

எ
ருது கட்டு ஆட்டம் கோலாகலமாகத் தொடங்கியது.
இந்த இடத்தில் பக்கத்தில் உள்ள ஒரு ஊரில்தான் பெரிய்ய நில முதலாளிமாரின் வீட்டில் கூனம்மா என்ற பெயருடைய கூனிப் பாட்டி பிறந்தாள்.
இந்த விளையாட்டைப் பார்க்க வந்தபோது அவளுக்கு ஒம்பது அல்லது பத்து வயசு இருக்கலாம்.
ரொம்ப ரொம்பச் செல்லமாக வளர்ந்த பொண்ணு.
சித்தப்பாவோடு அவர்களுடைய வில்வண்டியில் வந்திருந்தாள்.
இந்தப் பெண் பிள்ளைகள் வயசுக்கு வந்துவிட்டால், வீட்டைவிட்டு வெளியே வரவே மாட்டார்கள். பிறகு பார்க்க முடியாது.
‘பெண் பார்க்கப் போறது’ என்பதெல்லாம் அப்போது கிடையாது. அந்த நினைப்பு உள்ளவர்கள் இப்படிப்பட்ட இடங்களில் வந்து பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்.
வருகிற இளவட்டங்கள் திருவிழாவைப் பார்க்க வருகிறார்களா, இந்தப் பெண் பிள்ளைகளைப் பார்க்கவா என்று தெரியாது.
மாட்டைப் பார்க்க சந்தைக்கு (தாவணி) போகலாம். பெண்ணைப் பார்க்க எங்கே போறது?!
அந்தக் காலத்தில் பெண்ணை வீட்டுக்குள் ஒளித்து வைத்திருந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். மண வடையில் வந்து பெண் உட்கார்ந்து கொண்டிருக்கும்போது யாரும், வந்து எவ்வளவு நேரம் பார்த்தாலும் ஒன்றும் சொல்லவே மாட்டார்கள்!
‘மணக் கோலம் என்பது தெய்வாம்சம் கொண்டது’ என்றாகிவிடுகிறது.
‘எருது கட்டு ஆட்டம்’ தொடங்குவதற்கு முன்னால் கலந்துகொள்ள வந்த காளைகள் நிற்கும் இடங்களிலும் கூட்டம் வந்து பார்த்த வண்ணமாகவே இருக்கும். அங்கேயும் காளைகளையும் காணலாம், காளையர்களையும் காணலாம்.
‘‘மாட்டுத் தாவணிகள் ஏற்படாத காலங்களில் மாடுகளைப் பிடிக்க என்ன செய்தார்கள்?’’ என்று சித்தப்பாவிடம் கூனம்மா கேட்டாள்.
சித்தப்பாவின் வாய் நிறைய்ய போயிலை போட்ட வெத்திலை எச்சில் கொப்பளிக்கும் அளவுக்கு இருந்ததால், பதில் சொல்ல முடியலை.
அவருக்கு நன்றாகவே நினைவில் இருக்கிறது. அவருடைய முத்தாத்தா சொன்னது; மலைக்குத்தான் போவார்களாம் மாடுகளைப் பிடிக்க.
அது அவ்வளவு லேசில்லை. பிடித்தாலும் கொண்டு வருவதும் லேசில்லை.
கூடுமானவரை, பால் மறந்த கன்றுகளைத்தான் குறி வைத்துப் பிடிப்பார்களாம். பிறகு, அதை வளர்த்து காய் அடித்து மூக்கணாங்கயிறு குத்தி, வேலையில் கழுத்தாக்குகிறதும் பாடுதான்.
‘இந்த மாடு பிடிக்கிறது’ என்பது மலையில்தான் முதல் முதலில் தொடங்கியதாம்.
‘காலையில் எழுந்ததும் தொழுவுக்கு வந்து, பாடுபடும் மாடுகளைத் தட்டித் தடவிக் கொடுத்து அதுகளோடு நாலு வார்த்தைகள் பேசணும்’ என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். அவர்கள் அப்படிச் செய்து இருக்கிறார்கள்.
மாடுகள் நம்மோடு பேசாது; நாம் பேசுறது அதுகளுக்குப் புரியுமாம்; நாம் விடாமல் அதோடு பேச்சு வைத்துக் கொள்ள வேண்டும் என்பார்கள்.
