

இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளை விதிகளுக்குள் அடங்காதவை என்று வரையறுத்துவிடலாம். ‘குறுக்குத் தெருவும் குறுந்தாடிக்காரனும்’ என்னும் முதல் கதை, சென்னையில் பணிப்பெண்ணாக வேலை பார்க்கும் தமிழ்ப் பெண்ணுக்கும் பிரெஞ்சு ஆணுக்கும் இடையிலான நட்பை முதிர்ச்சியுடன் கையாள்கிறது.
ரத்த பந்தங்களால் இணைக்கப்படாதவர்களும் ஒரே குடும்பமாக வாழ முடியும் என்னும் அழகான சிந்தனையை இக்கதை விதைக்கிறது. உள்ளடக்கம் சார்ந்து மிகத் துணிச்சலான கதை என்று குறிப்பிடத்தக்க ‘விரகதாபம்’ உயர்வர்க்கப் பெண்கள் இருவரிடையே முகிழும் தற்காலிகத் தன்பாலின ஈர்ப்பு உறவினூடாகத் தனித்து வாழும் நடுத்தர வயதுப் பெண்களின் உளவியல் அழுத்தங்களைப் பேசுகிறது.
‘டிண்டர் முத்தம்’ இன்றைய இளைஞர்கள் தம் இணையரைத் தேர்ந்தெடுப்பதிலும் அவர்களின் விருப்பங்கள், தெரிவுகள் ஆகியவை சார்ந்த முடிவுகளிலும் தாக்கம் செலுத்தும் பொதுவான தர்க்க சிந்தனைக்குப் பிடிபட்டுவிடாத காரணிகளைக் கையாள்கிறது. கதைகளில் பாலியல் உறவு சார்ந்த வர்ணனைகள் எங்கும் மலினமான கிளர்ச்சியைத் தூண்டவில்லை. மாறாகப் பாலியல் உறவுகளின் உளவியல், புற அழுத்தங்கள் செலுத்தும் தாக்கம், பாலின அரசியல் ஆகியவற்றைப் பேசுகின்றன.
பல வகையான பெண்களின் மனங்களை மிக நெருக்கமாகப் படம்பிடித்துக் காண்பிக்கும் லாகவம் ஆசிரியருக்கு வாய்த்துள்ளதைப் பெரும்பாலான கதைகளில் உணர முடிகிறது. பெண்ணியம், பாலின சமத்துவம் சார்ந்த சிந்தனைகள் துருத்தாமல் வெளிப்படுகின்றன. நடையிலும் கூறுமொழியிலும் ஆசிரியர் புகுத்தியிருக்கும் புதுமைகள் பெரும்பாலும் வாசிப்பை இனிமையாக்க உதவியிருக்கின்றன. - கோபால்
ஜன்னல் மனம்
தீபா ஸ்ரீதரன்
கடல் பதிப்பகம், மதுரை
விலை: ரூ.200
தொடர்புக்கு: 86808 44408
போரால் தவிப்பவனின் கதை: இரண்டாம் உலகப் போர் காலகட்டத்திய நாவல் இது. ஜெர்மனி ஆக்கிரமிப்புக்கு உள்ளான கிழக்கு ஐரோப்பியப் பகுதியில் வசிக்கும் சிறுவனின் கதையாக இந்த நாவல் விரிவுகொள்கிறது. யூதனான அவனை, அவனது பெற்றோர் வரும் பேராபத்திலிருந்து காப்பாற்ற கிராமப் பகுதிக்கு அனுப்பிவிடுகின்றனர். அவன் முதலில் மார்த்தா என்ற பெண்ணிடம் தஞ்சமடைகிறான்.
அவர் இறந்துவிட, அவனது பயணம் தொடர்கிறது. உணவுக்காகவும் தங்கும் இடத்துக்காகவும் அந்தச் சிறுவன் அவனுக்குப் பரிச்சயமில்லாத தெருக்களில் அலைந்து திரிகிறான். வேற்று ஆளான இவன் அவர்களுக்கு விநோதமானவனாகத் தெரிகிறான். அதனால் அவர்களால் சித்ரவதைக்கு ஆளாகிறான். இந்த நாவலில் லெக் என்கிற கதாபாத்திரம் பறவைகளைப் பிடித்து அவற்றுக்கு வண்ணம் பூசி மீண்டும் பறக்க விடுகிறது.
