

கவிதை, சிறுகதை, நாவல், அறிவியல், சிறுவர் இலக்கியம், வானொலி உரை, விமர்சனம், மொழிபெயர்ப்பு முதலான இலக்கியத் தடங்களில் 1949ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சுறுசுறுப்பாக இயங்கி வருபவர் இளம்பாரதி. வேதியியல் பேராசிரியராக இருந்தபோதிலும் முறைப்படி யாப்பிலக்கணம் பயின்று மரபுக் கவிதைகள் பாடியவர்.
கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கிய மொழிபெயர்ப்புப் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலிருந்து நேரடியாகத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளார்.
‘மய்யழிக் கரையோரம்’ என்ற மலையாளப் புதின தமிழ் மொழிபெயர்ப்புக்காக 1998ஆம் ஆண்டு சாகித்திய அகாடமி விருதுபெற்றவர். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளை அறிந்தவர்.
கோவில்பட்டிக்கு அருகில் இளையரசனேந்தலில் 1933 அன்று பிறந்த இளம்பாரதியின் இயற்பெயர் ருத்ர.துளசிதாஸ். வேதியியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் பட்டயப் படிப்பினைப் படித்துள்ளார்.
பள்ளி, உயர்நிலைப் பள்ளி, கல்லூரி இன்டர்மீடியட் என எல்லா நிலைகளிலும் சம்ஸ்கிருதத்தை மொழிப்பாடமாகப் பயின்றவர். பாவேந்தர் பாரதிதாசனுடன் நேர்முகப் பழக்கத்தில் கவிதைகள் குறித்து நிறைய உரையாடிய பெருமையும் இவருக்கு உண்டு.
மதுரை தியாகராசர் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த தமிழறிஞர் அ.கி.பரந்தாமனாரிடம் முறைப்படி யாப்பிலக்கணம் பயின்றிருக்கிறார். சிவகங்கை கல்லூரியில் கவிஞர் மீரா, நா.தர்மராஜன், ம.பெ.சீனிவாசன், நா.இலக்குமணப்பெருமாள் போன்ற ஆளுமைகளுடன் பணியாற்றிய அனுபவம் இவருக்குண்டு.
கவிஞர்கள் அப்துல் ரகுமான், மீரா, இந்திரன் முதலான இலக்கிய ஆளுமைகளுடன் நட்பு பாராட்டியவர் இளம்பாரதி. பணி ஓய்விற்குப் பின்னர் எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் அழைப்பை ஏற்று புதுச்சேரிக்கு வந்து அங்கேயே சொந்தமாக வீடு வாங்கி நிரந்தரமாக வசித்து அயராமல் மொழிபெயர்ப்புப் பணிகளைச் செய்து கொண்டிருப்பவர். எழுத்தாளர் பாவண்ணனும் இவரும் ஒரே தெருக்காரர்கள்.
பல இலக்கியத் தடங்களில் 1949ஆம் ஆண்டு முதல் கவனம் செலுத்தி எழுதிவந்த இவர், தற்போது மொழிபெயர்ப்புகளில் மட்டும் முழுக்கவனம் செலுத்தி வருகிறார். ‘படிப்பு’, ‘கௌசல்யா’, ‘காலச்சுவடுகள்’, ‘சின்ன மீன் பெரிய மீன்’, ‘திரௌபதி’ முதலான தெலுங்கு நாவல்கள், ‘விசித்திரத் தம்பதிகள்’ (கெ.சுபா சிறுகதைகள்), ‘கறையான்கள்’, ‘கேது விஸ்வநாத ரெட்டி சிறுகதைகள்’, ‘யக்னம்’, ‘இதன் பெயர் வாழ்க்கை’, ‘அடுத்த வீடு’ முதலான தெலுங்குச் சிறுகதை நூல்கள், தெலுங்குக் கவிதை நூல்கள், தெலுங்கு ஓரங்க நாடகங்கள், திருப்பதி வேங்கட கவிகள் (வாழ்க்கை வரலாறு) ஆகிய நூல்களைத் தெலுங்கிலிருந்து நேரடியாக மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.
‘இந்துலேகா’, ‘உம்மாச்சு’, ‘மய்யழிக் கரையோரம்’, ‘கயிறு’ முதலான மலையாள நாவல்கள், ‘மரக்குதிரை’, ‘அவள் என்ற மரம்’ முதலான மலையாளச் சிறுகதைகள், ‘கோயில் யானை’ (மலையாள நாடகம்), ‘தத்வமஸி’ (உபநிடத விளக்கம்), ‘தகழியின் வாழ்க்கை நினைவுகள்’ (மலையாளச் சுயசரிதம்), போன்ற நூல்களை மலையாளத்திலிருந்து மொழிபெயர்த்துள்ளார்.
‘களத்துமேட்டிலிருந்து’, ‘சிமெண்ட் மனிதர்கள்’ முதலான கன்னட நாவல்கள், ‘புதியதாய் ஒரு பிறப்பு’ சிறுகதைத் தொகுப்பு ஆகிய கன்னட நூல்களையும் மொழிபெயர்த்துள்ளார். ‘பிணைப்பு’, ‘அமுதக்கனி’ முதலான இந்தி நாவல்கள், ‘சாகசக்கார ஆடு’, ‘வடமாநிலச் சிறுகதைகள்’ முதலான இந்தி நூல்களையும் தமிழுக்குத் தந்துள்ளார்.
‘பந்தயம்’ (ஆன்டன் செகாவ் சிறுகதைத் தொகுப்பு), ‘வானிலை மாற்றங்கள்’, ‘தண்ணீர்’, ‘நமது நீர்வளம்’, ‘உலகை மாற்றிய புதுப்புனைவுகள்’, ‘அறிவியல் தொழில்நுட்பக் களஞ்சியம்’ முதலான நூல்களை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்துள்ளார்.
‘கறையான்கள்’ என்ற தெலுங்குச் சிறுகதைகளைத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்தமைக்காக 2005ஆம் ஆண்டில் திருப்பூர்த் தமிழ்ச் சங்கம், நல்லி திசை எட்டும் ஆகிய இலக்கிய அமைப்புகள் சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருதுகளை வழங்கிக் கௌரவித்துள்ளன. ‘அடுத்த வீடு’, ‘அனல் காற்று’ ஆகிய நூல்கள் மத்திய அரசின் பரிசுகளைப் பெற்றுள்ளன.
இளம்பாரதியைக் கௌரவிக்கும் விதமாக புதுச்சேரி ‘நண்பர்கள் தோட்டம்’ இலக்கிய அமைப்பு ‘இளம்பாரதி ஒரு பன்முக இலக்கிய ஆளுமை’ என்கிற ஆவணப்படத்தைத் தயாரித்து கடந்த மாதம் வெளியிட்டது. இந்த விழாவில் இளம்பாரதி மொழிபெயர்த்த அன்னம் பதிப்பக வெளியீடாக வந்துள்ள ‘உருதுக் கதைகள் இருபது’ என்கிற சிறுகதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது.
- ஆர்.வி.பதி | தொடர்புக்கு: writerpathi@gmail.co