

சிறந்த கல்வியாளர், பொருளாதார வல்லுநர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் (MIDS) நிறுவனர், யுனெஸ்கோ துணை இயக்குநர், தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழு உறுப்பினர், சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், மாநிலங்களவை உறுப்பினர் போன்ற அடுக்கடுக்கான சிறப்புகள் கொண்ட மால்கம் ஆதிசேசய்யாவின் கல்வி, பொருளாதாரப் பங்களிப்புகள் அறியப்பட்ட அளவு அவரின் தமிழ்ப் பங்களிப்புகள் அறியப்படவில்லை.
23 ஆண்டுகள் யுனெஸ்கோவில் பணியாற்றிய காலத்தில், அதன் வழியாகத் தமிழ் மொழிக்கும் தமிழ்க் கலை-பண்பாட்டு வளர்ச்சிக்கும் அவர் ஆற்றிய பங்கை ஆவணப்படுத்தும் நோக்கில் ஆ.அறிவழகன் எழுதியிருக்கும் நூல், ‘அறிவுரு தமிழ்த் தூதர் ஆதிசேசய்யா’. தமிழ் மொழியின் சிறப்பை உலகெங்கும் அறிவிக்கும் வகையில், ஆதிசேசய்யா ஆற்றிய மூன்று பெரும் பணிகளைக் குறித்து இந்நூலில் விவரித்திருக்கிறார் அறிவழகன்.
யுனெஸ்கோ உறுப்பு நாடுகளின் கலை, அறிவியல், பண்பாட்டுச் செய்திகளை உலக நாடுகளுக்குத் தெரிவிக்கும் பொருட்டு 1948இல் ‘யுனெஸ்கோ கூரியர்’ மாத இதழ் தொடங்கப்பட்டது. பிரெஞ்சு, ஸ்பானிஷ் உள்ளிட்ட எட்டு உலக மொழிகளில் மட்டும் வெளிவந்த இந்த இதழின் தமிழ்ப் பதிப்பைச் சாத்தியப்படுத்த, ஆதிசேசய்யா மேற்கொண்ட முயற்சிகளை இந்நூல் விரிவாகப் பேசுகிறது.
ஜூலை 1967 முதல் ‘யுனெஸ்கோ கூரிய’ரின் தமிழ்ப் பதிப்பு, ‘உலகைக் காட்டும் பலகணி’ என்கிற அடைமொழியோடு வெளிவரத் தொடங்கியது. ‘யுனெஸ்கோ கூரியர்’ தமிழ்ப் பதிப்பைக் கொண்டுவர அண்ணா வேண்டுகோள் வைத்தது, தமிழில் கொண்டுவர முயன்ற நேரத்தில் இந்தியில்தான் கொண்டுவர வேண்டும் என்ற மத்திய அரசின் இடையீடு, தமிழ் இதழ் வெளியீட்டு அலுவலகம் இயங்கிய இடமான சென்னைப் பல்கலைக்கழகச் சேவைக் கட்டிடம், அதன் அமைவாக்கத்திலும் ஆதிசேசய்யாவின் பங்களிப்பு என்று வேறு பல ஆய்வுகளுக்கும் திறப்பாக அமையும் தொடர்புடைய பல்வேறு தகவல்களையும் இந்நூல் தருகிறது.
2010இல் கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டை ஒட்டி அன்றைய முதலமைச்சர் மு.கருணாநிதி எழுதிய கட்டுரை, ‘தி இந்து’ நாளிதழில் வெளியானது. ‘யுனெஸ்கோ கூரியர்’ தமிழ் இதழ் பற்றியும் அதில் எழுதியிருந்த அவர், அந்த இதழோடு தொடர்புப்படுத்தி இதழின் ஆசிரியராக இருந்த மணவை முஸ்தபா பெயரை மட்டும் குறிப்பிட்டு, ஆதிசேசய்யாவைக் குறிப்பிடாமல் விட்டதை வருத்தத்துடன் ஆசிரியர் பதிவுசெய்திருக்கிறார்.
உலகத் தமிழ் அறிஞர்களையும் ஆய்வாளர் களையும் ஒன்றிணைக்கவும் தமிழாய்வுகளை உலகத் தரத்துக்கு உயர்த்தவும் இரண்டாண்டுக்கு ஒருமுறை என உலகத் தமிழ் மாநாடுகள் 1966 முதல் நடத்தப்பெற்று வருகின்றன. தமிழ் பேசும் மக்கள் வாழும் மலேசியாவில் முதல் மாநாடும் சென்னையில் இரண்டாம் மாநாடும் நடந்ததில் வியப்பில்லை.
ஆனால், தமிழ் பேசும் மக்கள் அதிகம் வசிக்காத பாரிஸில் மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது. அப்போது யுனெஸ்கோவின் பொறுப்பு இயக்குநராக இருந்த ஆதிசேசய்யாவே இம்மாநாடு அங்கு நடைபெற உறுதுணையாக இருந்தவர் என்பதைத் தக்கச் சான்றுகளுடன் விளக்குகிறார் ஆசிரியர்.
மேலும் அம்மாநாட்டில் தொடக்க உரையை பிரெஞ்சு, ஆங்கிலம், தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் வழங்கி, தமிழின் பெருமையை ஆதிசேசய்யா உலகறியச் செய்திருக்கிறார். இந்த மும்மொழி உரையை யுனெஸ்கோ நிறுவனம் பத்திரப்படுத்தி வைத்திருப்பதாகக் குறிப்பிடும் ஆசிரியர், ஆதிசேசய்யா கையெழுத்தில் அமைந்த தமிழ் உரைப் பிரதியைப் பின்னிணைப்பாகவும் கொடுத்திருக்கிறார்.
சென்னையிலுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தொடங்க உதவியது, யுனெஸ்கோவில் பணியாற்றிய காலத்தில் ஆதிசேசய்யா ஆற்றிய தலையாயத் தமிழ்ப் பங்களிப்பு எனலாம். 1968இல் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் கருக்கொண்ட இந்நிறுவனத் திட்டம் மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற 1970இல் உருப்பெற்ற வரலாற்றைக் குறித்தும் அது சென்னையில் தொடங்கப் பெறுவற்குப் பின்புலத்தில் அமைந்த உரையாடல்கள் குறித்தும் தொடங்கப்பெற்ற முதல் ஐந்தாண்டுகள் ஆதிசேசய்யா முயற்சியால் யுனெஸ்கோ வழங்கிய நிதி உதவியில் அந்நிறுவனம் இயங்கியது குறித்தும் இந்நூல் விரிவாகப் பேசுகிறது. அறியப்பட்ட ஆளுமையான ஆதிசேசய்யாவின் அறியப்படாத தமிழ் முகத்தை இந்நூல் முதன்முறையாக வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது.
அறிவுரு தமிழ்த் தூதர் ஆதிசேசய்யா
ஆ.அறிவழகன்
வெ ளியீடு: டீனு பதிப்பகம், சென்னை.
தொடர்புக்கு: 9382135385, 9790200478
விலை: ரூ.150
ஏப்ரல் 18: மால்கம் ஆதிசேசய்யா பிறந்தநாள்
- ஜெ.சுடர்விழி பே | ராசிரியர்; தொடர்புக்கு: sudaroviya@gmail.com