நூல் வெளி: ஊரும் பேரும்

வெ.வேதாசலம்
வெ.வேதாசலம்
Updated on
3 min read

‘பாண்டிய நாட்டு ஊர்களின் வரலாறு’ என்கிற நூல் முனைவர் வெ.வேதாசலம் எழுதியதாகும். ஊர்கள், அவற்றின் அமைப்பு முறை, பிரம தேயங்கள் எவ்வாறு தோன்றின, வணிக நகரங்களாகிய பட்டினம், பட்டணம் எவ்வாறு காலூன்றின, படை வீரர்களுக்கான படைப்பற்று எவ்வாறு உதித்தன, அவற்றின் வளர்ச்சியும் பெயர்களும் எவ்வாறு அமைந்தன, எவ்வாறு முன்னொட்டு, பின்னொட்டு கொண்டு விளங்கின என்பன போன்றவற்றை வேதாசலம் விரிவாக இந்நூலில் விளக்கியுள்ளார். மேலும் இவ்வகையான குடியேற்றங்கள் எப்படி நிலவுடைமையை அடிப்படையாகக் கொண்டு விளங்கின, எப்படி வரிகள் வசூலிக்கப்பட்டன என்பவை பற்றியும் விளக்கியுள்ளார்.

இந்நூலாசிரியர் இந்த நூலைப் பல ஊர்களுக்கும் பிரம தேயங்களுக்கும் வணிக நகரங்களுக்கும் சென்று கல்வெட்டுகளைத் தேடிக் கண்டு, ஆராய்ந்து எழுதியுள்ளார்.

பிரம தேயங்களைப் பற்றிய அத்தியாயம் படிக்கப் படிக்க ஆவலைத் தூண்டி, வெகு வேகமாகச் செல்கிறது. முதல் அத்தியாயம் பாண்டிய நாட்டின் வரலாற்றைப் பற்றி சுவைபடக் கூறுகிறது. முற்கால, இடைக்கால, பிற்காலப் பாண்டியர் வரலாறு, அங்குள்ள குளங்கள், கண்மாய்கள், வைகை, தாமிரபரணி போன்ற ஆறுகள் அவற்றின் கரைகளில் ஏற்பட்ட வயல்கள், பாசன வசதிகள், குடியேற்றங்கள் பற்றி விவரிக்கிறது.

பாண்டிய நாட்டின் பொருளாதார, சமூக, பண்பாட்டு வளர்ச்சிக்கு அந்நாட்டிலுள்ள ஆறுகளும், குளங்களும் குறிப்பிடத்தக்க முறையில் உறுதுணை புரிந்துள்ளன. இவற்றின் கரையிலேயே குடியிருப்புகள், கோயில்கள், சமய நிறுவனங்கள் தோன்றின என்று கூறுகிறார் ஆசிரியர்.

இரண்டாவது அத்தியாயத்தில் பாண்டிய நாட்டு ஊர்களின் பெயர்கள் எவ்வாறு அமைந்தன, அவற்றின் அமைப்பு பற்றிக் கூறியுள்ளார். நீரும், வயலும் சூழ்ந்த இடமே கிராமம் (ஊர்). ஊரைக் குறிக்கப் பல சொற்கள் இருந்தன. இச்சொற்களில் காணப்படும் பின்னொட்டுகளைக் கொண்டு (எ.கா. மங்கலம், சதுர்வேதி மங்கலம், புரம், பட்டினம், ஊர்) அவ்வூர்களின் நிலவுடமை, சமூகத் தன்மை குறித்து அறிய முடியும் என்று வேதாசலம் கூறுகிறார். நத்தம், நத்தம்பாடி, பிடாகை, ஸ்ரீ கோயில், கோயில் பல்வகை நிலங்கள், குளம், ஊருணி, கிணறு, கால் ஓடை, சிறு வழி, பெரு வழி, தெரு, பெருந்தெரு, சிற்றூர், பேருர் போன்றவற்றைப் பற்றிப் பல செய்திகளைத் தருகிறார்.

வெ.வேதாசலம்
வெ.வேதாசலம்

பொதுவாக, ஓர் ஊரில் நிலவுடைமையாளர்கள், கைத் தொழிலாளர்கள், வயலில் இறங்கிப் பணியாற்றும் வேலையாள்கள் (உழுகுடிகள்) ஆகிய மூன்று சமூக அடுக்குகள் இருந்தன. இவர்களுக்கென்று தனித்தனிக் குடியிருப்புகள் ஊரில் இருந்தன. பிரமதேயத்தில் நிலவுடைமையாளர்களான பிராமணர்கள், நிலங்களுக்குரிய குத்தகைதாரர்கள், கைத்தொழிலாளர்கள்.

