Published : 03 Sep 2017 10:27 AM
Last Updated : 03 Sep 2017 10:27 AM

முதல் இசை ஆய்வரங்கின் நூற்றாண்டும் ஆபிரகாம் பண்டிதரும்!

ந்தியாவின் முதல் இசை ஆய்வரங்கம் 1916-ல் பரோடா மன்னரால் நடத்தப்பட்டது. அந்த இசை ஆய்வரங்கத்தில் ராவ் பஹதூர் மு. ஆபிரகாம் பண்டிதர் கலந்துகொண்டார். ஒரு ஸ்தாயியில் 24 சுரங்கள் உள்ளன என்பதை அப்போது ஐயம் திரிபற நிரூபித்தார். கர்னாடக சங்கீத வித்வான்கள் கூறுவதைப் போல அது 22 சுரங்கள் அல்ல என்பதே அந்த நிரூபணம். ‘கருணாமிர்த சாகரம்’ என்ற பெருநூலை இதற்காகவே அவர் எழுதினார்.

இந்த இசை விவாத அரங்கின் 100-வது ஆண்டை நினைவுகூரும் நிகழ்வை ஆபிரகாம் பண்டிதரின் நினைவு நாளன்று ‘கோவை பாசிச எதிர்ப்புப் பள்ளி’ கடந்த வியாழக்கிழமை நடத்தியது. அதில் இசை ஆய்வாளர்கள் மம்மது, வைகை குமாரசாமி ஆகியோர் கலந்துகொண்டார்கள். நிகழ்வில் நிகழ்த்துக் கலைஞர்களான ‘நிமிர்வு’ பறை இசை மன்றத்தினருக்கும், மக்கள் பாடகர் சமர்ப்பா குமரனுக்கும் ‘கருணாமிர்த சாகரம்’ புத்தகம் வழங்கப்பட்டது.

03chdas_mammathu நா. மம்மது

இசை ஆய்வாளர் மம்மது பேசும்போது, “தமிழர்கள் 12 ஆயிரம் பண்கள் வரை பாடிவந்தனர் என்று ஆபிரகாம் பண்டிதர் தனது ‘கருணாமிர்த சாகரம்’ நூலில் குறிப்பிடுகிறார். அந்தப் பண்கள் இன்றைக்கும் இசைக்கப்படுகின்றன. திணை இசைதான் உண்மையானது” என்றவர், அதற்குத் தகுந்த திரை இசைப் பாடல்களுடனும் ஏராளமான தகவல்களுடனும் விளக்கம் அளித்தார்.

சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் முல்லைப் பாணி பண்ணின் இன்றைய பெயர் மோகனம். குறிஞ்சிப் பாணி பண்ணின் இன்றைய பெயர் மத்யமாவதி. பாலைப் பாணி பண்ணின் இன்றைய பெயர்தான் சுத்த சாவேரி.

மருதப் பாணி பண்ணின் இன்றைய பெயர் சுத்த தன்யாசி என்றும், இந்த ராகத்திலேயே செவ்விந்தியர்களின் பாடல்கள் இருந்தனவென்றும், இன்றைக்கும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் பாடப்படும் விடுதலைப் பாடல்களில் ஒலிப்பது சுத்த தன்யாசிதான் என்றும் சுவாரசியமான தகவல்களைச் சொல்லி அரங்கில் இருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் மம்மது.

நம் முன்னோர் நமக்கு விலை மதிக்க முடியாத 3 ஆயிரம் ஆண்டு பாரம்பரிய இசைச் சொத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கின்றனர். அதைக் குழந்தைகளுக்குக் கொடுப்பதற்கு முயல்வதைத்தான் இந்த நிகழ்ச்சிக்கான முக்கியமான நோக்கமாக நான் நினைக்கிறேன் என்றார் மம்மது, நெகிழ்ச்சியாக.

ஆபிரகாம் பண்டிதர்

இசை ஆய்வாளர்களில் முன்னோடியானவர் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் (1859 - 1919). இவரின் பெயருக்கு முன்னால் `தஞ்சை’ இருந்தாலும், இவர் பிறந்தது திருநெல்வேலி மாவட்டம், தென்காசிக்கு அருகிலிருக்கும் ஒரு கிராமத்தில்தான். தொடக்கத்தில் ஆசிரியர் பணி, சித்த மருத்துவம் (தஞ்சாவூரில் 100 ஏக்கரில் மூலிகை பண்ணை வைத்திருந்தார்) போன்ற சேவைகளைச் செய்தாலும், இசை நுணுக்கங்களை ஆராய்வதிலேயே தன்னுடைய வாழ்க்கையின் பெரும் பகுதியை செலவழித்தார்.

மனோதர்மத்தை அடிப்படையாகக் கொண்ட கர்னாடக இசையின் வேரை நோக்கிப் பயணித்ததுதான், ஆபிரகாம் பண்டிதரின் ஆராய்ச்சிச் சிறப்பு. ‘கருணாமிர்த சாகரம்’ நூலை 15 ஆண்டுகால உழைப்பில் ஆபிரகாம் பண்டிதர் உருவாக்கினார். இதைப் பதிப்பிப்பதற்கென்றே தஞ்சாவூரில் முதன்முதலாக மின் ஆற்றலால் இயங்கும் அச்சு இயந்திரத்தைக் கொண்டுவந்தார் என்று தெரிகிறது.

ஒவ்வொரு ராகத்தின் சொரூபத்தையும் விளக்கும் சுர அமைப்பு, ஆலாபனை, மேளகர்த்தா ராகங்கள், சுரத்தாளங்கள் போன்ற பலவற்றைக் குறித்தும் ஆராய்ச்சி செய்து அந்நூலில் விரிவாக எழுதியிருக்கிறார் ஆபிரகாம் பண்டிதர். பழங்காலத்தின் பண் ஆளத்தி முறைதான் தற்போதைய ராகஆலாபனை முறைக்கு ஆதாரம் என்பதைப் பல்வேறு ஆதாரங்களின்மூலம் நிறுவியிருக்கிறார் ஆபிரகாம் பண்டிதர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x