

மகாகவி சுப்பிரமணிய பாரதியார், ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டிற்கு எழுதிய கடிதங்கள், அனுப்பிய செய்திகள், அவரது வாழ்க்கைப் பதிவுகள் தொகுக்கப்பட்டு, ‘SUBRAMANIA BHARATI - Writings in The Hindu’ என்கிற நூலைப் பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி தொகுத்து, முன்னுரையும் குறிப்புகளையும் எழுதியுள்ளார்.
1904 இல் ‘மெட்ராஸ் இந்து சீர்திருத்தச் சங்கம்’ சார்பில் சென்னையில் சமூகச் சீர்திருத்த மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் உரையாற்றிய வழக்கறிஞர் சங்கரன் சமூகச் சீர்திருத்தத்தின் அவசியம் பற்றிப் பேசியதைப் பாராட்டி பாரதியார் கடிதம் எழுதினார் (27.12.1904).
‘சமூகச் சீர்திருத்தம் இல்லாமல் நமது அரசியல் சீர்திருத்தம் ஏற்படும் என்பது வெறும் கனவு, மாயை.’ மேலும், ‘தேசிய உணர்வு இல்லாமல் அரசியல் விடுதலை சாத்தியமில்லை... வர்ண முறை அல்லது சாதி முறை நிலவும் இடத்தில் தேசிய உணர்வு தோன்ற முடியாது’. சாதி வேறுபாட்டை அகற்றிட, சமூகச் சீர்திருத்தம் தேவை’ என்கிறார்.
பாரசீகர்களிடையேயும் (இன்றைய ஈரான், ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான் பகுதிகள்) இந்து நால்வர்ணம் உள்ளதாகப் பேராசிரியர் கே.சுந்தரராமய்யர் கருத்து ‘தி இந்து’ நாளேட்டில் வெளியானது. பாரதியார் இதற்கு மறுப்பாக எழுதிய கடிதத்தில் (19.11.1915) ‘‘தென்னிந்தியாவில் வைதீ கத்தின் மிக உறுதியான சார்பாளராக விளங்கும் இப்பேராசிரியர் நவீன பிராமணர்களை பாரசீக மிலேச்சர்களின் உறவினர்களாகக் கருதுவது மிக வேடிக்கையாக உள்ளது.
வைதீக சம்பிரதாயப்படி நாம் பிரம்மாவின் தலையில் இருந்து நேராக உதித்தவர்கள் என்றல்லவா இவ்வளவு காலமாகக் கருதிவந்தேன். சாதாரண பாரசீகர்களுக்கும் இதே உயரிய உற்பத்தியை பேராசிரியர் வழங்கமாட்டார் என்று நம்புகிறேன்” என்று எள்ளி நகையாடுகிறார்.
மேலும், “பேராசிரியர் குறிப்பிடும் ஐரோப்பிய அறிஞர்கள் எல்லா குடிபெயர்ந்து வந்த மக்களையுமே ஆரியர் என்றுதான் கருதுகின்றனர். பேராசிரியர் இதை மறுக்கிறாரா?” என்றும் கேட்கிறார். பாரதியார் தன்னுடைய கடிதத்தின் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்கிறார். பிரம்மனின் தலையில் இருந்து பிராமணர்கள் பிறந்ததாகச் சொல்லும் மனுநீதியைச் சாடுகிறார், மறுபுறம் சாதிகள் வேத காலத்தில் அல்ல, இடைப்பட்ட காலத்தில்தான் உருவாகியுள்ளன என்பதையும் அழுத்தமாகச் சொல்கிறார்.
பச்சையப்பன் கல்லூரியில் ஜே.சி.ரோலோ என்பவர் இந்திய மாணவர்களுக்குப் பயிற்று மொழியாக ஆங்கிலத்தை மட்டும் பயன்படுத்துவது சரியே என்று வலியுறுத்தினார். பாரதியார் இதை மறுத்துக் கடிதம் எழுதியுள்ளார். ‘‘தாய் மொழியே ஒருவரது கல்விக்குரிய இயற்கையான, மனிதப் பாங்குடைய போதனா மொழியாகும். இதில் எவருக்காவது சந்தேகம் இருப்பின் அவர்கள் ஜப்பான், ஸ்காண்டிநேவியா, இங்கிலாந்து, இத்தாலி, மெக்சிகோ ஆகிய தேசங்களுக்கோ அல்லது மனிதர்கள் மனிதர்களாக வாழும் வேறு தேசங்களுக்கோ சென்று அங்குள்ள கல்விமான்களை விசாரித்துக்கொள்ளலாம்.
தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டோமானால் பிழையாக வேறொரு அயல் மொழியைப் போதனா மொழியாகக் கொண்டிருப்பது அதிர்ச்சிதரக் கூடியது. ஏனெனில் துல்லியமான விஞ்ஞான வெளிப்பாட்டிற்கு ஆங்கிலத்தை விடவும் தமிழே சிறந்ததாகும்’’ (19.10.1914).
ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பிறகு விடுதலை பெற்ற பால கங்காதர திலகர் வெளியிட்ட அறிக்கை பற்றி எழுதுகிறபோது ‘எங்களை முட்டாள்தனமாக ஒடுக்குபவர்களுக்கு நாங்கள் சொல்ல விரும்புவதெல்லாம், சிறு மதியாளர்களே சல்லித்தனமாக விசயங்களில் எங்களுக்கு சில காலம் தொந்திரவு தரலாம். ஆனால் உங்களால் எங்களை ஒடுக்கிவிட முடியாது’ எனக் கூறியிருக்கிறார்.
1917இல் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாடு சென்னையில் நடந்தது. இந்த மாநாட்டிற்கு முன்னதாக, காங்கிரஸ் கட்சி கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறை குறித்து பாரதியார் ஒரு கடிதம் எழுதினார்: ‘‘நாட்டின் விவகாரங்களை வழிநடத்த விரும்பும் மனிதர்கள் தாங்கள் பரம்பரையாகப் பெற்ற அல்லது தமக்கென அமைத்துக்கொண்ட அனைத்து விதமான அடிமைத்தனங்களையும் கைவிட வேண்டும்’’.
தான் சார்ந்துள்ள அரசியல் கட்சி கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறையைப் பற்றி நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஒரு தெளிவான பார்வையுடன் பாரதி இருந்துள்ளார். நாம் பாரதியை வழிபாட்டுப் பொருளாக்குவதை அனுமதிக்க முடியாது. அவரின் விடுதலைக் கனலை நெஞ்சில் ஏந்தி, சமூக முன்னேற்றப் பாதையில் முன் செல்வோம். அதுவே பாரதியாரின் இலக்குகளை வெல்லச் செய்திடும்.
- ஜி.ராமகிருஷ்ணன் | மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்; தொடர்புக்கு: grcpim@gmail.com