

மூத்த நாடகக் கலைஞர், பேராசிரியர் மு.இராமசுவாமி, பெரியார் தொடர்பாகக் கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு சூழல்களில் எழுதிய ஐந்து நெடுங்கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. பெரியாரை இந்து மதத்துக்கு எதிரானவராகவும் கடவுள் மறுப்பாளராகவும் மட்டுமே மதவாதிகளின் பிரச்சாரம் முன்னிறுத்துகிறது.
அதற்கு மறுப்பாக பொருளாதாரத் தளத்தில் கார்ல் மார்க்ஸுக்கு இணையான பங்களிப்பைச் சமூக நீதித் தளத்தில் பெரியார் ஆற்றியுள்ளார் என்பதை நூலின் தலைப்புக் கட்டுரை நிறுவுகிறது.
இலக்கிய நயத்துடனும் தேர்ந்த மொழியில் பேசுவோருக்கு மட்டுமே வழங்கப்படும் ‘சொல்லின் செல்வர்’ என்னும் பட்டம், மனதில் பட்டதை எந்த மேற்பூச்சும் இன்றி எளிய மக்களின் மொழியில் பேசிய பெரியாருக்கும் எப்படிப் பொருத்தமானது என்பதை நிறுவுகிறது இறுதிக் கட்டுரை.
பெரியாரைக் கலைகளுக்கு எதிரானவராகச் சித்தரிக்கும் போக்குக்குப் பதில் கூற முனையும் வகையில், கல்வி குறித்த பெரியாரின் சிந்தனைகளில் நிறைந்திருந்த சமூகநீதிப் பார்வையை விளக்குகிறது மற்றொரு கட்டுரை. இப்படிப் பெரியார் குறித்த பன்முகத்தன்மைவாய்ந்த பார்வையைப் பெற இந்நூல் உதவுகின்றது. - நந்தன்
பெரியாரை எப்படிப் புரிந்துகொள்வது?
மு.இராமசுவாமி
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை
விலை: ரூ.180
தொடர்புக்கு: 044 2625 1968, 2625 8410, 4860 1884
கேசவனின் பங்களிப்பு அறிமுகம்: சமூக வரலாற்று ஆய்வாளரான கோ.கேசவன் (1946-1998), தமிழ்நாட்டின் அரசுக் கல்லூரிகளில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர். மார்க்சியத் தத்துவத்தைப் பயின்று, அதனை வாழ்முறையாகவும் ஆய்வுக்கான அடிப்படை முறையியலாகவும் வரித்துக்கொண்டவர்.
தமிழ்நாட்டின் இடதுசாரி, சுயமரியாதை, தலித் இயக்கங்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டவர்; களப் போராட்டங்களிலும் பங்கெடுத்தவர். பாரதி குறித்த இவரது ஆய்வுகள் தனித்தன்மை மிக்கவை.
கேசவனின் வாழ்க்கையையும், பழந்தமிழ் இலக்கியம், இருபதாம் நூற்றாண்டு இலக்கியம், பாரதியியல், தமிழ்ச் சமூக இயக்கங்கள், தலித்தியம், மார்க்சியம் எனப் பல தளங்களில் விரியும் அவரது ஆய்வுப் பங்களிப்பையும் இந்நூல் அறிமுகப்படுத்துகிறது.
‘தமிழகத்தின் உயர் கல்வி மாணவர் நிலைகளில் மார்க்சிய விமர்சனம் கால்கோள் கொண்டுவிட்டது என்பதற்கான முதல் உதாரணமாக விளங்கியவர் கோ.கேசவன்’ எனப் பேராசிரியர் கா.சிவத்தம்பி குறிப்பிடுவதன் பின்னணியில், அதன் இன்றைய நிலை குறித்த கேள்வியையும் நாம் கேட்டுக்கொள்ள வேண்டும். - பைலார்க்கஸ்
கோ.கேசவன்
(இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை) வீ.அரசு
வெளியீடு: சாகித்திய அகாடமி
தொடர்புக்கு: 044 24311741
விலை: ரூ.50