மகாபாரதத்தைவிட ‘நொய்ய’லின் வாழ்க்கை பெரியது: எழுத்தாளர் தேவிபாரதி நேர்காணல்

மகாபாரதத்தைவிட ‘நொய்ய’லின் வாழ்க்கை பெரியது: எழுத்தாளர் தேவிபாரதி நேர்காணல்

Published on

சமீபத்தில் வெளிவந்து கவனம்பெற்ற நாவல் எழுத்தாளர் தேவிபாரதியின் ‘நொய்யல்’. இந்த நாவல் நொய்யல் கரை மனிதர்களின் ஒரு நூற்றாண்டு வாழ்க்கையைச் சொல்லிச் செல்கிறது. காலமும் மனிதர்களும் மாறுவதற்குச் சாட்சியாக நாவலில் நொய்யல் இருக்கிறது. இந்த நாவல் குறித்து தேவிபாரதியுடனான உரையாடலின் ஒரு பகுதி:

‘நொய்யல்’ நாவல் எழுதக் காரணமான பின்னணி என்ன? - இது 28 வருஷமாக எழுதப்பட்ட நாவல். பல முறை திருத்தி எழுதினேன். இந்த நாவலின் முதல் வடிவம் நூறு பக்கத்துக்கும் கீழ்தான். முதலில் இது காரிச்சி பற்றிய நாவல்தான். தோணை (தோலில் வெள்ளைத் திட்டுகள்) படர்ந்திருக்கும் ஒரு பெண்ணைப் பேருந்தில் பார்த்தேன். ஒருவிதமாக அவள் அழகாக இருந்தாள். ஆனால், ஏன் அவளது தோல் கறுப்பும் வெள்ளையுமாக இருக்கிறது என நினைத்தேன்.

அந்த நினைப்பு வளர்ந்தது. என் பால்ய காலத்தில் ஒரு காரிச்சி இருந்தாள். அவள் என் தாத்தாவின் பண்ணையத்தில் மாடு மேய்த்தவள். அவளுக்குப் பேய் பிடித்ததாகச் சொல்வார்கள். இதுதான் தொடக்கம். அதற்குப் பிறகு இந்த நாவலை எழுதிக்கொண்டும் திருத்திக்கொண்டும் வந்தேன்.

இது படைப்புரீதியாக எனக்குள் ஏற்பட்ட மாற்றம் எனச் சொல்லலாம். கடைசியாக இதை ஆயிரம் பக்கமாக எழுதி, 630ஆகச் சுருக்கியிருக்கிறேன். இன்னும் ‘நொய்யல்’ திருப்தி அளிக்காத படைப்புதான். இன்னும் அதைத் திருத்த வேண்டும். அதைச் செய்துகொண்டிருக்கிறேன்.

காரிச்சிதான் இந்த நாவலின் மையக் கதாபாத்திரமா? - வெள்ளியங்கிரியும் காரிச்சியும் மையக் கதாபாத்திரங்கள். சாமியாத்தா ஒரு முக்கியமான கதாபாத்திரம். காரிச்சியைப் பழி தீர்க்கக்கூடிய வேலம்மாளுக்கும் இந்த நாவலில் முக்கிய இடம் உண்டு. தெய்வமான தேவனாத்தா, காரிச்சியுடன் ஒருத்தியாகும் வெள்ளியங்கிரியின் மனைவியான பார்வதியும் முக்கியக் கதாபாத்திரங்கள்தான். இம்மாதிரி இந்த நாவலில் ஒன்றுக்குள் ஒன்றான பல உயிர்கள் இருக்கின்றன. அந்த உயிர்களின் கதைதான் ‘நொய்யல்’.

இதில் நொய்யல் ஆற்றின் பங்கு? - இந்தக் கதை நொய்யல் ஆற்றைச் சுற்றியே பின்னப்பட்டுள்ளது. நாவலில் இடம்பெறக்கூடிய பறவைகள் முக்கியம். பாம்புகள், மீன்கள், பாறைகள், ஆடுகள், மாடுகள் இவை எல்லாம் முக்கியம். இந்த நாவலில் அவ்வளவு உயிர்கள் இருக்கின்றன. இதில் இடம்பெற்றுள்ள அளவுக்கு வேறு எந்த நாவலிலாவது உயிர்கள் இடம்பெற்றதுண்டா என்பது கேள்விக்கு உரியது.

இந்த உயிர்களின் இயல்புகளை மனித மனச் செயல்பாட்டுடன் தொடர்புபடுத்துகிறீர்களா? - நாவலுடன் சேர்ந்து வாழ்ந்து மடிந்த உயிர்கள் இவை. பாம்பு, மீன் ஆகியவற்றின் தனித் தனிச் செயல்பாடுகளும் இங்கு முக்கியம். இவை எல்லாம் மனித மனச் செயல்பாடுகளுடன் பொருந்தக்கூடியவை. காற்றும் மழையும் புயலும் இப்படித்தான் கதைக்குள் வருகின்றன.

