

சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், கனடா, டென்மார்க், பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில், தமிழ்க் குரல் ஒலிக்கும், தமிழ் பண்பாட்டின் அடையாளம் பதிவாகும் என்று சொல்லியிருந்தால் யாரும் நம்பியிருக்க மாட்டார்கள்; இந்த அயல்நாடுகளிலிருந்து தேவாரம், திருவாசகப் பாடல்கள் வானொலியில் கேட்கும் என்றெல்லாம் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்.
கனடாவில் தமிழ் வாழ்வு: இலங்கையில் இனக் கலவரம் 1915இல் தொடங்கியது என ஒரு கருத்து இருந்தாலும், ஆங்கிலேயரிடமிருந்து விடுதலைபெற்ற பின்பே தமிழ் - சிங்களக் கலவரம் தீவிரமானது. 1983க்குப் பின் அது உள்நாட்டுப் போராக உருவெடுத்தது. இதன் பின்னர் ஈழத் தமிழர்கள் புலம்பெயர வேண்டிய சூழ்நிலை உருவானது.
1970இல் ஈழத்தமிழரின் கனடா குடியேற்றம் ஆரம்பித்தாலும் 1983க்குப் பின்னர்தான் அங்கு தமிழ் வளர்ச்சியின் வேகம் அதிகரித்தது. ஒரு வகையில் கனடா குடியேற்ற மக்களின் இலக்கியம், பண்பாடு, கலை, சமயம் ஆகியவை காலூன்றியது இக்காலத்துக்குப் பின்னர்தான்.
பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பியின் ‘கனடாவில் இலங்கைத் தமிழரின் வாழ்வும் வரலாறும்’ என்கிற நூல், தமிழ் வளர்ச்சியை 1983 முதல் 2000 வரை முதல் கட்டமாகவும், 2017 வரை இரண்டாம் காலகட்டமாகவும் கொள்கிறது.
முதல் காலகட்டப் படைப்புகளில் இலங்கைப் போராட்டம், விடுதலை, வாழ்வு ஆகியவை முன்நிறுத்தப்பட்டன. இந்தக் காலகட்டத்தில் புலம்பெயர்ந்த இலங்கையரே பெருமளவில் எழுதினர். இரண்டாம் காலகட்டத்தில் பொதுவான பிரச்சினைகள் முன்நிறுத்தப்பட்டன. இந்தக் காலத்தில் இலங்கையர் அல்லாதவர்களும் எழுதினர். 1983–2022 காலகட்டத்தில் இங்கிருந்து 600க்கும் மேற்பட்ட நூல்கள் வந்ததாக பாலசுந்தரம் குறிப்பிடுகிறார்.
மூன்று பகுதிகள்: பாலசுந்தரம் கனடாவில் வாழும் ஈழத்து மக்களின் தமிழ்ப் பணியை இலக்கியப் பணி, தமிழ் மொழி பேணல், கலைப் பண்பாட்டைப் பேணல் ஆகிய மூன்று பகுதிகளாகப் பகுத்துக்கொண்டு விளக்குகிறார். 1983க்குப் பின் கனடாவுக்கு ஈழத் தமிழர்களின் குடிப்பெயர்ச்சி அதிகரித்தாலும் தமிழின் வளர்ச்சி இரண்டாயிரத்துக்குப் பின்னர்தான் அதிகமானதாகக் கூறுகிறார். 2016 கணக்குப்படி, கனடாவில் இரண்டரை லட்சம் தமிழர்கள் வாழ்கின்றனர் என்கிறார் பாலசுந்தரம்.
ஊடகங்கள்: கனடாத் தமிழர்களின் தமிழ் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் அங்கே உள்ள தமிழ் ஊடகங்கள் ஒரு காரணம். வார-மாத இலக்கிய இதழ்கள், இணையம், ஃபேஸ்புக், வலைப்பூக்கள் ஆகியன குறிப்பிடத்தகுந்தன. இப்போது டொரன்டோவிலிருந்து ‘காலம்’, ‘உயிர் எழுத்து’, ‘சரி நிகர்’, ‘தேடல்’, ‘ழகரம்’, ‘நான்காவது பரிமாணம்’, ‘உரையாடல்’ எனப் பத்துக்கும் மேற்பட்ட இதழ்கள் வருகின்றன என்கிறார் பாலசுந்தரம்.
கனடாவில் எழுத்துச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் உண்டு. ஆரம்ப காலத்தில் வந்த இதழ்களில் வெளியான கவிதைகள், கதைகளில் ஈழ விடுதலைப் பற்றிய செய்திகள் வெளிப்படையாகப் பதிவுசெய்யப்பட்டிருந்தன. 2000க்குப் பின்னர் இந்த உள்ளடக்கத்தில் மாற்றம் ஏற்பட்டது.
கனடாவின் தமிழ் வானொலி, தொலைக்காட்சி ஆகியவையும் இதில் முக்கியப் பங்காற்றின. இவற்றில் சில 24 மணிநேரமும் இயங்குகின்றன. தமிழ் மொழியின் உரையாடல் வழக்காறுகள் காதுகளில் கேட்கும்படியான சூழ்நிலையை இவை உருவாக்கின.
பனிவளர் இலக்கியம்: கனடா இலக்கியம் தமிழ் மரபை அப்படியே பின்பற்றவில்லை என்று கூறும் எஸ்.பொன்னுத்துரை, “பனைவளர் நாட்டிலிருந்து பனிவளர் நாட்டுக்கு இடம்பெயர்ந்த இலக்கியமாகக் கனடா இலக்கியங்கள் ஆகிவிட்டன” என்று குறிப்பிடுகிறார். தமிழ்நாட்டில் இல்லாத பொருள்மரபு கனடா தமிழ்ப் படைப்புகளில் உண்டு. இங்குள்ள படைப்பாளிகளில் அ.முத்துலிங்கம், தேவகாந்தன், டானியல், ஜீவா, செழியன் போன்றோர் நன்கு அறியப்பட்டவர்கள்.
