நூல் வெளி | புக்கர் நெடும்பட்டியலில் பெருமாள்முருகன்: தமிழுக்கு குறிப்பிடத்தக்க தருணம்

நூல் வெளி | புக்கர் நெடும்பட்டியலில் பெருமாள்முருகன்: தமிழுக்கு குறிப்பிடத்தக்க தருணம்
Updated on
2 min read

பிரிட்டன் பதிப்பாளர் லாரா மெக்காலி நேர்காணல்

பெருமாள்முருகனின் ‘பூக்குழி’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான ‘Pyre’ உயரிய சர்வதேச இலக்கிய விருதுகளில் ஒன்றான புக்கர் விருதுக்கான நெடும்பட்டியலில் (13 புத்தகங்களில் ஒன்றாக) இடம்பெற்றுள்ளது. புக்கரின் 54 ஆண்டுக் கால வரலாற்றில் தமிழ் எழுத்தாளரின் நூல் ஒன்று இடம்பெறுவது இதுவே முதல் முறை. இந்த நாவலை பிரிட்டனைச் சேர்ந்த புஷ்கின் பதிப்பகம் பதிப்பித்துள்ளது. இந்தப் புக்கர் அங்கீகாரம் குறித்து புஷ்கின் இணைப் பதிப்பாளர் லாரா மெக்காலியுடனான (Laura Macaulay) நேர்காணல் இது.

பெருமாள்முருகனின் எழுத்துகளை எப்படிக் கண்டடைந்தீர்கள்? - காலச்சுவடு பதிப்பக எழுத்தாளர்களின் சர்வதேச உரிமங்களைக் கையாளும் இலக்கிய முகவர் பிரியா துரைசாமி 2017இல் ‘பூனாச்சி அல்லது வெள்ளாட்டின் கதை’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை எனக்கு அனுப்பினார்.

அந்த நாவல் முதல் வாசிப்பிலேயே என்னைக் கவர்ந்துவிட்டது. பெருமாள்முருகனின் மற்ற எழுத்துகளைத் தேடி வாசித்தேன். அப்படித்தான் முதலில் அவரது ‘மாதொருபாக’னின் பிரிட்டன் உரிமையை வாங்கி நாங்கள் பதிப்பித்தோம். தொடர்ந்து ‘வெள்ளாட்டின் கதை', ‘பூக்குழி’ ஆகிய நாவல்களையும் பதிப்பித்தோம்.

பெருமாள் முருகன் எழுத்துகள் குறித்த உங்கள் மதிப்பீடு? - அவரது எழுத்துகள், அரசியல், தத்துவரீதியாக முக்கியமானவை. அதே நேரத்தில், ஆழ்ந்த உணர்ச்சியைக் கையாளக்கூடியவை. உள்ளடக்கத்தை வெளிப்படுத்தக்கூடிய நல்ல வெளிப்பாட்டு முறையும் பெருமாள்முருகனின் எழுத்து களுக்கு உண்டு. தன் தனித்துவமான விவரிப்பின்வழி வேதனைகளை நமக்குக் கடத்தக்கூடிய தனித்துவமான எழுத்தாளர் பெருமாள்முருகன்.

பிரிட்டன் இலக்கியப் பரப்பில் பெருமாள்முருகன் நாவலுக்கான வரவேற்பு எப்படி இருக்கிறது?

பெருமாள்முருகனின் மூன்று நாவல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இங்கு குறிப்பிடத்தக்க எழுத்தாளராக அவர் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

இந்திய மொழி எழுத்துகளுக்கு பிரிட்டனில் என்னவிதமான வரவேற்பு உள்ளது? - இந்திய எழுத்துகளை வாசிப்பதற்கு இங்கு மிகுந்த ஆர்வம் காணப்படுகிறது. அந்த எழுத்துகள் நல்ல முறையில் வெளியிடப்பட்டுப் பாராட்டையும் பெறுகின்றன. ஆனால், நாங்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் வெளிவரும் இந்திய எழுத்துகளை மட்டுமே கவனிக்கிறோம். மற்ற இந்திய மொழிகளிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள் மிகக் குறைவு. அதாவது இந்திய மொழி இலக்கியங்களின் மிகச் சிறு பகுதியைத்தான் நாங்கள் வாசிக்கிறோம்.

ஆனால், இப்போது இந்திய எழுத்துகளுக்குக் கிடைக்கும் அங்கீகாரம் மூலம், மற்ற இந்திய மொழிகளின் படைப்புகள் குறித்த ஆர்வம் பிரிட்டன் பதிப்பாளர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. பெருமாள்முருகன் சர்வதேச புக்கர் பரிசுக்கான நெடும்பட்டியலில் இடம்பெற்றது தமிழ் மொழிக்கு முக்கியமான தருணம். இதனால் தமிழ் மொழி குறித்த கவனம் பிரிட்டன் பதிப்பாளர்களிடம் உருவாகும். சென்ற ஆண்டு கீதாஞ்சலி ஸ்ரீ தன் இந்தி நாவலுக்காக புக்கர் வென்றதும் குறிப்பிடத்தக்கது.

அனிருத்தன் வாசுதேவனின் மொழிபெயர்ப்பை எப்படி மதிப்பிடுகிறீர்கள்? - பெருமாள்முருகனின் தமிழ் விவரிப்பை அழகாகவும் துல்லியமாகவும் தெளிவாகவும் அனிருத்தன் வாசுதேவன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். வட்டார வழக்குச் சொற்களை மொழிபெயர்ப்பதில் உள்ள சவால்களைச் சமநிலையுடன் அனிருத்தன் கையாண்டுள்ளார். அவரது மொழிபெயர்ப்பு கவித்துவமாகவும் வெளிப்பட்டுள்ளது.

பெருமாள்முருகனின் ‘பூக்குழி’ ஏப்ரல் 18இல் வெளியிடப்படவுள்ள புக்கர் குறும்பட்டியலில் இடம்பெற, புக்கரை வெல்ல வாய்ப்பிருப்பதாக நினைக்கிறீர்களா? - கண்டிப்பாக. சுதந்திரமான நடுவர் குழுதான் இந்தப் பட்டியலை உருவாக்குகிறது. நெடும்பட்டியலில் இடம்பெற்ற நூல்களுக்கும் குறும்பட்டியலில் இடம்பெற வாய்ப்புள்ளது. நாங்கள் உன்னிப்பாகக் கவனித்துவருகிறோம்.

பெருமாள்முருகனின் ‘மாதொருபாகன்’, ‘வெள்ளாட்டின் கதை’ ஆகிய இரு நாவல்களையும் இதற்கு முன்பு இந்த விருதுக்காக இரு முறை எங்கள் பதிப்பகம் சார்பில் பரிந்துரைத்துள்ளோம்.

ஒரு மூத்த பதிப்பாளராக புக்கர் விருது சர்வதேச அளவில் ஏற்படுத்தும் தாக்கத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? - உலக இலக்கியத்தில் புக்கர் விருது முக்கியத்துவம் வாய்ந்தது. அது இலக்கிய அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பிரிட்டனில் இந்த விருது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சர்வதேச அளவிலும் இதே முக்கியத்துவத்தை இந்த விருது உருவாக்குவதாகவே நான் நினைக்கிறேன்.

- தொடர்புக்கு: jeyakumar.r@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in