தெய்வமான தேவனாத்தாள் கதாபாத்திரம் குறித்து... தேவனாத்தாள் எங்கள் அம்மாவின் ஊரின் தெய்வம். ஒருநாள் எங்கள் ஊருக்குள் வந்து ஆடிவிட்டுப் போயிருக்கிறாள். புயல் காற்றாகவா? இல்லை, நேரில் வந்து ஆடியதாகச் சொல்வார்கள். அவள் ஆடிவிட்டுப் போன பிறகு பெரும் காற்றும் இடைவிடாத மழையும் பெய்ததாம். அதற்குப் பிறகு தனக்கொரு இருப்பிடம் கிடையாது. ‘நான் வெயிலிலும் மழையிலும் காய்கிறேன்’ எனச் சொன்னாள்.

இதனால் அவளுக்கு ஒரு கோயில் கட்டுகிறார்கள். இது தெய்வத்தின் அம்சம் என்று வைத்துக்கொள்ளலாம். ஆனால், இதெல்லாம் புனைவுக்கு உரிய விஷயங்கள்தாம். தேவனாத்தாள், வண்ணார் வீட்டுப் பெண் எனச் சொல்கிறார்கள். அவள் காதலனால் கைவிடப்படுகிறாள். ஊரார் விலக்கிவைக்கிறார்கள். நொய்யலில் குதித்து உயிரை மாய்த்துக்கொள்கிறாள். காரிச்சியின் கதையாக வருவது இதுதான்.

குமரப்பப் பண்டிதன் கதாபாத்திரம் வழி அந்தக் காலகட்ட சமூக ஒடுக்குமுறை பற்றியும் இந்த நாவல் பேசியுள்ளது... பிரிட்டிஷ் காலத்தில் ராஜாக்கள் செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தார்கள். குமரப்பப் பண்டிதன் கதாபாத்திரம் கல்விபெற்றதாக இருந்தும் நாவிதர் சமூகத்தவர் என்பதால் இந்த ராஜாக்களில் ஒருவரால் அவமரியாதைக்கு உள்ளாக்கப்படுகிறார்.

அதை விரிவாகவே சொல்லியிருக்கிறேன். இந்த நாவலில் வரும் மன்றாடியார்கள் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தொடங்கி காங்கிரஸ் ஆட்சிக் காலம் வரை செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தனர். திமுக, அதிமுக கட்சிகள் ஆட்சிக்கு வந்த பிறகுதான் இது குறைந்தது.

இதில் நாட்டார் கதைகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன... ருக்குமணிதான் இந்தக் கதைகளைச் சொல்வாள். அவள் தன் கதைகளையும் சேர்த்துச் சொல்வாள். அந்தக் கதைகளில் காகங்கள், குருவிகள் இடம்பெறுகின்றன. இந்தக் கதைகள் எல்லாம் ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள கதைகள்தாம். ஆனால், இந்தக் கதைகளுக்கு நாவல் புது அர்த்தத்தைத் தருகிறது.

உதாரணம் சொல்ல முடியுமா? - கிணறு வெட்டுதல் சார்ந்து உருவான கதை. நொய்யல் வறண்டு போகிறது. அதிலிருந்த வாளை மீன் செத்துப் போகிறது. பெரிய பஞ்சம். யாருக்கும் என்ன செய்வது எனத் தெரியவில்லை. குமரப்பப் பண்டிதன் நிச்சயமாக இதில் ஊற்று கிடைக்கும் என்கிறான். அப்போது அவனுக்கு 107 வயது. ஆனால், ஊற்று கிடைக்கவில்லை.

ஊர்க்காரர்கள், “ஏண்டா நாசுவா வெட்னா தண்ணீ கிடைக்கும்னு சொன்னீயே. கிடைக்கலயே. உன்னயத்தான் வெட்டி ஆத்துல வுடணும்” எனச் சொல்கிறார்கள். பண்டிதனே வெகு ஆழத்திற்குப் போய் கடப்பாரையால் தோண்டுவான். ஊற்றுப் பொத்துக்கொண்டுவரும். அதே நேரத்தில் அதில் வாழக்கூடிய இரண்டு பாம்புகள் வெளி வரும். அவை மூப்பன்களைக் குறிவைத்துக் கொல்லக்கூடியவை. குமரப்பப் பண்டிதன் அப்படித்தான் இறப்பார். இது தொடரும் ஒரு கதை.

ஒட்டுமொத்தமாக இந்த நாவலின் மூலம் எதைச் சொல்ல வருகிறது? - இந்த நாவலில் நூறு வருஷ வாழ்க்கை இருக்கிறது. மூன்று தலைமுறைகள் வருகின்றன. தமிழ் வாழ்க்கை சார்ந்த ஒரு புனைவு எனச் சொல்லலாம். இதில் மனித வாழ்க்கையின் பல அம்சங்கள் சொல்லப்பட்டுள்ளன. சமூக ஒடுக்குமுறைகள் இருக்கின்றன. இந்த நாவல் பன்முகத்தன்மை கொண்டது. மகாபாரதத்தையும் ராமாயணத்தையும்விட இந்த நாவலின் வாழ்க்கை பெரியது.

நொய்யல்
தேவிபாரதி

தன்னறம்
விலை: ரூ.800
தொடர்புக்கு: 9965689020

- சந்திப்பு: மண்குதிரை | தொடர்புக்கு: jeyakumar.r@hindutamil.co.in

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in