

பொங்கிப் பிரவாகமெடுத்தோடும் நதியின் வேகமுமில்லை; பாறை இடுக்கில் தேங்கிக் கிடக்கும் மழை நீரின் மெளனமுமில்லை; முன்பின் அறிமுகமில்லாத வேளையிலும் வாழ்வின் போக்கில் எதிர்ப்படும் மனித முகம் பார்த்து ஒரு சிநேகப் புன்னகையை உதிர்த்துவிட்டுப் போகும் மனிதத்தின் குணமே ஆசுவின் அசலான கவிதை முகமாக உள்ளது. முற்போக்குக் கவிதைகள் புதிய உத்வேகத்தோடு எழுதப்பட்ட 80-களின் தொடக்கக் காலத்தில் கவிதை எழுதத் தொடங்கியவர் ஆசு.
உழைக்கும் பாட்டாளி மக்களின் அன்றாட வாழ்விலிருந்து தனக்கான கவிதை மொழியையும், கவிதைகளையும் கண்டெடுத்த அவரது முதல் கவிதை நூல் ‘ஆறாவது பூதம்’. 1997இல் வெளியான முதல் கவிதை நூல் தொடங்கி, 2021 வரை கடந்த 25 ஆண்டுகளில் வெளியான எட்டு கவிதை நூல்களே ‘ஆசு கவிதைகள்’ எனும் 688 பக்க அளவிலான தொகுப்பாக வெளிவந்துள்ளது.
கவிதை எழுதுகிற எல்லாருக்குமே தன் முகத்தைத் தனது கவிதையின் வழி பார்க்கும் ஆவல் எழும். கண்ணாடியிலோ தண்ணீரிலோ முகம் பார்க்காமல் தானே தன் முகத்தை வரைந்து பார்க்க முயலும் ஆசுவின் இக்குணமே, அவரைத் தனித்து அடையாளப்படுத்துவதாக உள்ளது. சராசரித்தனங்களை உதறிவிட்டு, தன் முகத்தைப் புதிய கோணத்தில் வரைந்துள்ளார்.
‘கடிகாரத்தின் முகமொத்த/ என் முகம் வரைந்தேன்/பதற்றங்கள்/வாழ்வின் எண்களாய் நகர்த்தி/என்னைத் தோற்கடித்தது அது/’ - ஆனாலும் மனம் தோய்ந்துவிடாமல் மீண்டும் முயன்று பார்க்கிற கவிஞர், இப்படியாகக் கவிதையை எழுதி முடிக்கிறார்: ‘இன்னொரு நாள்/என் குழந்தை வரைந்தது/பொம்மையின் முகமொன்றை/என்ன ஆச்சர்யம்/ என் முகத்தை அப்படியே/பிடுங்கி வைத்தது போலிருந்தது அது’ - என்பதிலிருந்தே குழந்தையின் மனவுலகத்திற்கு நெருக்கமானவராக ஆசு தன்னை முன்நிறுத்துவதை அறிய முடிகிறது.
எளிய மனிதர்கள் வாழ்வில் சந்திக்கும் சிறுசிறு நிகழ்வுகள்கூடக் கவிதைக்கான கருப்பொருளாகியுள்ளன. வேட்டித் தலைப்பு முந்தியில் முடிந்து வைத்த அப்பாக்கள் ‘முட்டாய் வாங்கிக்கோ’ என்று தந்துபோகும் அரையணாக் களும், நெடுநாள்களுக்குப் பிறகு வீடுவரும் நண்பனின் கால்பட்டு கசங்கிய கோலமும், திறந்திருக்கும் கதவுகளின் வழி திரும்பிப்போகும் பட்டாம்பூச்சிகளும் ஆசுவின் கவிதைகள் வழியே வாழ்வின் அழியாத காட்சிச் சித்திரங்களாக நம் மனதில் பதிந்துவிடுகின்றன.
“நான் எழுதுவது வாழ்வைப் பார்த்து அல்ல. வாழ்வின் அனுபவங்கள் கொதித்து எழுகையில், துளித்துளியாகத் தெறிக்கும் அந்தக் கண நேரத் துடிப்பு. இந்தத் துடிப்புகள் காலத்தின் வெளியைத் தனதாகக் கொண்டு நகர்கின்றன. பாசாங்குக்கும் பாவனைக்கும் இடையில் உண்மையின் நிழல் தேடும் சிறுபொறியில் முகிழ்த்துத் தேடும் கவிதைகள்” எனத் தன் கவிதைகளைப் பற்றி ஆசு சொல்வது எவ்வளவு பொருத்தமானது என்பதை இக்கவிதைகள் உணர்த்துகின்றன.
ஆசுவின் கவிதைகளில் பசி பற்றி எழுதியுள்ள வரிகள் தனிக் கவனம் பெறுகின்றன. பசி வயிற்றின் அவஸ்தைகளைப் பசித்தவரின்றி வேறு யாரால் உணர முடியும்..? ‘பசித்தவன் வீடு’ கவிதையில் அதை உணர்த்துகிறார். எல்லா மனித உயிருக்கும் பசி பொதுவானதே என்பதை ஆசு கவிதையாக்கியிருக்கும் விதம், ஒரு அழகிய கதையாகவே விரிகிறது.
முதல் பேற்றின் வலி, காற்று அறியும் வலிகள், சங்கீதம் உறைந்த செவிகளில், மெல்லிய உயிர் ஆகிய கவிதைகள் ஆசுவின் நுட்பமான கவிதை மொழிக்கும், தனித்துவமான கவிதைப் பார்வைக்கும் சரியான சாட்சிகளாகின்றன. மாறிவரும் காலத்தின் தேவையை உள்ளுணர்ந்து எழுதியிருக்கும் ஆசுவின் கவிதைகள், தமிழ்க் கவிதைப்பரப்பில் பேசுவதற்கும் விவாதிப்பதற்குமான இடைவெளிகளில் நம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் வகையில் அமைந்துள்ளன.
ஆசு கவிதைகள் கல்விளக்கு
பதிப்பகம் படைவீடு - 606 905
பக்கம்: 688
விலை: ரூ.700
செல்: 97863 20491
- மு.முருகேஷ் | தொடர்புக்கு: murugesan.m@hindutamil.co.in