நூல் வெளி | அம்பேத்கர்: அறிவுப் பயணத்தில் புதிய திசைகள்

நூல் வெளி | அம்பேத்கர்: அறிவுப் பயணத்தில் புதிய திசைகள்
Updated on
3 min read

அம்பேத்கர் வாழ்ந்த காலத்திலும், அவர் காலமான 1956க்குப் பிறகு 1990கள் வரையிலும்கூட—அம்பேத்கரின் இயக்கத்தைப் பற்றி 1969இல் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்ட அமெரிக்கரான எலினார் ஸெல்லியட்டைத் தவிர - இந்தியக் கல்வியாளர்களோ, பிற நாடுகளின் ஆய்வாளர்களோ அம்பேத்கரின் எழுத்துகள்மீது பெரிய கவனம் கொண்டிருக்கவில்லை.

இந்தச் சூழலில்தான், 1990 ஏப்ரல் 14 அன்று அம்பேத்கருக்கு ‘பாரத ரத்னா’ அறிவிக்கப்பட்டது; 1991இல் அம்பேத்கர் நூற்றாண்டும் தொடங்கியது. மற்றொருபுறம், மண்டல் குழு பரிந்துரைகளை வி.பி.சிங் அரசாங்கம் நடைமுறைப்படுத்தியது, உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜின் எழுச்சி என 1990களின் தொடக்கத்தில் இந்திய அரசியலின் நிகழ்வுகளும், அம்பேத்கரின் மீள்வருகைக்கு வழியமைத்து, அவரது எழுத்துகள் மீதான கவனம் கூர்மையடைந்தது.

அம்பேத்கரின் சிந்தனை: ஜனநாயகம், காலனியம், தேசியம், பௌத்தம், மார்க்சியம், பிராமணத் தத்துவம், சிறுபான்மையினர் உரிமை, இனவாதம், உலகளாவிய பிரச்சினைகள் என அம்பேத்கரின் சிந்தனை பயணித்த பாதையை ஆய்வாளர்கள் வரைபடமாக்க முனைந்தனர்.

அந்த வகையில், டபிள்யூ.என்.குபேர் (1973), எம்.எஸ்.கோர் (1993) ஆகியோர் எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல்கள் அம்பேத்கரின் சிந்தனையைத் தொடரும் பணியை முன்னெடுத்தன. மற்றொருபுறம், அம்பேத்கர் வாசித்த நூல்கள் வழி, அவரது சிந்தனைப் பாதையைப் படம்பிடிக்க குயின் (2004), ஸ்ட்ரௌடு (2017), கீதா (2017) ஆகியோர் தலைப்பட்டனர்.

ஆனால், அம்பேத்கருக்குச் சொந்தமான நூல்களோ, அவர் ஆழ்ந்து வாசித்தவை எவை என்பதோ முழுமையாகப் பட்டியலிடப்படவில்லை என்பதுடன் பௌத்தம், இந்து மதம், இந்தியத் தத்துவமும் பண்பாடும், மேற்கத்திய தத்துவம், அரசமைப்புச் சட்டம், அரசியல் கோட்பாடு, கம்யூனிசம், அறம், மதம், வரலாறு எனப் பரந்துபட்ட அவரது வாசிப்பு ஆர்வத்தின் பின்னணியிலிருந்தும் அவரது சிந்தனைப் பயணத்தைப் படியெடுப்பதென்பது கிட்டத்தட்ட சாத்தியமில்லாத ஒன்றுதான்.

இத்தகைய பின்னணியில்தான், அம்பேத்கரின் சிந்தனை என்பது என்ன; அது ஆகிவந்தது எப்படி என்கிற அசாத்தியமான கேள்விக்கு, ‘A Part Apart: The Life and Thought of B.R. Ambedkar’ என்கிற நூலில் விடைதேடுகிறார் அசோக் கோபால்.

