

ஜூலியஸ் என்பவர் எழுதியிருக்கும் தன் வரலாற்று நூல், ‘ஊருக்கு ஒரு குடி’. ‘கருக்கு’ பாமாவைப் போலவே தலித் கிறித்துவப் பின்புலத்திலிருந்து வந்திருப்பவர். ஆனால், இந்த நூலின் களமும் பின்னணியும் முற்றிலும் வேறானவை. ஆதி திராவிடச் சமூகத்தினருக்கு வண்ணார் பணி செய்யும் குடும்பத்தைச் சார்ந்தவர் ஜூலியஸ்.
விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனத்துக்கு அருகில் தேவனூர் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். கிறித்துவக் குடும்பம் என்றாலும் ஆதிதிராவிடர் தெருவிலேயே சலவைத் தொழிலாளிகளாக வாழ்ந்த தனது பெற்றோர் பட்ட கஷ்டங்களையும் சந்தித்த அவமதிப்புகளையும் இந்த நூலில் பதிவுசெய்திருக்கிறார்.
அவரது 16 வயது வரையிலான சம்பவங்களால் கோக்கப்பட்டிருக்கும் இந்த நூல், இன்றிலிருந்து 20 ஆண்டுகளுக்கு முன்பு அந்த ஊர் எப்படியிருந்தது என்பதன் வரலாறாகவும் இருக்கிறது.
வீடுகளில் ராச்சோறு எடுத்துச் சாப்பிடுவது, ஆதி திராவிடர் சமூகத்தினரின் வீடுகளில் திருமணத்தின்போது தட்டு மாற்றுவது, குடவிளக்கு, மாவிளக்கு தயாரிப்பது, பிணம் தூக்கிப் போகும்போது நடைப்பாவாடை விரிப்பது, நெய்ப் பந்தம் தயாரிப்பது, பெண்கள் பூப்பெய்தும்போது சடங்கு செய்வது, கோயிலில் தீப்பந்தம் பிடிப்பது என வண்ணார் சமூகத்தினர் செய்யும் வேலைகளையெல்லாம் ஜூலியஸ் பதிவுசெய்திருக்கிறார்.
நூறு குடும்பம் இருந்தாலும் அவர்களது துணி ஒவ்வொன்றையும் அடையாளம் காணும் விதமாக எப்படிக் குறி போடுவார்கள் என்று ஜூலியஸ் விவரிக்கும்போது உழை மண்ணும் சோடா உப்பும் வெள்ளாவி அடுப்பும் நம் கண் முன்னே காட்சியாய் விரிகின்றன.
ஆதிதிராவிடச் சமூகத்தில் வண்ணார், நாவிதர், காவல்காரர் முதலான சேவைப் பிரிவினரும் தச்சர், கொல்லர், நெசவாளர் முதலான கைவினைஞர்களும் உண்டு. ஆதிதிராவிடர்களின் சமூக, பொருளாதார, பண்பாட்டு நடவடிக்கைகளில் சேவை சாதியினருக்கு முக்கியப் பங்குண்டு. ஆதிதிராவிடச் சாதியிலும் இருக்கும் இந்தப் படிநிலை, அதன் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வு, சாதிய சமூகத்தின் ‘கொடை’.
ஜூலியஸின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியவை கல்வியும் தையல் பயிற்சியும்தான். எட்டாம் வகுப்பு வரைதான் அவர் படிக்க முடிந்தது. அதுவே அவருடைய அந்தஸ்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அடுத்ததாக அவர் தையல் கற்றுக்கொண்டு பலருக்கும் துணிகளைத் தைத்துக் கொடுக்க ஆரம்பித்தது சாதிய இறுக்கத்தில் ஒரு நெகிழ்வை உருவாக்கி, அவருக்குத் தன்னம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது.
பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இழிவு என்னும் புதை குழியிலிருந்து மேலேறி வருவதற்கான ஏணி கல்விதான் என்பதை ஜூலியஸின் வாழ்க்கையும் உணர்த்துகிறது.
வீடுவீடாகச் சோறு எடுத்துதான் சாப்பிட வேண்டும் என்ற அளவுக்கு ஜூலியஸ் வீட்டில் வறுமை கிடையாது. அவர்கள் வாத்து வளர்க்கிறார்கள். மற்ற வேலைகளுக்குப் போகிறார்கள். ஆனால், பழக்கத்தின் காரணமாகவே தன்னுணர்வு இல்லாமல் அதைச் செய்து வந்திருக்கிறார்கள்.
அப்படிச் செய்யாதீர்கள் எனப் பாதிரியார் ஒருவர் தடுக்கும்வரை அவர்களுக்கு அது மானக் குறைவாகவே தெரியவில்லை. இப்படிச் சுரணை இல்லாமல் இருப்பதால்தான் பட்டியல் சாதிகளின் பெயர்கள் இன்னும் ‘ன்’ விகுதியோடு இழிவாகக் குறிப்பிடப்படுகின்றன.
சுதந்திரம் என்பது சுயமரியாதையோடு பிரிக்க முடியாத அங்கம். சுயமரியாதை உள்ளவர்களால்தான் சுதந்திரத்தை அனுபவிக்க முடியும். அந்தப் பாதிரியார் சொல்லுகிற வரை ஜூலியஸ் குடும்பத்தினருக்கு இந்தத் தன்மான உணர்வு வராமல் போனது இந்தச் சாதிய அமைப்பு எந்த அளவுக்கு மக்களைச் சுரணை அற்றவர்களாக ஆக்கியிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
ஆதி திராவிட சமூகத்தில் வண்ணார் பணி செய்கிறவர்கள், இப்போது ஏறக்குறைய இல்லை என்றே சொல்லலாம். ஜூலியஸிடம் இது பற்றிக் கேட்டபோது ஏதோ ஒரு ஊரில் மட்டும் இன்னும் துணி வெளுக்கிறார்கள் எனத் தெரிவித்தார். ஜூலியஸ் இப்போது ‘உயிர் வலுவாக்க மையம்’ என்ற நிறுவனத்தை நடத்துகிறார்.
தனிப் பயிற்சி கொடுத்து நிராதரவான மாணவர்கள் பலரைக் கல்லூரியில் சேர்த்திருக்கிறார். வண்ணார் குடும்பத்துப் பிள்ளைகள் மட்டுமின்றி ஆதரவற்ற மற்ற பிள்ளைகளையும் சேர்த்துப் படிக்க வைக்கிறார். 100 பட்டதாரிகளை உருவாக்க வேண்டும் என்பது அவரது ஆசை. ‘அவமதிப்புகளை ஆற்றலாக மாற்ற வேண்டும்’ என அம்பேத்கர் சொன்னதை நிறைவேற்றிக் காட்டியிருக்கிறார் ஜூலியஸ்.
- ரவிக்குமார் எழுத்தாளர் | நாடாளுமன்ற உறுப்பினர்; தொடர்புக்கு: writerravikumar@gmail.com