

சாகித்திய அகாடமியின் (தமிழ்) பொதுக்குழு, ஆலோசனைக் குழுக்கான புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரிப் படைப்பாளர் பெரியசாமி பூபதி, திராவிடப் பல்கலைக்கழகப் பேராசிரியர் டி.விஷ்ணுகுமரன், பெரியார் பல்கலைக்கழகப் பேராசிரியர் டி.பெரியசாமி, புதுடெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் இரா.தாமோதரன் (அறவேந்தன்) ஆகியோர் பொதுக்குழு உறுப்பினராகி உள்ளனர்.
இவர்களுடன், சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ய.மணிகண்டன், மேட்டுப்பாளையம் அரசுக் கல்லூரிப் பேராசிரியர் மொழிபெயர்ப்பாளர் மோ.செந்தில்குமார், பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேராசிரியர் உ.அலிபாவா, படைப்பாளர் வணிகவரித் துறைத் துணை ஆணையர் எஸ்.தேன்மொழி, சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரிப் பேராசிரியர், படைப்பாளர் எம்.வனிதா (நிதா எழிலரசி), புதுச்சேரிச் சமுதாயக் கல்லூரிப் பேராசிரியர் அரங்க மு.முருகையன் ஆகியோர் ஆலோசனைக் குழு உறுப்பினராகி உள்ளனர்.
‘இந்து தமிழ் திசை’ புத்தகக் காட்சி
மீனாட்சி புக் ஷாப்புடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ புத்தகக்காட்சியை ராஜபாளையத்தில் ஒருங்கிணைக்கிறது. ராஜபாளையம் காந்தி கலைமன்றத்தில் 08.04.23 முதல் 18.04.23 வரை இந்தப் புத்தகக் காட்சி நடைபெறவுள்ளது. காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தகக் காட்சி நடைபெறும். மேலதிகத் தொடர்புக்கு : 94432 62763
நம் வெளியீடு: பணம்: ஓர் உளவியல் பார்வை!
பணம் என்பதை நம் திறனுடனோ, நாம் பார்க்கும் வேலையின் இயல்புடனோ மட்டும் சுருக்கிவிட முடியாது. வாழ்க்கையை நாம் அணுகும் போக்குடனும், நம் மனநிலையுடனும் தொடர்புடையது அது. ஆயிரங்களில் சம்பாதிப்பவர் கடனின்றி வாழ்வதும், கோடிகளில் சம்பாதிப்பவர் கடனில் சிக்கி உழல்வதும் உணர்த்தும் சேதியும் இதுவே. இந்த நுணுக்கமான கருத்தை இந்நூலில் அனைவருக்கும் எளிதில் புரியும்விதமாக ஆசிரியர் விளக்கியிருக்கிறார்.
நூலாசிரியர் அடிப்படையில் உளவியல் நிபுணர் என்பதால், பணம் ஈட்டுவதையும், ஈட்டியதைச் சேமிப்பதையும் உளவியல்ரீதியாக அவர் அணுகியிருக்கிறார். இந்த அணுகுமுறையே பணம் ஈட்டுவது தொடர்பான பிற நூல்களிலிருந்து இந்நூலை வேறுபடுத்திக் காட்டுகிறது. பணம் ஈட்டுவதற்குப் பொருளாதார அறிவு மட்டும் போதாது; வாழ்வியல் பாடங்களும் பணம் குறித்த உளவியல் புரிதலும் தேவை என்பதை ஆசிரியர் நமக்கு உணர்த்தியுள்ளார்.
பணம் காய்ச்சி மனம்
டாக்டர். ஆர். கார்த்திகேயன்
விலை: ரூ. 120
இணையச் சுட்டி: store.hindutamil.in/publications
தொடர்புக்கு: 74012 96562 / 74013 29402