நூல் வெளி: கவனம்பெறாத படைப்புகள் மீதான ஆய்வு

நூல் வெளி: கவனம்பெறாத படைப்புகள் மீதான ஆய்வு
Updated on
3 min read

இந்தியாவில் குறிப்பாக 19ஆம் நூற்றாண்டில் பன்னாட்டு மொழியாக அறியப்பட்ட தமிழ்மொழிக்கான வரலாற்றை எழுதும்போது மொழியை மட்டுமே மையப்படுத்தி எழுதப்படுவதால் ஈராயிரம் ஆண்டுகாலப் பரப்பில் வளமான அறிவுச் செயல்பாடுகளைத் தன்னகத்தே கொண்டே தமிழின் பண்பாட்டு நிலைகளை எடுத்துக்காட்டுவதான தன்மையில் குறைபாடு உள்ளது என்ற விவாதத்தை மையப் பொருளாகக் கொண்டுள்ளது ‘இலக்கிய வரலாற்று வரைவியல்’ நூல்.

இதனைக் கருத்தில்கொண்டு இயங்கும்போது வெறுமனே ஓரிரண்டு இலக்கிய, இலக்கணச் (தொல்காப்பியம், சங்க இலக்கியம், சிலப்பதிகாரம்) செல்வங்களைக் கவனத்தில் கொண்டியங்கிய பண்பாட்டு மரபை வெளிப்படுத்தத் தேவையான ஆக்க மரபுகளாகத் திகழக்கூடிய இசை, நாடகம், சோதிடம், தத்துவம், மருத்துவம் ஆகியவற்றோடு கட்டடக்கலையை அடிநாதமாகக் கொண்ட கோயில் வழிபாட்டு மரபுகளை உள்வாங்கும்போதுதான் தமிழின் இலக்கியப் பரப்பையும் ஆழத்தையும் அறிய முடியும் என்கிறது.

கீழைத்தேய நாடுகளில் தமிழகத்தின் எழுத்தாக்கச் செயல்பாடுகள் பரவலாகவே இருந்துள்ளன. சமூகத்தின் எல்லாத் தரப்பினரும் ஆக்கங்களை உருவாக்கியுள்ளனர். இன்ன பொருளைத்தான் பாட வேண்டும் என்ற கடப்பாடுகள் அற்ற, தாம் விரும்பும் மொழியில் விரும்பிய வடிவத்தில் படைத்தளித்துள்ளனர்.

சமயம், சமூகக் குழுக்கள் காரணமாகப் பல்வேறுபட்ட சிந்தனைப் பள்ளிகள் இயங்கிய தமிழகத்தில் மொழி முக்கியக் காரணியாகச் செயல்படவில்லை. பன்மொழிச் சூழலோடுதான் தமிழகம் தொடர்ச்சியான அறிவுப் பரவலைக் கொண்டிருந்தது. முக்கியமாகச் சமயங்களின் வரலாற்றை எழுதும்போது சம்ஸ்கிருதம், பாலி, பிராகிருதத்தை நிராகரித்தால் என்னவாகும்? எனவே, மொழியைப் பொறுத்த அளவில் தமிழ்மொழி பண்பாட்டின், பிரதேசத்தின் எல்லையை வரையறுப்பதாகக் குறிப்பிட முடியாது.

ஏனென்றால் சமயம், வணிகம், அரசியல் உள்ளிட்ட இன்னபிற காரணங்களால் பலவிதப் பண்பாட்டுப் பரவல்கள், கொடுக்கல் வாங்கல்கள் நிறைய உண்டு. எதிர்பார்ப்பை விஞ்சுகின்ற அளவில் தமிழகப் பரப்பில் பாலி, பிராகிருத, சம்ஸ்கிருத, தெலுங்கு ஆக்கங்கள் தமிழர்களால் எழுதப்பட்டுள்ளன.

சீவகன், உதயணன், நரவாணதத்தன் கதைகள் தமிழகச் சமணர்களிடையே பிரபலமானதாக இருந்துள்ளன. மணிப்பிரவாள நடை தமிழர்கள் கண்டது. இவற்றை உள்வாங்காமல் ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு வந்தது எனும் கூற்று அடிபட்டுப் போகிறது என்பதை இந்நூல் தெளிவாக்கியுள்ளது.

