நூல் வெளி: கூர்மையான ஆயுதங்கள், கூர்மையான சொற்கள் 

நூல் வெளி: கூர்மையான ஆயுதங்கள், கூர்மையான சொற்கள் 
Updated on
2 min read

பிரான்ஸ் நாட்டில் அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெற 64 வயது வரை பணியாற்ற வேண்டும் என்கிற புதிய சட்டத்தை எதிர்த்து, நாடு முழுவதும் பிரெஞ்சு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பேரளவு அமைதிவழியில் நடைபெற்றுவரும் இந்தப் போராட்டங்களைக் கட்டுப்படுத்த, 11,500 காவலர்கள் இறக்கிவிடப்பட்டுள்ளனர்.

தலைநகர் பாரிஸில் மட்டும் 4,200 காவலர்கள் போராட்டத்தைக் கண்காணித்துவருகின்றனர். செயல்திறன் அற்ற அரசாங்கங்களின் முடிவுகளால் பாதிக்கப்படும் மக்கள் போராட்டத்தில் இறங்கும்போது, அரசாங்கங்கள் ஆயுதங்கள் மூலமே அதற்குப் பதிலளிக்கின்றன.

பதிவுசெய்யப்பட்ட வரலாற்றின் எந்தக் காலகட்டத்திலும், உலகின் ஏதோ ஒரு மூலையில் இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட நாடுகள்/ குழுக்கள் ஆயுதச் சண்டையில் ஈடுபட்டுவந்திருப்பதைப் போன்ற ஒரு நிலையே, இருபத்தியோராம் நூற்றாண்டின் இருபத்தி மூன்றாம் ஆண்டிலும் தொடர்கிறது. ஒரு வகையில், ஆயுதங்களே வரலாற்றை எழுதுகின்றன. ஆயுதங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்துக்கொண்டே செல்வதன் மூலம், தேச அரசுகளும் ஆளும் வர்க்கமும் துப்பாக்கியிலிருந்து புறப்படும் ரவையின் திசையில் வரலாற்றைச் செலுத்துகின்றன.

ஜீவன் பென்னி
ஜீவன் பென்னி

இத்துடன், பெரும்பான்மையானோரை வஞ்சிக்கும் மோசமான பொருளாதாரக் கொள்கைகள், அளவுக்கு மீறி சுரண்டப்படும் இயற்கை வளங்கள், சிதையும் சூழலியல் அமைப்புகள், காலநிலை மாற்றத்தின் முகத்திலறையும் உண்மைகள் போன்றவை மனித குலத்தின் ஆதார நம்பிக்கைகளைக் கேள்விக்கு உட்படுத்துகின்றன. இந்நிலையில், படைப்பிலக்கியத்தின் இயங்குமுறையும் ‘வீழும் உலகில்’ படைப்பாளியின் கடப்பாடு என்ன என்பதும் தீவிர பரிசீலனையைக் கோரி நிற்கின்றன.

அந்த வகையில், படைப்பாளி எனத் தன்னை உணரும் எவரும் ஆங்கிலக் கவிஞர் ஜான் வெய்ன் எழுப்பும் இந்தக் கேள்வியை வந்தடைய வேண்டிய தேவை இருக்கிறது: ‘தாம் வாழும் சமூகத்தின் அவலம் அல்லது செழிப்பு குறித்த கருத்துகளை தம் படைப்பு மூலம் வெளிப்படுத்த ஒரு கவிஞனுக்கு அற இயல்பு சார்ந்த நிர்ப்பந்தம் ஏதேனும் உள்ளதா?’ இப்படியான ஒரு நிர்ப்பந்தத்துக்குத் தன்னை உட்படுத்திக்கொள்ளாமல், ‘பழைய போர்க்கருவிகளைச் சேகரிப்பவன்’ என்கிற தொகுப்பின் கவிதைகளைக் கவிஞர் ஜீவன் பென்னி எழுதியிருக்கச் சாத்தியமில்லை என்றே கருத முடிகிறது.

‘அதிகாரத்தின் செயல் கருவி ஆயுதம்தான்’ என்று கருதும் ஜீவன் பென்னி, அதிகாரம் என்பது என்ன, அது எங்கெல்லாம் ஊடுருவுகிறது, ஆயுதங்கள்-தடவாளங்களின் இருப்பு, ஆயுதங்கள் வழி அரச அதிகாரம் தன் மேலாண்மையை எப்படித் தொடர்ந்து நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது என்பன போன்றவற்றுக்கு இந்தக் கவிதைகளில் விடை தேட முயல்கிறார்.

‘மிகச் சரியாகப் பிரிக்கப்படுவதாக யிருந்தால்,/ இந்த உலகை!/ ஆயுதங்களுட னிருப்பவர்கள் மற்றும்/ ஆயுதங்களுக்காக முன்னேறிக் கொண்டிருப்பவர்கள்!/ என்றே பிரிக்கப்பட வேண்டும்’ – என்கிற கவிதை உடனடியாக ரஷ்யா-உக்ரைன் போரை நினைவுக்குக் கொண்டுவந்தாலும், ஒட்டுமொத்த உலக வரலாறும் அவ்வாறானதே என்பது மென்சோகத்தைப் பரவச் செய்கிறது. எனில், ‘அதிகாரம் மனிதனைப் புதைக்கத் துவங்கிய காலத்தை/ அவ்வெலும்புகளின் கார்பன் கணக்குகள் சொல்ல முயல்கின்றன’ – என்கிற வரியோ அதிகாரத்துக்குப் பலியானவர்களின் முடிவற்ற வரலாற்றை எழுதுகிறது.

‘அதிகாரத்தை எதிர்த்துப் பேசுவதென்பது அது தாங்கி நிற்கும் ஆயுதத்தின் கூர்மையை நோக்கிப் பேசுவதில் தான் தொடங்குகிறது [. . . ] அதிகாரத்துக்கு எதிராக உங்களால் உருவாக்கிவிட முடிகிற ஒவ்வொரு சொல்லும், அதன் காலம் முழுவதும் இங்கு ஒரு எதிர்வினையை நிகழ்த்திக் கொண்டிருக்கும்,’ என முன்னுரையில் எழுதும் ஜீவன் பென்னியின் கவிதைகள் ஒவ்வொன்றும் ஒரு பிரகடனமாக நிற்கின்றன.

பழைய போர்கருவிகளைச் சேகரிப்பவன் (கவிதைகள்)
ஜீவன் பென்னி
வெளியீடு:
சால்ட்
தொடர்புக்கு: 9363007457
விலை: ரூ.175

- தொடர்புக்கு: arunprasath.s@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in