நாய்களுக்கும் பூனைகளுக்கும் நாம் பேசுவது புரிகிறது; சொன்னால் கேட்டுக் கொள்கிறது. மாடும் அதேபோல்தான். பிராணிகளுக்கு சொல்மொழி (வார்த்தைகள்) புரியாது என்று நினைத்தால் ‘ஒலிமொழி’ புரியும். நாம் நம்பிக்கை யோடு முயற்சி செய்வதில்லை.
பாட்டிமார் மாடுகளைப் பற்றிக் கதைகள் சொல்லுவார்கள்:
கடவுள் முதல் முதலில் உண்டாக்கியது மனிதனைத் தானாம். அடுத்து, மாட்டைத்தான் உண்டாக்கினாராம்.
அப்போ மாட்டிடம் சொன்னாராம் கடவுள். ‘‘மனிதனுக்குத் தோழன் நீதான். நீ இல்லாமல் இவனுக்கு ஒரு காரியமும் ஓடாது. காலுக்குச் செருப்பிலேர்ந்து பிள்ளைக்குப் பால் வரை. பொதி சுமப்பாய், நீர் சேந்துவாய், வண்டி இழுப்பாய், நிலம் உழுவாய், உரம் தருவாய், அவன் வீட்டு இளவட்டப் பிள்ளைகளுக்கு விளையாட்டுக் காட்டுவாய். இப்படி இன்னும் இன்னும் எத்தனையோ...’’
மனிதன் கடவுளுக்குப் பொங்கல் வைத்துக் கும்பிடுவான். அடுத்து மாட்டுக்கு பொங்கல் வைத்துக் கும்பிடுவான். மாடும் அவனுக்கு சாமிதான்; மாடசாமி!
காமதேனு என்று சொல்லி சப்பரத்தில் வைத்து வீதி வழி தலையிலும் புஜத்திலும் வைத்துச் சுமந்து வருவான்.
கோயிலின் முன்புறத்தில் உன்னைத்தான் வைப்பான்.
வீடு என்றால் அங்கே ஒரு பசு நிற்கணும். அதுதான் வீடு.
அவன் புது வீடு கட்டி முடித்ததும் உன்னைத்தான் - பசு
மாட்டைத்தான் - முதலில் வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு வருவான்.
ஒருநாள் குழந்தை கூனம்மா கேட்டாள் தனது முத்தாத்தாவிடம். “ஏம் தாத்தா பெண்கள் எருது கட்டுவில் மாடு பிடிக்கக் கூடாது?”
“யாரு சொன்னா.. பெண்கள் தேர் ஓட்டியிட்டியிருக்கிறார்களே சண்டையில்! சத்தியபாமா கண்ணனுக்குத் தேர் ஓட்டவில்லையா? கைகேயி தசரதனுக்கு ரதம் ஓட்டலையா?”
கூனம்மா அப்பொ ஏழு வயசுப்பிள்ளை. “தாத்தா எருது கட்டில் நானும் ஒருநாள் மாட்டைப் பிடித்துக் காட்டுவேம்”.
“ஆஹா.. ஹா.. ”என்று பேரொலியோடு சிரித்தார்
முத்தாத்தா. குதூகலத்தில் வீடே சிரித்தது.
பாட்டி கூனம்மா, சத்தியபாமா கண்ணனுக்கு தேரோட்டிய கதையை குழந்தைகளுக்குச் சொன்னாள்.
மாடுகளை மேய்த்தான் கண்ணன் என்று பாட்டி சொன்னபோது ஆச்சரியப்பட்டார்கள் குழந்தைகள்.
கண்ணனிடம் கேட்டால் மாடுகளைப் பற்றிக் கதை கதையாகச் சொல்லுவான்.
கண்ணனிடம் கதை கேட்க எங்கே போகணும் என்று ஒரு அறியாக் குழந்தை பாட்டியிடம் கேட்டது. என்னசொல்ல என்று தெரியாத பாட்டி பாட ஆரம்பித்தாள், கையோடு கை தட்டிக் கொண்டு.
குழந்தையும் பாட்டியோடு சேர்ந்து தாளத்தோடு கைதட்டியது!
- கதை பேசும்...