உழுகுடிகள் என்று ஊர்ச் சமூகம் நான்கு அடுக்குகளாகப் பிரித்து, நால்வருக்கும் தனித்தனியாக குடியிருப்புகள் இருந்தன என்று இந்நூல் கூறுகிறது. ஊரும் அரசும் கோயில் காரியங்களில் ஒன்றுபட்டுச் செயலாற்றின. கோயில்கள் மூலம் எல்லா வகை ஊர்களிலும் அரசு தன்னை முதன்மைபடுத்திக் கொண்டது என்பதை இந்த நூல் அறியத் தருகிறது.

பிரமதேயங்கள் – பிராமண ஊர்கள் என்று தலைப்பு இடப்பட்ட அத்தியாயம் இப்புத்தகத்தின் முக்கியமானது. எவ்வாறு பிரமதேயங்கள் – பிராமணக் குடியேற்றங்கள் தோன்றின என்று தெளிவாகக் கூறப்படுகிறது. ‘சங்க காலத்தின் இறுதியில் (பொ.ஆ.(கி.பி) மூன்றாம் நூற்றாண்டளவில்) நிலவுடைமையை அடிப்படையாகக் கொண்டு மங்கலம் என்ற பெயரில் அந்தணர்களுக்கு ஊர்களைத் தானமாகத் தரும் வழக்கம் தமிழ்நாட்டில் தொங்கிவிட்டது’ என்ற கூற்றை இந்நூல் முன்வைக்கிறது.

பக்தி இயக்கத்திலும் தோன்றிய கோயில் வழிபாட்டு மரபோடு வேத பாராயண மரபை இணைத்தமையாலும் தமிழ் நாட்டில் பிரமதேயங்கள் பெருகின என்ற வாதத்தை இந்நூலாசிரியர் முன்வைக்கிறார்.

பிரமதேயங்கள் ஆற்றங்கரைகளிலேயே ஏற்படுத்தப் பட்டன. அவை வளமான நிலங்களைக் கொண்டு விளங்கின என்ற விவரங்கள் இந்நூலில் இருந்து கிடைக்கின்றன. பிரமதேயங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சபைகள் விளங்கின. பல வாரியங்கள் இருந்தன. பாசன வாரியம் இருந்தது. அரசும் சபையும் கோயில் காரியங்களில் ஒன்றுபட்டுச் செயல்புரிந்தன. சபை என்ற அவையே பிரம தேயங்கள் நிர்வகித்தது.

பாண்டிய நாட்டில் இன்றைய மதுரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி போன்ற மாவட்டங்களில் 152 சதுர்வேதி மங்கலங்களையும் அவற்றின் பழைய பெயர்களையும் இன்றைய பெயர்களையும் இந்நூல் பட்டியலிட்டு அளிக்கிறது.

அடுத்து எழுதப்பட்டுள்ள வணிகர் சமூக நகரங்கள் என்ற இயலில், எவ்வாறு வணிகர் நகரங்களாகிய பட்டினம், பட்டணம் உருவாகின, நியமம், ஆவணம், பெருந்தெரு என்றால் என்ன என்று விவரிக்கிறது. நகர மக்களைப் பற்றி பல விவரங்கள் நமக்குக் கிடைக்கின்றன.

மேலும் வாணியச்சேரி, பேரங்காடி, எறி வீரப்பட்டினம், வணிகர்களின் குழுக்கள், வீரக் கொடிபாரி பற்றி சுவையான செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன. வணிக நகரங்களின் நிர்வாக சபையின் தகவல்கள் நமக்குக் கிடைக்கின்றன. அரசு நகரத்தின் வரியை நிச்சயித்து, நகர மக்களிடம் பல தரப்பட்ட வரிகள் வாங்கியுள்ளது என்று நூலாசிரியர் கூறுகிறார்.

இந்நூலில் பல வரைபடங்கள், புகைப்படங்கள் உள்ளன. வேதாசலம் மிகுந்த அர்ப்பணிப்போடு இதை எழுதியுள்ளார். நூற்றுக்கணக்கான கல்வெட்டுகளில் உள்ள செய்திகளைப் படித்து, கவனத்துடன் எழுதிய நூல் இது. இப்புத்தகம், ஆசிரியரின் பாண்டிய நாட்டு வரலாற்றைப் பற்றிய ஆழ்ந்த புலமையைக் காட்டுகிறது. இந்நூல் வரலாற்று ஆசிரியர்கள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் படித்து உய்ய வேண்டிய நூல்.

பாண்டிய நாட்டு ஊர்களின் வரலாறு
(ஊர், பிரம தேயம், வணிக நகரம், படைப்பற்று)
முனைவர் வெ.வேதாசலம்
தனலட்சுமி பதிப்பகம்,
தஞ்சாவூர் – 613 004.
விலை: ரூ.450
தொடர்புக்கு: 9443544405

- டி.எஸ்.சுப்பிரமணியன் | மூத்த பத்திரிகையாளர்; தொடர்புக்கு: cholamurals@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in