

மேய்ச்சல் ஒரு பழங்காலத் தொழில். பேரரசுகள் மேய்ச்சல் நிலத் தொழிலிலிருந்து விருட்சம் கண்ட வரலாறு இங்குண்டு. இந்த மேய்ச்சல் நிலத் தொழிலை முன்வைத்து ‘கிடை’ காலாண்டிதழ் வெளிவந்துள்ளது. இந்தத் தொழிலின் வரலாறு, அதன் பொருளியல் பண்பாடு சார்ந்த ஆய்வுக் கட்டுரைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.
இந்த இதழில் இடம்பெற்றுள்ள கவிதைகளும் மேய்ச்சல் தொடர்புடையவையே. மேய்ச்சல் நிலம், கீதாரிகளின் சர்வதேச ஆண்டாக 2026ஐ ஐநா அறிவித்துள்ளது பற்றிய கட்டுரை இதழின் முகப்பாக உள்ளது. பாமயனின் ‘பழந்தமிழரின் பெருமைமிகு வேளாண்மை’ கட்டுரையும் விஜய் சர்மாவின் ‘இயற்புற்களும் மேய்ச்சல் நிலங்களும்’ கட்டுரையும் இந்த இதழில் குறிப்பிடத்தக்கவை. - விபின்
கிடை (காலாண்டிதழ்)
கால்நடை வளர்ப்போர் நல நடுவம், காளையார்கோயில்
விலை: ரூ.70
தொடர்புக்கு: 9677517899
அயல்மொழி நூலகம்: வரலாற்றுப் பயணக் கதை
கல்கி கிருஷ்ணமூர்த்தியின் தலைசிறந்த படைப்பான பொன்னியின் செல்வன் நாவலின் ஒரு பகுதியின் ஆங்கில மொழிபெயர்ப்பே ‘First Flood’. ‘பொன்னியின் செல்வன்’ கல்கியில் தொடர்கதையாக வந்தபோது, அது தமிழ் இலக்கியத்தில் இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என யாரும் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.
ஒரு பயணக் கதையினுள், சோழர்களின் வாழ்க்கை அடிப்படையிலான புனைவை இணைக்கும் இந்தத் தமிழ்ப் படைப்பு, தமிழ் இலக்கியத்தின் சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த நாவல் ஒரு தனித்துவமான பாணியைக் கொண்டிருந்தது. ‘கல்கி தமிழ்’ என்று அழைக்கப்படும் பாணி அது. நந்தினி கிருஷ்ணனின் மொழிபெயர்ப்பு குறிப்பிடத்தக்கது. - ஹுசைன்
First Flood (பொன்னியின் செல்வன் 1),
கல்கி
(தமிழில்: நந்தினி கிருஷ்ணன்)
Eka வெளியீடு
பரிமேலழகருக்கு பகுத்தறிவாளரின் மறுப்பு
திராவிட இயக்கத் தலைவர்களில் ஒருவரான நாவலர் இரா.நெடுஞ்செழியன் 1,330 குறள்களுக்கும் உரை எழுதியிருக்கிறார். இந்நூலுக்கு அவர் எழுதியுள்ள விரிவான செறிவுமிக்க முன்னுரையில், திருக்குறள் குறித்தும் அதற்கு எழுதப்பட்ட உரைகள் குறித்தும் பல அரிய தகவல்கள் கிடைக்கின்றன. வள்ளுவர் வலியுறுத்தும் அறமும் வடமொழி இலக்கியங்கள் வலியுறுத்தும் தர்மமும் வெவ்வேறு என்பதை விளக்கியுள்ளார்.
ஆதி பகவன், இறைவன், தெய்வம், ஊழ், பேய் போன்ற சொற்களை வள்ளுவர் எந்தப் பொருளில் பயன்படுத்தியிருக்கிறார் என்பதை விளக்கியுள்ளார். திருக்குறளுக்குப் பரிமேலழகர் எழுதிய உரையின் சிறப்புகளையும் அதன் முக்கியத்துவத்தையும் பதிவுசெய்யும் அதே நேரத்தில், பரிமேலழகர் திருவள்ளுவரின் சிந்தனைக்குப் பொருந்தாத சில கருத்துகளைத் தன் உரையில் சேர்த்திருப்பதாகக் கூறுகிறார் நெடுஞ்செழியன்.
அவற்றை நீக்கிவிட்டுத் திருக்குறளின் மெய்ப்பொருளைக் காண்பதற்கான முயற்சியாக உரை எழுதியதாகக் கூறியுள்ளார். ஒவ்வொரு குறளுக்கும் பொழிப்புரை, கருத்துரை ஆகியவற்றோடு அந்தக் குறளில் இடம்பெற்றிருக்கும் முக்கியமான சொற்களுக்கான பொருளையும் அளித்திருக்கிறார் நாவலர். 1990களின் தொடக்கத்தில் வெளியான இந்நூலை நன்செய் பிரசுரம் சிறப்பான முறையில் மறுபதிப்பு செய்துள்ளது. - நந்தன்
திருக்குறள் தெளிவுரை
டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன்
நன்செய் பிரசுரம், திருத்துறைப்பூண்டி
விலை: ரூ.300
தொடர்புக்கு: 9566331195, 9789381010