Published : 23 Sep 2017 10:17 AM
Last Updated : 23 Sep 2017 10:17 AM

கற்றுக் கொண்டவர்கள் கொடுத்துச் சென்ற கொடைகள்

‘தி

இந்து’ நாளிதழின் ‘யாதும் தமிழே’ கொண்டாட்டத்தின் ஒரு அமர்வாக ‘புட் சட்னி’ ராஜ்மோகனின் ‘கற்றுக்கொண்டார்கள்; கொடுத்துச் சென்றார்கள்’ வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இத்தாலியிலிருந்து கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப வந்த பலரும் தமிழின் மீதும் தமிழ் இனத்தின் மீதும் கொண்ட அன்பால் தமிழ் மொழியைக் கற்றுக்கொண்டதோடு, பல அரிய படைப்புகளையும் அளித்து மிகச் சிறந்த தமிழ் ஆளுமைகளாக உருவெடுத்தனர். அவர்களில் சிலரைப் பற்றித் தன்னுடைய சுருக்கமான உரையின் மூலமாக நேர்த்தியாக விவரித்தார் ராஜ்மோகன். தேம்பாவணியையும், பேச்சு வழக்குக்கான கொடுந்தமிழ் நூலையும் அளித்த வீரமா முனிவர், ‘மெட்ராஸ் லிட்டரேச்சர் சொசைட்டி’யின் உறுப்பினரான எல்லீஸ், திராவிட மொழிகளின் வேர்ச்சொல்லை ஆய்வு செய்து அவை சம்ஸ்கிருதத்திலிருந்து வந்தவை அல்ல என்பதையும் அறுதியிட்டு வெளிப்படுத்தியவர் என்பதை ராஜ்மோகன் கூறியபோது, அரங்கத்தில் மகிழ்ச்சி ஆரவாரம் அடங்க வெகு நேரம் ஆனது.

தமிழின் பெருங்காதலரான ஜி.யு.போப், இளையான்குடியில் திருச்சபையை நிறுவியதோடு, திருநெல்வேலி சரிதம் என்னும் அந்த இடத்தின் புவியியல் கூறுகளை விவரிக்கும் நூலையும் எழுதிய கால்டுவெல் ஆகியோர் தமிழுக்கு ஆற்றிய பங்களிப்புகளை விவரித்தார் ராஜ்மோகன்.

உணர்வால் தமிழர்களாகத் தமிழ்ப் பணியாற்றிவரும் சம காலத்தவர்கள் சிலரையும் தம்முடைய உரையில் குறிப்பிட்டார் ராஜ்மோகன். திருவண்ணாமலையில் திருக்குறள் பேரவை நடத்தும் ஒரு நபரின் பெயர் சேட். இவரும் இவருடைய நண்பர்களும் வெள்ளைத் துண்டேந்தி கடை கடையாகத் திருக்குறள் பேரவை கூட்டத்துக்கு உங்களால் முடிந்த உதவியைக் கொடுங்கள் என்று கேட்டு கூட்டம் நடத்துகின்றனர்.

கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக இருக்கும் அமெரிக்கரான ஜார்ஜ் எல். ஹார்ட் தமிழ் ஒரு செம்மொழி என்று தன் ஆய்வுக் கட்டுரையில் எடுத்துரைத்தார். இதன் அடிப்படையிலேயே தமிழுக்குச் செம்மொழி அங்கீகாரம் கிடைத்தது. பிறப்பால் இனத்தால் உலகின் எந்தப் பகுதியில் இருப்பவர்களையும் இணைக்கும் பாலமாக தமிழ் விளங்குவதையும் இந்த உறவுப் பாலத்தை உறுதிப்படுத்த தமிழர்களாகிய நாம் செய்ய வேண்டிய பணிகளையும் கடமைகளையும் உணர்த்தும் அமர்வாக ‘கற்றுக்கொண்டார்கள் கொடுத்துச் சென்றார்கள்’ நிகழ்ச்சி அமைந்ததில் வியப்பில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x