‘நான் இந்துவாகச் சாக மாட்டேன்,’ என 1935 அக்டோபர் 13 அன்று யேவ்லாவில் ஆற்றிய உரையிலிருந்து, 1956 அக்டோபர் 14 அன்று பௌத்தத்துக்கு மாறிய நிலைவரை அவரது சிந்தனை எப்படிப் பயணித்துவந்திருக்கிறது என்பது அம்பேத்கரின் சிந்தனை பற்றிய ஆய்வின் ஆதார கேள்வியாக அமைகிறது; ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய நெறிகளின் அடிப்படையில் சாதியை அழித்து ஜனநாயகச் சமூகத்தைக் கட்டமைப்பது எப்படி?’ என்கிற அவரது விசாரணையும் இந்த ஆய்வில் முக்கிய அம்சமாக உள்ளது.

அசோக் கோபால்
அசோக் கோபால்

அம்பேத்கரின் பௌத்தம்: ஆங்கிலத்தில் இயங்கும் அம்பேத்கரிய ஆய்வாளர்கள், அம்பேத்கர் பௌத்தத்தைத் தழுவ 1950களில்தான் முடிவெடுத்ததாக அனுமானிக்கின்றனர். ஆனால், அம்பேத்கரின் மராத்திய எழுத்துகளும் உரைகளும் அவர் அந்த முடிவை 1942 காலகட்டத்திலேயே எடுத்திருப்பதை வெளிப்படுத்துவதாக அசோக் கோபால் முன்வைக்கிறார்; 1940களிலேயே பௌத்த எழுத்துகளில் தன்னை அமிழ்த்திக்கொண்ட அம்பேத்கர், இந்தியாவில் ஜனநாயகத்தை நிலைநாட்ட புத்தரின் மதம் அவசியம் என்பதை உணர்ந்தார்.

பௌத்தம் பற்றிய பல்வேறு வாசிப்புகளை அக்காலகட்டத்தில் அம்பேத்கர் தொடர்ச்சியாக மேற்கொண்டிருந்தாலும், சமூக ஜனநாயகத்தை நிறுவ பௌத்தம் அத்தியாவசியம் என்பது அவரது அசலான சிந்தனை என்பது அசோக் கோபாலின் வாதம். ஜனநாயகம் என்பது அரசு அமைப்பின் வடிவமாக இல்லாமல், சமூக அமைப்பாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய நெறிகளின் அடிப்படையில் சமூகம் அமைய வேண்டும் என அம்பேத்கர் விரும்பினார்.

அரசியல், சமூகம் ஆகிய கூறுகளைக் கொண்டு கடவுளும் சாதியும் அற்ற மதமாக அவர் பௌத்தத்தைப் பார்த்தார். நவீன உலகுக்கும் நவீன ஜனநாயக அரசுக்கும் பௌத்தம் எப்படிப் பொருந்துகிறது என்பதை எடுத்துக்காட்ட, ‘புத்தமும் அவரது தம்மமும்’ என்கிற நூலை அம்பேத்கர் எழுதினார். இந்நூலின் வெளியிடப்படாத முகவுரையில், ‘பௌத்தம் பற்றிய முறையான புரிதலுக்கு’ மேலும் இரண்டு நூல்கள் தேவை எனக் குறிப்பிட்டிருந்தாலும், காலம் அதற்கு அவரை அனுமதிக்கவில்லை.

அம்பேத்கர் சிந்தனையாளரா? - சிந்தனையாளர் என வழங்கும் பொருளில் அம்பேத்கரை ஒரு சிந்தனையாளராக அடையாளப்படுத்த முடியாது; நம் காலத்தின் பெரும்பான்மையான சிந்தனையாளர்களைப் போல் அவர் ஓர் கல்வியாளரும் அல்லர். அவர் அடிப்படையில் ஒரு வழக்கறிஞர்.

