Last Updated : 03 Sep, 2017 10:25 AM

 

Published : 03 Sep 2017 10:25 AM
Last Updated : 03 Sep 2017 10:25 AM

சிவதாணு: வெளிச்சம் தின்ற உடல்

நாகர்கோவிலிலிருந்து சிறுவயதிலேயே சென்னை வந்தவர் சிவதாணு. ‘காலச்சுவடு படியுங்கள்’ என்ற ஸ்டிக்கர் ஒட்டி ஆட்டோ ஓட்டியவர் சிவதாணு. சினிமாவில் நடிக்கும் ஆசையுடன் இலக்கிய வாசிப்பும் சேர்ந்திருந்தது. நடிகர்கள் பாலாசிங், நாசருடன் நேரடியான பழக்கம் இருந்தது. சுந்தர ராமசாமி, நாஞ்சில் நாடன், ஜெயமோகன் ஆகியோரின் எழுத்துகளுடன் மட்டுமின்றி நேரிலும் அவர்களுடன் பரிச்சயம் கொண்டவராக அப்போது இருந்தார்.

சென்னைக்கு வரும் எழுத்தாளர்கள் எல்லாரும் ஒருமுறையாவது அவருடைய ஆட்டோவில் பயணித்திருப்பார்கள். அவரது தெற்கத்தி வெள்ளந்தித்தனத்தாலும் சுபாவத்தாலும் சீக்கிரமே நிறைய நண்பர்களையும் சேர்த்திருந்தார். சுந்தர ராமசாமி சென்னை வந்தால் அவரை வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லும் ஆஸ்தான சாரதியாக ஆனார். வெகுஜனக் கதைகளுக்கும் சிறுபத்திரிகைக் கதைகளுக்கும் இடைப்பட்ட சில சிறுகதைகளையும் எழுதினார். அவரது ஆட்டோ பல இடங்களுக்கும் பயணப்படத் தொடங்கியது.

1999-ல் பாலு மகேந்திரா, தமிழ் சிறுகதைகளை ‘கதை நேரம்’ எடுத்துக் கொண்டிருந்தபோது, சிவதாணு எழுதி குமுதத்தில் வெளியாகியிருந்த சிறுகதையை ‘ஏ ஆட்டோ’வாக பாலு மகேந்திரா எடுத்தார். அது சிவதாணுவைப் பொறுத்தவரை மிகப்பெரிய அங்கீகாரமாக ஆனது. சிவதாணு தொடர்ந்து கதை நேரத்திலும் சில திரைப்படங்களிலும் நடித்தாரென்றாலும் அவருக்கு அமைந்த வேடங்கள் எதுவும் அழுத்தமாக அமையவில்லை. அதே சமயத்தில் ஒரு ஆட்டோ ஓட்டுநர் இலக்கியவாதியாக இருப்பதை முன்னிட்டுப் பெரும்பாலான பத்திரிகைகளிலும் அவரைப் பற்றிய கட்டுரைகளும் வெளியாகின.

அவர்மீது சிறு நட்சத்திர ஒளி அப்போது படர்ந்திருந்தது. ஓரளவு நிலையான வருவாயை அளித்துவந்த ஆட்டோ ஓட்டுநர் தொழில்மீது அவரது கவனம் குறையத் தொடங்கிய நாட்கள் அவை. ஆட்டோவில் அவரைப் பற்றி வந்த செய்திப் பத்திரிகைகளை சீட்டுக்குப் பின்புறம் பத்திரமாக வைத்து நண்பர்களுக்குக் காண்பித்து மகிழ்வார். பணம் இருக்கும் வேளைகளில் இலக்கியவாதி நண்பர்களுக்குக் கணக்குப் பார்க்காமல் செலவழிப்பவராகவும் சவாரிக் குதிரையாகவும் இருந்தார்.

ஒரு வாசகராக, எழுத்தாளராக தனது அனுபவங்களை பீடி குடித்தபடியே ஆட்டோவின் முன்னால் பக்கவாட்டில் அமர்ந்து பேசும் அவரது சித்திரம் எனக்கு ஞாபகத்தில் உள்ளது. வாய்ப்பு கேட்டு அவர் பல சினிமா இடங்களுக்கும் ஆட்டோவில் போய்க்கொண்டே இருந்தார். அவரது அனுபவங்களும் ஏமாற்றங்களும் கூடிக்கொண்டிருந்தன. ஒருகட்டத்தில் ஆட்டோ ஓட்டுவதை நிறுத்தினார். ஆட்டோ அவர் விரும்பிய இடங்களுக்கு விரும்பிய உயரங்களுக்குக் கொண்டுசேர்க்கவில்லை. இடையில் ‘கள்ளியங்காட்டு நீலி’ என்றொரு சிறுகதைத் தொகுப்பும் வெளியானது. இதுமட்டுமன்றி, நக்கீரன் பதிப்பகத்தின் ‘இனிய உதயம்’ மாத இதழுக்காகத் தமிழ் எழுத்தாளர்களைத் தொடர்ந்து நேர்காணல் செய்து வெளியிட்டதன் மூலம் பத்திரிகையாளராகவும் பங்காற்றியிருக்கிறார்.

பத்திரிகைகள், ஊடகங்கள் வேறு கதைகளை ,வேறு நபர்களின் மேல் தன் வெளிச்சத்தை திருப்பிவிட்டன. சின்னச் சின்ன வேலைகள் பார்த்துக்கொண்டு சிறுசிறு வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த அவர், அரசியல் செல்வாக்கு மிக்க இலக்கிய ஆளுமைகளின் உதவியுடன் சொந்தமாக ஆட்டோ வாங்கவும் முயற்சித்தார். ஒருகட்டத்தில் குடும்பத்தில் பையன்கள் வளர்ந்து அவரைச் சார்ந்திருக்கத் தேவையில்லாத நிலை ஏற்பட்டது. நடுவில் ஒருமுறை பக்கவாதமும் சிவதாணுவைத் தாக்கியது. நீரிழிவு நோய்ப் பாதிப்பும் இருந்த சிவதாணு, சமீபத்தில்தான் கண் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். கண் அறுவை சிகிச்சை முடிந்து ஒரு வாரத்துக்குள்ளாகவே ஒரு படப்பிடிப்பில் கலந்துகொண்டு வந்திருக்கிறார். அங்கிருக்கும் அதீத விளக்கொளியின் பாதிப்பால் வீட்டுக்கு வந்த பிறகு கண் பார்வை சரியில்லாமல் இருந்திருக்கிறது. இனி கண் தெரியாமல் போய்விடுமோ என்ற படபடப்பில் மூச்சுத்திணறல் வர, கடந்த ஆகஸ்ட் 27 அன்று இறந்துபோய்விட்டார்.

நோய் வந்துதான் மரணம் ஏற்பட வேண்டுமென்பதில்லை. விரும்பிய விஷயங்கள் ஒருவருக்கு சாத்தியமாகாமல் போவதும் மரணம்தான்.

-ஷங்கர், தொடர்புக்கு:

sankararamasubramanian.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x