

கரிச்சான் குஞ்சு கவிதையியல் குறித்துச் பேசும்போது அடிக்கடி ஒன்று சொல்வார். செய்யப்பட்ட கவிதை, இயல்பில் வருகிற கவிதை. அது போல எழுத்தாளர் அசோகமித்திரனின் நகைச்சுவை என்பது இயல்பாக வெளிப்படுவது. அதற்கான பிரயத்தனங்களை அவரிடம் நாம் காண முடியாது.
அதிலும் இன்னொரு நுட்பமான விஷயம், அதை வேறு யாரும் நகல் செய்துவிடவும் முடியாது. நகைச்சுவையாக நாம் காணாத ஒன்று, அவர் சொல்லும் விதத்தில் நமக்குச் சிரிப்பை வரவழைத்துவிடும். அவர் குரலின் தன்மை ஒருவாறு பாவமாய் இருக்கும். அவர் முக பாவம், பேச்சினூடே அவர் ஏற்படுத்தும் ஒரு சன்ன இடைவெளி, திடீரென்று வெளிப்படும் கீச்சுக்குரல் - இவையெல்லாம் சேர்ந்தது அது.
எம்.வி.வி.க்கு ஒரு ஞானி பட்டம்: பெரும்பாலும் அவர் வாழ்வில் எதிர்கொண்ட சில வலியான கணங்களிலிருந்தே அவை பிறந்திருக்கின்றன. வலியை அனுபவித்த பின்பு அதை விட்டு விலகி அதை நகைச்சுவையாகச் சொல்லிவிடுவதன் மூலம் தன் வலியை ஆற்றிக்கொண்டிருக்கிறார். நம்மைச் சிரிக்க வைப்பதோடு மட்டுமல்லாமல் யோசிக்கவும் வைத்துவிடுவார். அவரது நகைச்சுவை அதிருகிற வெடிச்சிரிப்பைத் தோற்றுவிப்பதல்ல. பல சமயங்களில் மெல்லிய முறுவலைக் கொண்டு வருபவை.
சில சமயம் வாய்விட்டுச் சிரிக்க வைப்பவை. என் கோரிக்கையை ஏற்று, கும்பகோணம் வந்து என் விடுதியில் தங்கியிருந்து சென்ற பல எழுத்தாளர்கள்போல, அவரும் கும்பகோணம் வந்து என் விடுதியில் இரண்டு முறை சில நாள்கள் தங்கிச் சென்றுள்ளார். ஒரு முறை எம்.வி.வெங்கட்ராமனைப் பார்க்க அவரது வீட்டுக்கு என்னுடைய ஜீப்பில் அழைத்துச் சென்று திரும்பினேன். அவரோடு ஜீப்பில் வரும்போது பேச்சு தொடங்கியது.
“ரவ்வி, எம்.வி.வி. ரொம்பப் பொறுமைஷாலி... இல்லப்பா. பத்து வார்த்தைக்கு ஒரு வார்த்தைதான் பதில் பேசறார்... இல்ல.”
“சார்... சில வருஷங்களாவே அவருக்கு ரெண்டு காதுமே சரியா கேக்கிறதில்ல. அத நான் உங்களுக்குச் சொல்ல மறந்துட்டேன்.”
“ஓ... அச்சா... அதானா விஷயம்...அதான். நான் அவரைப் பத்தி சுந்தர ராமசாமி சொன்ன விமர்சனத்தைச் சொன்னேன்... நீங்க கவனிச்சேளா... அப்பயும் அவர் எல்லாத்துக்கும் எப்படி சும்மா ஒரு ஞானி போல பொறுமையா தலையாட்டிண்டே இருக்காரேன்னுட்டு நேக்கு ஆச்சரியமா போயிடுத்து. ஆனா, பாவம்ப்பா... வயசாயிடுத்துன்னா என்ன மா(தி)ரி கஷ்டங்களைல்லாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கு இல்ல...கஷ்ட்டம்.”
அசோகமித்திரனைப் பேசாத பிரபஞ்சன்: எம்.வி.வி., மா.அரங்கநாதன் மேல் அவர் பெரும் மதிப்பு கொண்டிருந்தார் என்பதைத் தனிப்பட்ட வகையில் அறிவேன். அவர்களை மட்டுமல்ல. சக எழுத்தாளர்கள் பலரையும் அவர் மதித்தார்; நட்புறவு கொண்டிருந்தார். எம்.வி.வி.யின் ‘பைத்தியக்காரப்பிள்ளை’ கதையை அவர் ‘இருபதாம் நூற்றாண்டின் மைல் கல்’ என்று கும்பகோணத்தில் எம்.வி.வி.யை மேடையில் வைத்துக்கொண்டே குறிப்பிட்டார்.
மா.அரங்கநாதனின் ‘முன்றில்’ இதழுக்குச் சில காலம் சிறப்பாசிரியராக இருந்தார். தனிப்பட்ட யார் மீதும் அவர் கடுமையான விமர்சனங்களை வைத்ததில்லை. அவருக்கு விமர்சனங்களே இல்லையா, என்றால் உண்டு. அதை நண்பர்களோடு மனம் விட்டுத் தனித்துப் பேசும்போது நகைச்சுவையாகப் பகிர்ந்துகொள்வார். ஆனால், அதைப் பதிவுசெய்ததில்லை.
