். சாதாரண எளிய மனிதர்களே இக்கதைகளின் நாயகர்கள் என்றாலும், வாழ்வின் உயிர்ப்பான கணங்களை உணரச் செய்வதில் இக்கதைகள் வெற்றியடைந்துள்ளன. அரசுப் பள்ளியொன்றில் படித்த மாணவர்கள் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி அடைகிறார்கள்.

அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் வாழ்த்து பிளெக்ஸ் போர்டு வைக்கிறார்கள். வெற்றி பெற்ற மாணவர்களுக்கல்ல. வெற்றிக்குத் துணை நின்ற ஆசிரியர்களுக்கு. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், யதார்த்தமாகவும் மனதைத் தொடும் வகையிலும் உள்ளது. ‘வணங்கி மகிழ்கின்றோம்’ எனும் தொகுப்பின் முதல் கதை தொடங்கி, இதிலுள்ள 11 சிறுகதைகளுமே நாம் அருகிருந்து பார்த்தும், நம் கவனத்தை இதுவரை ஈர்த்திராத மனிதர்களைப் பற்றியே பேசுகின்றன.

காவியுடை உடுத்தி மனிதநேயத்தைச் சொன்ன தவத்திரு குன்றக்குடி அடிகளாரைப் பற்றிய ‘துவராடை’ கதையும், மக்கள் நல மருத்துவராகப் பணியாற்றும் தேவி பியான்ஷாவைப் பற்றிய ‘மாதவம்’ கதையும் கதாசிரியர் குன்றக்குடி சிங்காரவடிவேலின் கதை சொல்லும் உத்திக்கான சான்றாக விளங்கும் கதைகள். - மு.முருகேஷ்

மாதவம் (சிறுகதைகள்)
குன்றக்குடி சிங்காரவடிவேல்

என்.சி.பி.ஹெச். வெளியீடு.
விலை: ரூ.120
பேசி: 044-2625 1968

இந்திய முஸ்லிம்: ஓர் உண்மை வரலாறு: இந்தியா என இப்போது அழைக்கப்படும் இந்தப் பெரும் நிலப்பரப்பின் பெரும் பகுதியை இஸ்லாமிய அரசர்கள் ஆண்டது வரலாறு. அதற்கு அடுத்த பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்த இஸ்லாமியர்களின் வாழ்க்கை நெருக்கடிக்கு உள்ளானது.

1857 முதல் முஸ்லிம் லீக் தொடங்குவதற்கு முந்தைய காலகட்டம் வரை அவர்கள் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் இருந்திருக்கிறார்கள் என்பதை நூல் எடுத்துரைக்கிறது. முதலில் இஸ்லாமியர் கல்வியறிவு பெறுவதைக் குறைக்கும் வகையில் பிரிட்டிஷார் அதில் மாற்றங்களைக் கொண்டு வந்து வெற்றி கண்டதாக இதன் ஆசிரியர் முஹம்மத் நுஃமான் குறிப்பிடுகிறார். ‘வீர சிவாஜி’யை உதாரண புருஷராக முன்வைத்து திலகர் செய்த பிரச்சாரத்தின் பின் உள்ள அரசியலை நுஃமான் அலசியுள்ளார்.

இந்தியாவில் அந்நியர்கள் வந்து புகல்வது சரியில்லை எனச் சொல்லும் இந்த ‘அந்நியர்கள்’ என்பதற்குள் ஐரோப்பியருடன் இஸ்லாமியரும் வரவுவைக்கப்பட்டதையும் நூலாசிரியர் குறிப்பிடுகிறார். முஸ்லிம் லீக் - காங்கிரஸ் ஆகிய இயக்கங்களுக்கு இடையிலான முரண்களைப் பல அத்தியாயங்களில் தெளிவாகச் சான்றுகளுடன் ஆசிரியர் பதிவுசெய்துள்ளார். இந்திய சுதந்திரத்துக்கு முன்னான வரலாற்றை நாம் இதுவரை பார்க்காத மறுபக்கத்தில் நின்று இந்த நூல் பதிவுசெய்கிறது. - ஜெய்

முஸ்லிம் இந்தியா
முஹம்மத் நுஃமான்

அடையாளம் பதிப்பகம்
விலை: ரூ. 450
தொடர்புக்கு: 04332273444

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in