மு.கு.ஜகந்நாதராஜாவின் வடமொழி வளத்திற்குத் தமிழரின் பங்கு (1994) எனும் ஆக்கமும் மயிலை சீனி. வேங்கடசாமியின் மறைந்துபோன தமிழ் நூல்கள் (1959), சமணமும் தமிழும் (1954), பௌத்தமும் தமிழும் (1940) ஆகியவை எழுதப்பட்டு, அரை நூற்றாண்டு கடந்தும் அதில் குறிப்பிடும் ஆக்க வடிவங்களைக்கொண்டு தமிழரின் அறிவு/சிந்தனை மரபை விரிவாக்க இத்தனை காலம் வரையில் ஆய்வுலகு எந்தவித முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

மொழி, பண்பாடு, வரலாறு குறித்துப் பேசுவோர் கவனத்திற்கு மேற்கண்ட இருவர் குறிப்பிடும் ஆக்கங்கள் இலக்கிய வரலாறெழுதியலுக்கான தரவுகளில் முக்கியப் பங்கு என்கிறது. தமிழர் இயற்றிய நூல் வகைகள் (ப.91) என்று தருக்க நூல், ஓவிய நூல், கூவ நூல், கோழி நூல் என்று 26 வகையான ஆக்க மரபைக் காணும்போது எழுத்தறிவின் முதிர்ச்சியை உலகின் வேறெந்தப் பகுதியிலும் வேறெவரும் சிந்திக்காத தன்மைகொண்ட வடிவங்கள் கொண்ட வளமான பரப்பாகத் தமிழகம் காணப்படுகிறது.

தமிழகக் கலை மரபு: கலைகளின் பிறப்பிடமாகக் கொண்ட தமிழகத்தில் உருவான நாட்டிய சாத்திரம் சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டதாலும் காஷ்மீரைச் சார்ந்த அபிநவ குப்தர் உரை வரைந்தார் என்ற காரணங்களாலும் அது மேற்கத்திய தன்மை கொண்டதாகவே அறியப்பட்டது.

ஆனால், வேள்வியை அடிப்படையாகக்கொண்ட இறை வழிபாட்டில் நாட்டியத்திற்கான தேவை இல்லை என்றும் உருவ வழிபாட்டை முதன்மைப் படுத்தும் திராவிட மரபிற்கே உரியதான அப்படைப்பு பரத முனிவரால் சிதம்பரத்திலிருந்து எழுதப்பட்டது என்று தக்க சான்றுகளுடன் இந்நூல் நிறுவுகிறது.

வட நாட்டு அறிஞர்களும் அபிநவ குப்தரும் ஏட்டுக் கல்வியாக அதனை அறிந்தார்களே தவிர, நடன மரபுகளை அறிந்திருக்க வாய்ப்பில்லை எனவும் இசை, நடனத்தைப் புரிந்துகொள்வதில் சிக்கல்கள் இருந்தன எனத் துணிகிறது. முக்கியமாக, நாட்டிய சாஸ்திரத்திற்கான மிகுதியான சுவடிகள் தென்புலப் பகுதியிலே கிடைத்துள்ளன.

தமிழின் பன்முகத்தன்மையும் அரச ஆதரவின்மையும்: மேனாட்டு இலக்கியப் பரப்பில் ஒரு காலகட்டத்தில் ஒரேவிதமான இலக்கியங்கள் உருவாகியுள்ளன. அதனை அடிநிலையாகக் கொண்டு நாமும் சங்க இலக்கியம், அற இலக்கியம், பக்தி இலக்கியம் என்ற முறைவைப்பை உருவாக்கி வைத்துள்ளோம்.

ஆனால், தமிழ் நிலப்பரப்பில் ஒரு காலகட்டத்தில் ஒரேவிதமான இலக்கியம் படைக்கப்படாமல் பன்முகப்பட்ட சிந்தனைகளை ஆக்கப்பொருளாகக் கொண்டுள்ளது. வேறெந்த மொழிகளிலும் காணப்படாத உலா, பரணி, பதிகம், குறவஞ்சி இங்கு மட்டுந்தான் உற்பத்தியாகியுள்ளன.