தீவிரமான அரசியல் பற்றிய சிந்தனைக் கொண்டவரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தலைவராகவும் பிரதிநிதியாகவும் அவர் இருந்தார். அவரது வாழ்க்கை நெடுகிலும் அவர் எதிர்கொண்டவற்றுக்கு அவர் ஆற்றிய எதிர்வினையிலிருந்து அவரது சிந்தனை உருவாகிவந்திருக்கிறது. அரசியலில் அவர் எடுத்துக்கொண்ட பொறுப்பின் அழுத்தமும், நலிந்துகொண்டிருந்த அவரது உடல்நலமும் அவர் சிந்திக்க விரும்பிய விஷயங்களைப் பின்தொடர அவரை அனுமதிக்கவில்லை.

அவர் தன் நிலையிலிருந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைகளை உறுதிப்படுத்துவதில் கவனம் கொண்டிருந்தார்; ஒடுக்கப்பட்ட மக்களை நோக்கிய பிற அரசியல் தலைவரின் அணுகுமுறையின் காரணமாக, அம்மக்களின் நலனையே அவர் முதன்மையான குறிக்கோளாகக் கொண்டிருந்தார்.

எனவே, அவர் சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவில்லை: ‘சுயராஜ்ஜியம் யாருக்கு, யாரிடம் இருந்து?’ என்பதே அவரது கேள்வியாக இருந்தது. “நான் முழுமையின் ஒரு பகுதி அல்ல; நானே ஒரு பிரிவாக இருக்கிறேன்,” [I am not a part of the whole. I am a part apart.] என்றும் அவர் அறிவித்தார்; அதுவே இந்நூலின் தலைப்பும் ஆனது.

தொகுத்தலின் விடுபடல்கள்: காந்தியைப் போல் அம்பேத்கர் தனக்குத் தனிச் செயலரோ உதவியாளரோ வைத்துக்கொள்ளவில்லை என்பதால், அவரது எழுத்துகள், உரைகள் உள்ளிட்டவை முறையாகப் பராமரிக்கப்படவில்லை. முக்கியத்துவம் வாய்ந்த கைப்பிரதிகள், உரை வடிவங்கள் நிரந்தரமாகவே காணாமல்போய்விட்டன.

இதுவரை பதிப்பிக்கப்பட்டிருக்கும் அம்பேத்கர் தொகுதிகளும் பல்வேறு சிக்கல்களைக் கொண்டிருப்பதாக அசோக் கோபால் சுட்டிக்காட்டுகிறார். தமிழ்நாடு அரசு அம்பேத்கரின் எழுத்துகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது.

முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பணியில், அசோக் கோபால் போன்ற ஆய்வாளர்களின் ஆலோசனையை அரசு எடுத்துக்கொள்வது திட்டத்தின் நோக்கத்துக்கு நிறைவு சேர்க்கும். மூத்த சிந்தனையாளரான எஸ்.வி.ராஜதுரையும் இதுகுறித்த ஆலோசனைகளைக் கட்டுரை ஒன்றில் விரிவாக எழுதியுள்ளார்.

சமகாலத்தில் அம்பேத்கரிய ஆய்வாளர்களில் பெரும்பான்மையானோர், ஆங்கிலத்தில் உள்ளவற்றை அடிப்படையாகக் கொண்டே ஆய்வுசெய்யும் நிலையில், இதுவரை வெளிவராத அம்பேத்கரின் ஆங்கிலம், மராத்தி எழுத்து-பேச்சுகளை அடிப்படையாகக் கொண்டு இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது.

அம்பேத்கரின் சிந்தனைப் பரிணாமத்தை, அதன் உள்ளார்ந்த பார்வையை, அவரது வாழ்வோடும் பணியோடும் பொருத்தி வரைபடமாக்க முயலும் இந்நூல், அம்பேத்கரின் அறிவுப் பயணத்தில் புதிய திசைகளைத் துலக்கப்படுத்துகிறது.

- தொடர்புக்கு: arunprasath.s@hindutamil.co.in

A Part Apart: The Life and Thought of B.R. B.R. Ambedkar
Ashok Gopa
l
Ashok Gopal
வெளியீடு: Navayana
தொடர்புக்கு: +91 11 26494795
விலை: ரூ.999

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in