மொழிபெயர்ப்பாளர் வெங்கட சுப்புராய நாயகர் 60: பிரெஞ்சு - தமிழ் மொழிப் பாலம்

மொழிபெயர்ப்பாளர் வெங்கட சுப்புராய நாயகர் 60: பிரெஞ்சு - தமிழ் மொழிப் பாலம்
Updated on
2 min read

பிரெஞ்சுச் சிந்தனையாளர்கள் ஃபூக்கோ, தெரிதா, ரொலான் பார்த், ழூலியா கிறிஸ்தவா ஆகியோரது படைப்புகள் ஆங்கிலம் வழித் தமிழில் வெளிவந்தன. ஆனால், அவை வாசகர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தின. ஏனெனில் அவை ஆங்கில வாசகரின் மொழியியல் பின்னணி, இலக்கியத்தளம் உள்ளிட்ட அம்சங்களைக் கருத்தில் கொண்டு மொழிபெயர்க்கப்பட்டிருந்தன.

பிரெஞ்சுப் பண்பாடு, சூழல் சரிவரப் புரிந்துகொள்ளப்படாமல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, அந்தக் கோட்பாடுகள் சிதைக்கப்பட்டிருந்தன. இந்தச் சிக்கல்களைக் களைந்த பிரெஞ்சு - தமிழ் மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவர் வெங்கட சுப்புராய நாயகர். பிரெஞ்சு சிந்தனைகளை நன்கு உணர்ந்து அதைத் தமிழ்த் தன்மைக்கு ஏற்ப மொழிபெயர்த்துவருகிறார் அவர்.

எளிமையான, நேரடி மொழிபெயர்ப்பு: 1994இல் பிரெஞ்சு அரசின் உதவியுடன் மூன்று மாதப் பயிற்சியைப் பிரான்சின் பெஸான்ஸோன், கிரேனோபில் ஆகிய ஊர்களில் உள்ள கல்வி நடுவங்களில் வெங்கட சுப்புராய நாயகர் பெற்றார். 2008இல் மீண்டும் பிரெஞ்சு அரசின் உதவியுடன் இரண்டு மாதங்கள் பாரீசில் தங்கி, தேசிய நூலகம் சென்று ஆய்வுமேற்கொண்டார்.

மொழிபெயர்ப்புத் திட்டம் ஒன்றை இவர் மேற்கொள்ளப் பிரெஞ்சு அரசு 2017இல் நிதிநல்கையை அறிவித்தது. அந்த உதவியுடன் 2018 மார்ச்சில் தன் மனைவியுடன் பிரான்சின் ஆர்ல் எனும் ஊரில் அமைந்துள்ள அனைத்துலக இலக்கிய மொழிபெயர்ப்பாளர் நடுவத்தில் மூன்று மாதங்கள் தங்கியிருந்து உய்பெர் அதாத் எனும் பிரெஞ்சு எழுத்தாளரின் ‘விரும்பத்தக்க உடல்’ புதினத்தைத் தமிழில் மொழிபெயர்த்தார்.

மூல ஆசிரியரை அவருடைய இல்லத்திலேயே சந்தித்து மொழிபெயர்க்கப்படும் புதினம் குறித்தும் அவருடைய இலக்கியப் பணிகள் குறித்தும் உரையாடும் வாய்ப்பினைப் பெற்றதோடு ‘ஃபுக்குஷிமா’ நூலின் ஆசிரியரான மிக்காயேல் ஃபெரியேவையும் சந்தித்து உரையாடும் வாய்ப்பைப் பெற்றார்.

