Published : 09 Sep 2017 09:08 AM
Last Updated : 09 Sep 2017 09:08 AM

அறிவியல் அகராதிகள்: காலத்தின் தேவை

ங்கிலத்தில் பொது அகராதிகள் அளவுக்கு அறிவியல் அகராதிகளும் ஏராளமானவை. அந்த மொழியின் வளர்ச்சிக்கு அறிவியல் அகராதிகள் முக்கியமான அடையாளம். ஆங்கிலத்துடன் ஒப்பிடும்போது இந்திய மொழிகளில் அறிவியல் அகராதிகளின் மரபு வேரூன்றவேயில்லை எனும் உண்மை உறைக்கிறது. இந்திய மொழிகளில் தரமான பொது அகராதிகளே குறைவு எனும்போது அறிவியல் அகராதிகளின் நிலை பற்றிச் சொல்லவே வேண்டாம்.

20-ம் நூற்றாண்டு என்பது புதுப் புது அறிவியல் கண்டுபிடிப்புகள், அறிவியல் கோட்பாடுகளின் பொற்காலம். இந்தக் கண்டு பிடிப்புகளும் கோட்பாடுகளும் மொழியிலும் பெரும் தாக்கத்தைச் செலுத்தின. பல்லாயிரக்கணக்கான சொற்களை மொழிக்கு அறிவியல் தந்திருக்கிறது, தந்துகொண்டிருக்கிறது. இதன் பிரதிபலிப்புதான் அறிவியல் அகராதிகள். பெரும்பாலான நவீனக் கண்டுபிடிப்புகள், ஐரோப்பிய, அமெரிக்கக் கண்டங்களில் நிகழ்ந்ததால் அந்தக் கண்டங்களைச் சேர்ந்த மொழிகளில் அறிவியல் ஆழமாக வேரூன்றியது. இந்தக் கண்டங்களைத் தாண்டியும் நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் உலக மக்களின் வாழ்க்கையிலும் மொழிகளிலும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தின.

தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் பலவும் நவீன அறிவியலுக்கு ஈடுகொடுத்துத் தம்மைப் புதுக்கிக்கொண்டன. தமிழைப் பொறுத்தவரை பழந்தமிழ்ச் சொற்களிலிருந்தோ, வடமொழியி லிருந்தோ, அல்லது ஆங்கிலத்திலிருந்து மாற்றம் செய்தோ, ஒலிபெயர்ப்புசெய்தோ கலைச்சொற்கள் உருவாக்கப்பட்டன. எனினும், தமிழ் உள்வாங்கிய அறிவியல் தாக்கத்துக்கு ஈடு கொடுக்கும் அளவில் முறையான, பெரிய அளவிலான அறிவியல் அகராதிகள் மிகவும் குறைவாகவே உருவாகின என்றே சொல்ல வேண்டும். 20-ம் நூற்றாண்டின் முதல் பாதியில் டி.வி.சாம்பசிவப் பிள்ளை உருவாக்கிய ‘மருத்துவ அகராதி’ மிக முக்கியமான பங்களிப்பு. தொடர்ந்து பெரியசாமி தூரன் தொகுத்த ‘கலைக்களஞ்சியம்’ முக்கியமான முயற்சி. மணவை முஸ்தபா கணிசமான அறிவியல் அகராதிகளை உருவாக்கியிருக்கிறார். சுஜாதாவும் கணினி அறிவியலுக்கு ஒரு சிற்றகராதியை உருவாக்கியிருக்கிறார். மேற்கண்ட அறிஞர்களெல்லாம் தற்போதைய அளவுக்குத் தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலத்தில், தங்களுக்குச் சாத்தியமானவற்றை முயன்றுபார்த்தவர்கள். ஆனால், தொழில்நுட்பம் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கும் தற்காலத்தில் அதுபோன்ற முயற்சிகள் இல்லாதது மிகவும் கவலையளிப்பது.

ஒப்பீட்டளவில் அரை நூற்றாண்டுக்கு முந்தைய காலகட்டத்தை விட சுயமான அறிவியல் முயற்சிகள் நம் சமூகத்தில் அதிகம் மேற்கொள்ளப்படும் காலகட்டம் இது. இந்தப் பிரதிபலிப்பை மொழியிலும் காண முடிகிறது. அறிவியலுக்கு உகந்த மொழி தமிழ் என்பதை நம்மால் உணர முடிகிறது. ஆனால், நவீன காலத்தில் தமிழில் உருவாகியிருக்கும் அறிவியல் கலைச் சொற்களின் வளத்தை நாம் போதுமான அளவுக்கு அகராதிகளாகவோ கலைக் களஞ்சியங்களாகவோ தொகுத்துக்கொள்ளாதது துரதிர்ஷ்ட மானது. தமிழறிஞர்கள், மொழியியலாளர்கள், அறிவியலாளர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் என்று எல்லோரும் அக்கறை காட்ட வேண்டிய விஷயம். எல்லாவற்றுக்கும் மேலாக இது அரசுகளின் பிரதான கடமைகளுள் ஒன்றாக இருக்க வேண்டும். தரமான அறிவியல் அகராதிகளை உருவாக்கி, ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் அறிவியல் தமிழை வளர்த்தெடுக்க அரசுதான் பெருமுயற்சி செய்ய வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x