

தமிழில் நவீனக் கவிதை, இடைக் காலத்தில் அதன் ஆதார வடிவமான ஐரோப்பிய பாணியிலேயே இருந்தது; தனி மனித இருப்பு சம்பந்தப்பட்டவையாகப் பெரும்பாலும் வெளிப்பட்டது. லட்சியவாதங்கள் நடைமுறையால் தோல்வியடைந்த காலகட்டம் அது. அதையும் அது பிரதிபலித்தது. தொண்ணூறுகளில் தமிழ் நவீனக் கவிதையின் பாடுபொருள்கள் மாறின. புதிய நிலமும் காட்சியும் கவிதைக்குள் சித்தரிக்கப்பட்டன. இந்த மரபில் இரண்டாயிரத்தில் எழுத வந்தவர் கவிஞர் வெய்யில்.
தமிழ் நாட்டார் பண்பாட்டையும் தமிழ்ச் சங்கக் கவிதையின் செவ்வியல் சொற்களையும் தன் கவிதை மொழியாகச் சுவீகரித்துக்கொண்டவர் வெய்யில். அறப் பண்பாடு முன்னிறுத்துகிற கற்பிதங்களைத் தயவுதாட்சண்யமின்றிக் கேள்விக்கு உட்படுத்தும் நவீனம், இவரது கவிதையின் ஒரு விசேஷமான தன்மை.
ழாக் ப்ரவரின் வருகையைத் தவறாகப் புரிந்துகொண்ட நவ கவிதைகள், கேளிக்கைக்குரிய சினிமாவாக ஆகிவிட்ட காலத்தில், திடகாத்திரமான உள்ளடக்கத்துடன் கவிதைகளைப் பாடும் புதிய தலைமுறைக் கவிஞர் என வெய்யிலைச் சொல்லலாம். இவரது கவிதைகளில் வாசகரைச் சுவாரசியப்படுத்தும் வடிவமோ உட்பொருளோ இல்லை. மாறாக, வாதைக்கு உட்படுத்தும் உட்பொருள்கள் உள்ளன. இவரது கவிதைகளின் நகைச்சுவை, கேளிக்கைக்குரியதல்ல.
அவரது சமீபத்திய கவிதைத் தொகுப்பு ‘ஆக்டோபஸின் காதல்’, அவரது இந்தத் தன்மைக்கு ஓர் உதாரணம். தீவிரமான சங்க இலக்கியச் சொற்கள் மீதான அவரது காதல் இதில் மூர்க்கமாக வெளிப்பட்டுள்ளது. காதலில் தோய்த்த 13 கவிதைகளின் தொகுப்பு இது.
கறுத்த மேகத்தைப் போல் கனம் தாழாமல் வெடித்துச் சிதறி அடர்த்தியான மழையைப்போல் கவிதைச் சொற்கள் இந்தத் தொகுப்புக்குள் உரக்கப் பெய்துள்ளன. செவ்வியலை நவீனத்துடன் மோதவிடும் வெய்யிலின் பாணியில் சொன்னால், தோட்டாக்கள் நிரப்பப்பட்ட மிஷின் கன் இயக்கத்தைப் போலக் கவிதைச் சொற்கள் விசைகொண்டு இந்தத் தொகுப்புக்குள் சிதறி உள்ளன.
இந்தத் தொகுப்புக்குள் ஆக்டோபஸுக்கும் உன்மத்தமான காதலுக்குமான தொடர்பு சிறு சிறு குறிப்புகள் வழி கவிதையைப் போல் விவரிக்கப்பட்டுள்ளன. 13 கவிதைகளுக்கும் ஓவியர்கள் இந்திரன், மணிவண்ணன், பெனிட்டா பெர்சியாள், ஹாசிப்கான், சந்தோஷ் நாராயணன், ரோஹிணி மணி, பானு சுரேஷ், வேலு, செந்தில், இயல், ரவி பேலட், ஆலிவர்ஜென், தமிழ்ப்பித்தன் ஆகிய 13 பேர் வரைந்த வண்ண ஓவியங்களும் தொகுக்கப்பட்டுள்ளன.
இந்தக் கவிதைகளின் பொருள் பிரிவாற்றாமை. ஆனால், நிலம் மிக நவீனமானது; மெய் நிகர் உலகம். சங்கக் கவிதையின் காட்சிகளைப் போல் காதல் பிரிவின் பேதைமை மிக்க கவிதைகள், பல நூற்றாண்டுகள் பயணித்துக் காற்றில் ஏறி விண்ணைச் சாடுகின்றன. இந்தக் காதலிலும் வெய்யில் புனிதம் என்கிற கற்பிதத்தைத் தகர்த்தெறிந்திருக்கிறார். ‘வீழ்த்தப்பட்ட நியாயம்’ என ஒரு கவிதையில் சொல்கிறார்.
ஆனால், விநோதமாக அவரது இந்தக் கவிதைகள் சில இடங்களில் நம்பிக்கையின்மையில் சற்றே தயங்கியிருக்கின்றன. வெய்யிலின் கவிதைகளில் அது குற்றவுணர்வாக இருக்க வாய்ப்பில்லை என நாம் நம்பலாம். அதனால், அதைத் தோல்வியின் புலம்பல் என்று நாம் அதற்கு முடிவு கட்டும் வாய்ப்பை எடுத்துக்கொள்ளவும் முடியாது. ‘அபத்தத்தின் ருசி’ என அனைத்தின் மீதும் நம்பிக்கையை இழக்கிறது அக்கவிதை.
