நூல் நயம்: சொல் அருவி

நூல் நயம்: சொல் அருவி
Updated on
1 min read

ஔவை நடராசன், நாடறிந்த தமிழ் அறிஞர். நற்றிணை, சிலப்பதிகாரம் உள்ளிட்ட பல படைப்புகளுக்கு உரை எழுதியுள்ளார். அரசுத் துறைச் செயலாளராக, பல்கலைக்கழகத் துணை வேந்தராகப் பணியாற்றியவர். பல உலக நாடுகளில் தமிழைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர். இவை எல்லாவற்றிற்கும் மேல் நல்ல பேச்சாளர் என அறியப்பட்டவர். சொல் அருவியாகப் பொழிந்தவர்.

இவர் ஆற்றிய சொற்பொழிவுகள் தொகுக்கப்பட்டு, ‘ஒளவை சொல் கேளீர்’ என்னும் தலைப்பில் நூலாக வந்துள்ளது. தமிழ்ச் சங்கத் தமிழ் வளங்கள், தொல்காப்பியம் போன்ற படைப்புகள் பற்றியும் பாரதி ஆய்வாளர் சீனி விசுவநாதன், பெரியார், வள்ளலார், சிலம்பொலி செல்லப்பன் போன்ற ஆளுமைகள் பற்றியும் ஒளவையார் ஆற்றிய உரைகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

பிள்ளைத் தமிழ், தமிழாற்றுப்படை போன்ற இலக்கிய வடிவங்கள் குறித்து அதன் ஆதி முதல் அழகாகத் தன் உரையின் வழி ஒளவை விளக்கியுள்ளார். சுவையும் ஆழமும் கொண்ட இந்த உரைகள் இலக்கிய வாசகர்கள் மட்டுமின்றி அனைவரும் வாசித்துணர வேண்டிய நல்ல படைப்பு. - விபின்

ஒளவை சொல் கேளீர்
தொகுப்பு: ஒளவை அருள்
ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழக இலவச வெளியீடு
தொடர்புக்கு: 044 43418700

அயல்மொழி நூலகம் | முழுமையான இந்திய வரலாறு: பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தின் தெற்கு, தென் கிழக்கு ஆசியப் பிரிவின் தலைவராகப் பணியாற்றியவரும், ஒட்டுமொத்த தெற்கு ஆசியாவிலும் தொல்லியல் ஆய்வில் ஈடுபட்ட அனுபவம் உடையவருமான டி.ரிச்சர்டு பிளர்டன், பொருள்களின் மூலம் இந்திய வரலாற்றைத் தொகுத்திருக்கும் நூல் இது.

உலகின் மிகப் பழமையான, துடிப்பான பண்பாட்டு நிலங்களில் ஒன்றான இந்தியாவின் வரலாறு, காலவரிசைப்படி கலைப் பொருள்களின் வழியாக இந்நூலில் சொல்லிச் செல்லப்படுகிறது. வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்துப் பொருள்களையும் உள்ளடக்கியிருக்கும் இந்நூல், இந்தியாவின் சமயம், ஓவியம், சிற்பம், உடை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி நவீன கால வரலாறுவரை முழுவதுமாக வண்ணப் படங்களுடன் பதிவுசெய்திருக்கிறது. - அபி

இந்தியா: ஏ ஹிஸ்டரி இன் ஆப்ஜெக்ட்ஸ் (India: A History
in Objects)
டி.ரிச்சர்டு பிளர்டன்
(T. Richard Blurton)
தேம்ஸ் & ஹட்சன் வெளியீடு
(Thames & Hudson)

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in