‘அப்பாவின் துப்பாக்கி’ (2013), ‘சூறாவளி’ (2015), ‘ஃபுக்குஷிமா- ஒரு பேரழிவின் கதை’ (2016), ‘விரும்பத்தக்க உடல்’ (2018), ‘உல்லாசத் திருமணம்’ (2020), ‘வாழ்வு… இறப்பு… வாழ்வு… - பஸ்தேரின் வாழ்க்கை’, ‘வரலாறு’ (2020) உள்ளிட்ட பல நூல்களை பிரெஞ்சிலிருந்து அவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

அவரின் மொழிபெயர்ப்புக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக ‘ஃபுக்குஷிமா - ஒரு பேரழிவின் கதை’ நூலைச் சொல்லலாம். இந்நூலில் தொழில்நுட்பம், அறிவியல், சுற்றுச்சூழல் தொடர்பான பல்வேறு செய்திகள் வருகின்றன. அவற்றை எளிமையான நடையில் மொழிபெயர்த்து எல்லோரும் படிக்கும்படி செய்தது அவருடைய மொழிபெயர்ப்பின் வெற்றி.

நிலநடுக்கம், சுனாமி, அணு உலை விபத்து என மூன்று பேரிடர்கள் உலகத்திலேயே முதன்முதலாக 2011இல் நடந்தது ஜப்பானில்தான். இந்த நூல் 2012இல் பிரஞ்சு மொழியில் வெளியிடப்பட்டது. அடுத்து ஜப்பான், போர்த்துக்கீசிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. அடுத்ததாக உலக அளவில் தமிழில்தான் 2015இல் நாயகரால் இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டது.

மும்மொழிப் பாலம்: இவை எல்லாவற்றுக்கும் மேலாகத் தமிழின் செவ்விலக்கியங்களான குறுந்தொகை, ஐங்குறுநூறு ஆகியவற்றைப் பிரஞ்சில் அவர் மொழிபெயர்த்திருக்கிறார். ஆன்டன் செகாவ் சிறுகதைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்துள்ளார்; நாயகர் தமிழிலும் எழுதிவருகிறார்.

“சொற்களை எண்ணிக்கொண்டு இருக்கக் கூடாது. எடை போட வேண்டும்” என்ற பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர் தபான்க்கூரின் கருத்தையும் “மொழிபெயர்க்கும் முன் பலமுறை பிரதியை வாசித்தல் வேண்டும்” என்கிற பல்லார் என்பவரின் கூற்றையும் மொழிபெயர்ப்புப் பணிக்கான இலக்கணமாகக் கொண்டு நாயகர் செயலாற்றிவருகிறார்.

தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம் என மும்மொழிகளுக்கு இடையே மொழிப்பாலம் அமைத்து வரும் நாயகர், பிரெஞ்சு மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இணைப்பை உண்டாக்க ‘Destination: le tamoul parle’ என்ற நூலின் மூலமும் குறுந்தகட்டின் உதவியோடும் பிரெஞ்சு மக்கள் தமிழ் கற்றுப் பேச உதவும் கையேட்டை அளித்திருக்கிறார்.

கி.ராஜநாராயணன், எஸ்.ராமகிருஷ்ணன், எஸ்.பொ., பாவண்ணன், பா.செயப்பிரகாசம் போன்றோரின் சிறுகதைகளைப் பிரஞ்சில் மொழிபெயர்த்திருக்கிறார். பஞ்சாங்கம், இந்திரன், மாலதி மைத்ரி, கடற்கரய் போன்றோரின் கவிதைகளைப் பிரஞ்சில் மொழிபெயர்த்துள்ளார்.

மொழிபெயர்ப்பாளர் எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தியின் மாணவர் அவர். தன் மொழிபெயர்ப்பைப் படிக்கும் வாசகரை ஏமாற்றாத தெளிவு, எளிமை ஆகியவற்றுக்கு எப்போதும் முக்கியத்துவம் அளிப்பது அவரது மொழியாக்க அணுகுமுறை. அதில் அவர் வெற்றி கண்டுள்ளார் என்பதற்கு அவருடைய நூல்களே சாட்சி.

- புதுவை சீனு.தமிழ்மணி | மொழிபெயர்ப்பாளர், கவிஞர்; தொடர்புக்கு: ilakkiyammani@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in