2011இன் சிறந்த எழுத்தாளருக்கான ‘சாரல் விருது’ அவருக்கு அளிக்கப்பட்டது. அந்த விருதின் தேர்வுக் குழுத் தலைவராகச்செயல்பட்டேன். விழா நடந்து முடிந்த மறுநாள் என்னை ஃபோனில் அழைத்தார்:
“ரவ்வி... என்ன எழுந்தாச்சா?”
“அரை மணி நேரம் ஆயிடுச்சு சார்”
“அப்பறம்... விழா ரொம்ப நன்னா நடந்துதுப்பா. கூட்டமும் பரவாயில்லை. இலக்கியக் கூட்டத்துக்கு இன்னம் வரத்துக்கு ஆள் இருக்கறதே சந்தோஷமில்லியா..? இந்த பிரபஞ்சன வந்து நேத்தி யாரைப் பத்திப் பேசக் கூப்ட்டுருந்தேள்..?”
“என்ன சார்... இப்படிக் கேக்குறீங்க... உங்களைப் பத்தித்தான் சார். அதுக்காகத்தான அவர சிறப்பா கூப்ட்ருந்தோம்.”
“அதெல்லாம் சரிப்பா. அவர் ரொம்ப நேரம் ஆண்டன் செக்காவ் பத்திப் பேசிண்ட்ருந்த மாதிரியே நேக்கு காதுல கேட்டுண்டிருந்தது. ஒருவேளை என் காதுல மட்டும் அப்படி கேட்டுதான்னு... அதும் நேக்குத் தெரியல.”
“சார். அவர் உங்களைப் பத்திதான் பேச ஆரம்பிச்சார். அப்பறம் செக்காவோட கம்பேர் பண்ணிப் பேசும்போது அப்படியே கொஞ்சம் கூடுதலா அதுலயே போயிட்டார்.”
“அச்சா. ஆனா, வயசானதால சில நல்ல காரியம் நடந்துடறது. எனக்கு இடது காது பலகீனப்பட்டுடுத்து. அவர் அந்தப் பக்கமா நின்னு பேசிண்ட்ருந்தாரா... அதுனால அப்பப்ப சொல்பமா காதுல விழறச்ச செக்காவ் செக்காவுன்னுட்டு காதுல விழுந்துண்ட்ருந்துது.
ஒரு வேளை வலது காது பக்கமா நின்னு அவர் பேசிருந்தா என்னைப் பத்திப் பேசினது கேட்ருக்குமோ என்னவோ... ஆனா... எனக்கு என்ன சந்தேகம் வந்துடுத்துன்னா, என்னடாது பரிசு செக்காவுக்கு இருக்குமோ, நாமதான் எதோ தெரியாத வந்து உக்காண்டுருக் கமோன்னு தோணிடுத்து.”
எலிக் கதை: அவரது பல கதைகளிலும் இந்தத் தன்மையை நீங்கள் பார்க்க முடியும். ‘எலி’ என்று ஒரு கதை. அந்தக் கதையில் கணேசன் என்ற கதாபாத்திரம் தன் வீட்டில் கடுமையான எலித் தொந்தரவு தாங்காததால் எலிப்பொறிக்கு வைக்க மசால் வடை வாங்கப் போகும்போது, ஒரு பொதுக் கூட்டம் நடக்கும் இடத்துக்குச் செல்கிறான்.
அந்தக் கூட்டத்தை கணேசன் கேட்பதைச் சொல்வதன் வழியாக, தமிழக அரசியல் பற்றிய ஒரு மென்மையான, நுட்பமான விமர்சனத்தை அழகாக வைத்திருப்பார் அசோகமித்திரன். இந்த அங்கதமும் அவர் படைப்புகளில் ஒரு பிரதான அம்சம்.
“தூரத்தில் மைதானத்தில் ஒரு பொதுக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. மொத்தம் முப்பது நாற்பது பேர்கூட இருக்கமாட்டார்கள். இருந்தும் ஒருவர் கைகளைப் பலமாக வீசிப் பேசிக்கொண்டிருந்தார். சிறிது நேரம் கேட்டால் என்ன? கணேசன் கூட்டத்தை நோக்கி நடந்தான். பேச்சாளர் நிக்சனுக்கு எச்சரிக்கை விடுத்துக்கொண்டிருந்தார். சைனாவுக்கு எச்சரிக்கை. பிரிட்டனுக்கு எச்சரிக்கை. ரஷ்யாவுக்கு எச்சரிக்கை.
பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை. அப்புறம் இந்திரா காந்திக்கு எச்சரிக்கை. தமிழ் நாட்டுத் தலைவர்களுக்கு எச்சரிக்கை. இந்தப் பயங்கர எச்சரிக்கைகளில் நூறில் ஒரு பங்கு எலி வர்க்கத்துக்குப் போய்ச் சேருமானால் அவ்வளவு எலிகளும் வங்காளக் கடலில் போய்த் தஞ்சம் புகும். ஏன் எலிகளுக்குத் தமிழ் மொழி புரிவதில்லை?”
- ரவிசுப்பிரமணியன் | கவிஞர், ஆவணப்ப ட இயக்குநர்; தொடர்புக்கு: ravisubramaniyan@gmail.com