இந்தக் கவிதைகள் உணர்ச்சி மிகுதலில் ஒரே மூச்சில் எழுதப்பட்டவை எனத் திணறவைக்கும் சொற்பிரயோகத்தில் புரிந்துகொள்ள முடிகிறது. காட்டாற்று வெள்ளத்தைப் போல் கையில் கிடைத்தவற்றையெல்லாம் சுருட்டிக்கொண்டோடுகிறது. அவர் ஆக்டோபஸின் குணாதிசயத்தைச் சொல்வதுபோல் இந்தக் கவிதைகள் பல சொற்கரங்கள் கொண்டு நம்மை உறிஞ்ச முயல்கின்றன.
நவீன உலகின் புழங்கு சொற்களும் இந்தக் கவிதையில் உண்டு. சங்கத் தமிழ்ச் சொற்களும் உண்டு. இடையே பேச்சி அருளிய துடியான நாட்டார் சொற்களும் உண்டு. இவை கவிதைகளுக்கு ஒரு பச்சைத் தன்மையை அளிக்கின்றன. அதுபோல் கவிதையை ஒரு திருப்பத்தை நோக்கி உந்த வெய்யில் விரும்பவில்லை. அந்தக் கணநேர உணர்வின் வெளிப்பாடாக அதை அப்படியே விட்டுவிடுகிறார். அவை இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் காதலின் உன்மத்தத்தில் திளைக்கின்றன.
ஆண் மயிலின் தோகை விரிப்பாகக் காதலின் பேதைமையைப் பாடும் வெய்யிலின் கவிதைகளை இந்தக் கவிதைகளின் நாயகி, ஒரு சொல் அல்லது மெளனத்தால் அர்த்தமில்லாமல் செய்துவிடுகிறார். அதனால், கவிதை சட்டெனக் கவித்துவத்தை விடுவித்துவிட்டு ஒரு சாமானியனாக ஒரு யதார்த்தவாத வசனத்தை 2000இன் சினிமா நாயகனைப் போல் பேச நேர்கிற துர்ப்பாக்கியத்தையும் இதில் பார்க்க முடிகிறது.
கவிஞனின் உயிரைத் திரித்து உண்டாக்கிய நீள் கவிதைகள், அதன் நாயகியால் கிண்டலுக்கு உள்ளாக்கப்படுகின்றன. ஆனாலும் கவிஞன் விடுவதாக இல்லை. காதல் அப்படிப்பட்டதுதானே? மீதமுள்ள வரிகள் காதலின் உன்மத்தத்தில் நிபந்தனையின்றிச் சரணடைதலை அறிவிக்கின்றன.
வெய்யிலின் கவிதைகளில் தொடர்ந்து தொழிற்படும் ஓர் அம்சம், உடல் உறுப்புகள் குறித்த விவரிப்பு. கால்கள், வயிறு, இதயம், கைகள், தலை, கபாலம் போன்றவை மனிதர்களின் உணர்ச்சிகளுடன் விவரிக்கப்பட்டிருக்கும். அவை வன்முறையில் உடைபடுதலுக்கும் ஆளாகும்.
இந்தத் தொகுப்பிலும் அந்த அம்சத்தைப் பார்க்க முடிகிறது. வன்முறைக்கு மிக நெருக்கமாக உள்ள காதலில் அவை வெளிப்படுவதில் வியப்பில்லை. ‘வன்மம் மிகுந்த அரிவாளைப் போல/உறங்கிக்கொண்டிருக்கிறாய் ஞாபகி/உன் அருங்கூர்மையில்/ நரம்புகளை ஒவ்வொன்றாய் அரிந்து அரிந்து/சாவைப் பழகுகிறேன்/ என்கிறது ஒரு கவிதை.
இந்த மொத்தக் கவிதையும் வாட்ஸ் அப் உரையாடலில் நடப்பவை என்கிற குறிப்பு ஆங்காங்கே விரவியிருக்கிறது. இதன் நாயகியோ ஓர் அரூபி எனக் கொள்ளலாம். உள்ளதுபோல் இல்லாமலும் இருக்கிறாள். அவள் காதலும் அப்படித்தான். கனவுக்கும் நனவுக்குமான ஊசலாட்டமாக இந்தக் கவிதை பின்னப்பட்டுள்ளது. இந்தக் காதலை, கவிதையைப் போல கவிஞரும் சில இடங்களில் நம்ப மறுக்கிறார்.
அதனால் இதையெல்லாம் நிறுத்திவிடப் போவதாக, நிறுத்திவிட்டதாகப் பெரும்பாலான கவிதைகள் புலம்புகின்றன. ஆனால், ‘சூல்கொண்ட ஓர் ஆக்டோபஸைப் போல்’ சாத்தியமில்லா இந்த அருங்காதல் ஆழிக்குள் கவிதைகள் இறங்கிக்கொண்டே இருக்கின்றன; கவிஞரும்.
ஆக்டோபஸின் காதல் வெய்யில்
கொம்பு வெளியீடு
விலை: ரூ.350
தொடர்புக்கு: 9952326742
- மண்குதிரை | தொடர்புக்கு: jeyakumar.r@hindutamil.co.in