

ஜனவரி மாதம் பொங்கல் விழா நேரத்தில் நடக்கும் சென்னைப் புத்தகக் கண்காட்சி, இந்தியா விலேயே இரண்டாவது பெரிய புத்தகக் கண்காட்சி. தீவுத்திடல் பொருட்காட்சி தவிர்த்து மிக அதிகக் கூட்டம் வரும் நிகழ்வு இதுதான். வாசகர்களை யும், எழுத்தாளர்களையும், விற்பனையா ளர்களையும், பதிப்பாளர்களையும் ஒருங்கே ஈர்க்கும் மிகப் பெரிய பிராண்ட் இது. ஆனால் இது நடத்தப்படும் முறை குறித்தும் கண்காட்சி வளாகத்தில் கிடைக்கும் வசதிகள் குறித்தும் பலருக்கும் பல மனக்குறைகளும் விருப்பங்களும் உள்ளன.
பபாஸி எனப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் நடத்தும் நிகழ்வு இந்தக் கண்காட்சி. இந்த அமைப்பில் தமிழ், ஆங்கிலப் பதிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், விற்பனையாளர்கள் என்று பலர் உறுப்பினர்களாக உள்ளனர். தொடர்ந்து பதிப்புத் துறையில் ஏற்பட்டுவரும் ஏற்ற இறக்கங்கள், கச்சாப் பொருளான தாளின் விலை கடுமையாக ஏறியிருப்பது, தொழில்நுட்ப மாற்றங்களுக்கு இணையாக ஓட வேண்டியிருக்கும் சவால்கள், அரசு நூலக ஆணையில் சிக்கல்கள், பொதுவான சமூக மாற்றங்கள் போன்ற பலவற்றாலும் பபாஸி உறுப்பினர்கள் வெவ்வேறு விதமாகப் பாதிக்கப்பட்டிருக்கி றார்கள். இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதத்திலான ஒரு தொலைநோக்குப் பார்வையை பபாஸி முன்வைக்க வேண்டும்.
சென்னை புத்தகக் கண்காட்சி ஒரேயடியாக மாறி விடப்போவதில்லை. ஆனால் வாசகர்கள், எழுத்தா ளர்கள், விற்பனையாளர்கள், விநியோ கஸ்தர்கள், பதிப்பாளர்கள் என்று அனைத்துப் பயனுரிமையாளர்களும் பயன்பெறும் வகையில் பல மாற்றங்களைப் புகுத்த முடியும்.
முதலாவதாக, கண்காட்சி நடக்கும் இடத்தில் ஏற்படுத்தப்பட வேண்டிய வசதிகள். வேண்டிய அளவு கழிப்பறைகள் - முக்கிய மாகப் பெண்களுக்கு, மாற்றுத் திறனாளிகள் எளிதாக உள்ளே வந்து செல்ல வசதிகள், முதியோர், இலவசக் குடிநீர், குறைந்த விலையில் தரமான உணவு, சாலை யிலிருந்து கண்காட்சி நடக்கும் இடத்துக்கு வந்துசெல்ல இலவச ஊர்தி வசதி என்று பலவற்றையும் வாசகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இவற்றைக் கட்டாயம் செய்துதர முடியும். செலவு கொஞ்சம் அதிகமாகலாம். ஆனால் இவை குறைந்தபட்ச வசதிகள்.
வளாகத்தில் தரமான தரை அமைப்பு, தடுக்காத பாதைகள், கால் வலித்தால் உட்கார்ந்து இளைப்பாற வசதி, காற்றோட்டமான வளாகம், புத்தகங்களையும் பதிப்பகங்களையும் எளிதில் கண்டுபிடிக்க வசதி ஆகியவை அவசியம். அதேபோல் ஸ்டால்களை அமைத்திருப்போருக்குத் தர வேண்டிய குறைந்தபட்ச வசதிகள் மனம் கோணாமல் விரைவாகச் செய்து தரப்பட வேண்டும். புத்தக உரிம விற்பனைக்குத் தேவையான சந்திப்புகளை உருவாக்குவதும் அவசியம்.
சென்னை போன்ற பெரிய நகரில் பலருக்கு இதுகுறித்துத் தெரிவ தில்லை. ஊடகங்களின் துணையுடன் சரியான பொதுஜனத் தொடர்பு, விளம்பரம் ஆகியவை மூலம் இன்னும் பெருவாரியான மக்களைச் சென்றடைய முடியும்.
கண்காட்சி வளாகத்தில் மாலை நேரப் பேச்சுகள் குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. சிலர், அவை காரணமாக விற்பனை சரியாக நடப்பதில்லை என்று நினைக்கின் றனர்.
கண்காட்சி நடக்கும் இடத்தில் எழுத்தாளர்-வாசகர் சந்திப்பு, கலாச்சார நிகழ்வுகள், குறும்படம் திரையிடல் ஆகியவை நடக்க வேண்டும் என்று சிலர் விரும்பு கின்றனர். கேளிக்கை நிகழ்வுகளும் தீவிர கலாச்சார நிகழ்வுகளும் ஒருங்கே அருகருகே நடக்குமாறு செய்வது கடினமான ஒன்றல்ல.
கடை போடுவோரைப் பொருத்த மட்டில் விற்பனை அதிகமாக வேண்டும். வாசகர்களைப் பொருத்தமட்டில் கண்காட்சிக்குக் குடும்பத்தோடு வந்து செல்வது இனிமையான அனுபவமாக இருக்க வேண்டும். நண்பர்கள் கூடும், கொண்டாடும் ஓர் இடமாக இருக்க வேண்டும். இதை சாத்தியப்படுத்த வேண்டுமானால் பபாஸியின் தலைமை தொலைநோக்குக் கொண்டதாக, செயல்திறன் மிக்கதாக இருக்க வேண்டும். புரஃபஷனலிசம் கொண்ட அமைப்பாக பபாஸி மாறினால்தான் இது சாத்தியம்.
பத்ரி சேஷாத்ரி - badri@nhm.in