கணினித் தமிழ்: கணினித் தமிழ் வளர்ச்சியில் புலம்பெயர்ந்த கனடாத் தமிழர்களுக்குப் பெரும் பங்கு உண்டு. 1980ஆம் ஆண்டிலேயே கணினித் தமிழ் வடிவ உருவாக்கத்தில் புலம்பெயர் கனடாத் தமிழர் ஈடுபட ஆரம்பித்தனர். இவர்களில் குறிப்பிடத்தகுந்தவர் சசிகரன்.
கணினி வழித் தமிழ் கற்பதற்காகக் கணினி மென்பொருள் ஒன்று உருவாக்கப்பட்டது. இது கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள புலம்பெயர் மக்களுக்கு உதவியது. 2006இல் கனடா பண்பாட்டுக்கு ஏற்ப ஒரு அகரமுதலியும் தொகுக்கப்பட்டது.
கலையும் பண்பாடும்: புலம்பெயர் இலங்கை மக்கள், தங்கள் கலை-பண்பாடு விஷயங்களைத் தொடர்ந்து தக்கவைப்பதில் ஆர்வம் காட்டுவதுடன், அதற்கான முயற்சிகளில் மும்முரம் காட்டுகின்றனர். பரதம், இசைக்கலை போன்றவற்றில் பயிற்சியளிக்கும் செயல்பாடு மேலை நாடுகளில் ஏற்கெனவே இருந்தாலும் புலம்பெயர் மக்கள் இந்தச் செயல்பாட்டைத் தீவிரப்படுத்தினர் என்பதை மறுக்க முடியாது.
ஜனவரி மாதத்தைத் தமிழ் மரபு மாதம் என அறிவிக்க வேண்டும் என்னும் ஈழத் தமிழர்களின் கோரிக்கையைக் கனடா அரசு ஒப்புக்கொண்டு சட்டமாக்கி இருக்கிறது. இது தமிழ்ப் பண்பாட்டின் கூறுகளைப் புதுப்பிக்க உதவியிருக்கிறது. கோவில் விழாக்களையும் தமிழ்ப் பண்பாட்டு விழாக்களையும் நடத்துவதற்கு இந்தச் சட்டம் பெரும் துணையானது. ஈழம், தமிழ்நாடு இரண்டிலும் உள்ள கலைஞர்கள் கனடா சென்று நிகழ்ச்சி நடத்துகின்றனர்.
பள்ளிகளின் தொண்டு: கனடாவில் தமிழ் மாணவர் தமிழ் படிப்பதற்குரிய சூழலைப் புலம்பெயர் மக்கள்தான் உருவாக்கினர். 1978இல் ‘நார்த் யோக்’ கல்விச் சபைப் பள்ளியில் தமிழ் கற்பிக்கப்பட்டது. ஒன்ராறினோவில் அரசுப் பள்ளிகளிலும் கத்தோலிக்கப் பள்ளிகளிலும் மூன்றாம் வகுப்புவரை தமிழ் கற்பிக்க வேண்டிய நிலை உருவானது. இதற்கு வெற்றியும் கிடைத்தது. மொன்றியல், ஒட்டாவா எட்மன்றன் கல்ஹரி, வான்கூவர் என சில நகரங்களில் தமிழ் படிப்பதற்குரிய வசதி உள்ளது என்கிறார் பாலசுந்தரம்.
புலம்பெயர் மக்களின் மூன்று நிலைகள்: வி.ஜீவகுமாரன் என்னும் ஈழத்து தமிழ் ஆய்வாளர் தன் கட்டுரை ஒன்றில் புலம்பெயர் மக்களின் இருப்பை மூன்று நிலைகளில் காட்டுகிறார்: 1. தன் அடையாளங்களை எந்த விதத்திலும் இழக்காமல் குடிபுகுந்த சமுதாயத்துடன் எல்லாவிதத்திலும் ஒட்டாமல் தனித்து ஒதுங்கி வாழ்வது; 2. தன் அடையாளத்தை இழக்காமல் சிலவற்றை வைத்துக்கொண்டு புகுந்த சமூகத்துடன் இணங்கி வாழ்தல்; 3. தன் அடையாளங்களை முற்றாக இழந்து, தான் புகுந்த சமூகத்துடன் வாழ்தல்.
ஈழத்தமிழர்கள் முதல் இரண்டு வகையினர் இவர்களின் இலக்கியம் பண்பாடு நீட்சி என்பது தமிழ் பண்பாட்டுடன் தொடர்புடையது. இன்று இதைத் தொடர்ந்து தக்கவைத்து வருபவர்கள் இவர்கள் என்பதும் பெருமை தரும் விஷயம்.
கனடாத் தமிழர்களின் தமிழ் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் அங்கே உள்ள தமிழ் ஊடகங்கள் ஒரு காரணம். வார-மாத இலக்கிய இதழ்கள், இணையம், ஃபேஸ்புக், வலைப்பூக்கள் ஆகியன குறிப்பிடத்தகுந்தன.
கனடாவில் இலங்கைத் தமிழரின் வாழ்வும் வரலாறும்
பாலசுந்தரம் இளையதம்பி
சுவாமி விபுலாநந்தர் தமிழியல் ஆய்வு மையம் வெளியீடு
தொடர்புக்கு: shorturl.at/vyU69
- அ.கா.பெருமாள் | நாட்டாரியல் ஆய்வாளர்; தொடர்புக்கு: perumalfolk@yahoo.com