அந்தப் பறவைகளும் தப்பிவிட்ட மகிழ்ச்சியுடன் தங்கள் கூட்டத்துடன் இணையும்போது, அவற்றின் மேல் பூசப்பட்ட வண்ணத்தால் பீதி அடையும் பறவைக் கூட்டம், அவற்றைக் கொத்திக் கீழே வீழ்த்தும். இந்தக் காட்சி ஒருவகையில் இந்த முழு நாவலுக்குமான மையம் எனலாம். போலந்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஜெர்ஸி கோஸின்ஸ்கி தனது சொந்த அனுபவத்தை எழுதியதாக முதலில் கூறப்பட்டது. ஆனால், பின்னால் அதை அவரே மறுத்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.- ஜெய்
வண்ணம் பூசிய பறவை
ஜெர்ஸி கோஸின்ஸ்கி
(தமிழில்: பெரு.முருகன்)
வானவில் புத்தகாலயம்
விலை: ரூ.377
தொடர்புக்கு: 720050073
ஸௌராஷ்ட்ர மொழியில் தமிழ் இலக்கியம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது ஆகிய நூல்களை ஸௌராஷ்ட்ர மொழியில் மொழிபெயர்த்திருக்கிறார் சூர்யா ஞானேஸ்வர். தமிழ் பேசும் ஸௌராஷ்ட்ர மக்கள் பதினெண் கீழ்க்கணக்குப் பாடல்களின் இனிமையைப் புரிந்துணரும் வகையில் அந்தப் பாடல்களுக்குத் தமிழிலும் விளக்கம் அளித்துள்ளார்.
ஸௌராஷ்ட்ர மக்கள் தங்கள் மொழியைப் புரிந்துகொள்வதற்காக ஸௌராஷ்ட்ரீ தமிழ் அகராதியையும் இவர் வெளியிட்டுள்ளார். இவை தவிர, சிலப்பதிகாரத்தில் சில காண்டங்களையும் பாரதி தாசனின் குடும்ப விளக்கையும் ஸௌராஷ்ட்ர மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். - ப்ரதிமா
கபிலர் பாடிய இன்னா நாற்பது
(ஸௌராஷ்ட்ர மொழியில்)
சூர்யா ஞானேஸ்வர்
ஸௌராஷ்ட்ரீ ஸாஹித்ய பிரசுரம், மதுரை.
விலை: ரூ.100
தொடர்புக்கு: 9865040447/8098840447
கல்கியின் சினிமா விமர்சனம்: எழுத்தாளர் கல்கி அவரது சரித்திர நாவல்கள் வழி கவனம்பெற்றவர். அவரது ‘பொன்னியின் செல்வன்’ நாவல் இன்றும் வாசகர் விரும்பி வாசிக்கும் இலக்கியப் படைப்பு. கல்கியின் தனித்துவமான அங்கத நடையை அறிய அவரது பத்திரிகை எழுத்துகளை வாசிக்க வேண்டும். அப்படியான எழுத்துகளை இந்த நூல் தொகுத்தளித்துள்ளது. அவர் 1931 - 1953 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ‘கல்கி’, ‘ஆனந்த விகடன்’ ஆகிய இதழ்களில் எழுதிய விமர்சனங்களைப் பேராசிரியர் ஸ்வர்ணவேல் தொகுத்திருக்கிறார்.
சங்கீதம், நாடகம், சினிமா எனப் பலதரப்பட்ட வடிவங்களை விமர்சித்து கல்கி எழுதியுள்ளார். நடையில் எளிய மொழியைக் கையாண்டுள்ளார். அதுபோல் துணிந்து தவறுகளையும் சுட்டிக்காட்டியுள்ளார். ‘பக்த குசேலன்’ படத்துக்கான விமர்சனத்தில், ‘கிருஷ்ண பரமாத்மா தலையை அவ்வளவு ஆட்ட வேண்டியதில்லை. பகவானுக்குக் கழுத்து சுளுக்கிக் கொள்ளப்போகிறதே என்று ஒவ்வொரு கணமும் பார்ப்பவர்களுக்குக் கவலையாயிருக்கிறது’ என சுவாரசியமாக எழுதியிருக்கிறார் கல்கி. - விபின்
ஆடல் பாடல் சினிமாவின்
கல்கியின் விமர்சனங்கள்
பதிப்பாசிரியர்: ஸ்வர்ணவேல்
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ.560
தொடர்புக்கு: 99404 46650