மொழிக்கு அரச ஆதரவில்லாத காரணத்தால்தான் பன்முகத் தன்மைகொண்ட படைப்புகள் வந்துள்ளன. அரச ஆதரவில் இயங்கிய மொழிகளால் அப்படி எழவில்லை என்று மொழியை மதிப்பிடுகின்றது. தமிழகத்தில் பாலி, பிராகிருதம், சம்ஸ்கிருதம், பிற்காலத்தில் தெலுங்கு உள்ளிட்டவை செல்வாக்கு அடைந்தபோதும் அரசியல், சமயம், கோயில் வழிபாடு, கலைக் கூறுகள் உள்ளிட்ட பரந்த தளத்தில் தமிழில்தான் ஆக்கங்கள் வந்துள்ளன.

வழக்காறுகள்: இந்தியாவின் வடபகுதியிலிருந்து வந்த ராமாயண, மகாபாரதக் கதைகள் மக்கள் மயமாகி எழுத்து மரபாக உருப்பெறும்போது கண்ணனின் தெய்வத்தன்மையைக் குறிப்பிடுவதும், அரவான் களப்பலியூட்டும் சடங்கும், ராமன் நவமித் திதியில் பிறந்தான் என்பதற்கான பாடங்கள் தென்புல மரபுகளில் மட்டுந்தான் காண முடிகிறது என்கிறது.

(ப. 74) ராமாயணத்தில் நடந்த இந்த இடைச்செருகல் கும்பகோண சம்ஸ்கிருதப் பண்டிதர்களால் கம்பனிடமிருந்து பெறப்பட்டு சம்ஸ்கிருதத்தில் மொழியாக்கம் செய்யப் பட்டது என்பதன்மூலம் வழக்காறுகளிலிருந்து நூல்கள் உருவாக்கம் பெறுகின்றன என்று அழுத்திக் கூறுகிறது நூல்.

சம்ஸ்கிருத மேலாண்மை: பொதுவாகத் தமிழின் முக்கிய ஆக்கங்கள் சம்ஸ்கிருத மரபிலிருந்து வந்ததை நிராகரித்துள்ளது. தொல்காப்பியம் முதலே அப்படியான அகப்படலில் சிக்கிக்கொள்ள, தமிழுக்கே உரிய யாப்பு, பொருள், பாட்டியல் மரபுகளுக்குச் சம்ஸ்கிருதத்தில் அதற்கான வெளிச்சங்கள் இல்லை என்பதைத் தோலுரித்துக் காட்டுகிறது.

சமூகத்தின் உற்பத்திப் பொருளாகத்தான் இலக்கிய, இலக்கண ஆக்கங்கள் உருப்பெறும்போது, அது அம்மண் சார்ந்த கலைக் கூறுகளுடன் பயணப்படும்போது எழுதப்பட்ட மொழியை வைத்து அதன் பண்பாட்டு மரபை நிராகரிக்க முடியாது. தமிழகத்திலிருந்த கல்வி மரபுகள், மண்ணுக்கான வழக்காறுகள், புழக்கத்திலுள்ள கலைகள் எனும் நீண்ட, அகன்ற பரப்பில் எழுதப்பட்டும் வாய்வழியாகவும் நீண்ட காலமாக இருந்த சிந்தனை மரபுகள் மூலம்தான் ஆக்கங்கள் உருவாகியுள்ளன.

ஆகமம், சிற்பம் உள்ளிட்ட கலைக்கூறுகள் தொடர்ச்சியாகச் சமூகத்தில் செயல்படுவதைச் சுட்டி இப்படியான ஆக்க மரபுகளும் தமிழின் வளமார்ந்த சிந்தனைப் பரப்புகளாகத் திகழ்ந்துள்ளன என இந்நூல் நிறுவுகிறது.

இலக்கிய வரலாற்று வரைவியல்
இரா. சீனிவாசன்

பரிசல் புத்தக நிலையம்
விலை: 380
தொடர்புக்கு: 9382853646, 8825767500

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in