

கம்யூனிச சித்தாந்த கொள்கைகளைப் பொதுமக்களிடம் எடுத்துச் சென்றதில் பெரும் பங்கு கம்யூனிஸ்ட் கட்சியின் அடிமட்டத் தொண்டர்களையே சாரும். கம்யூனிசச் சித்தாந்தத்துக்கும் அக்கட்சிக்கும் அவர்களே அஸ்திவாரம்.
இந்த அஸ்திவாரத்தின் உதவியால் கம்யூனிசம் தனது கிளைகளை விரித்துப் பரப்பியது; மக்களைத் தன் வசப்படுத்தியது; ஆட்சிக்கும் வந்தது. கம்யூனிசத் தொண்டர்களின் வாழ்வும் பணியும் அக்கட்சியை மட்டுமல்லாமல், சமூகத்தையும் தாங்கிப்பிடிக்கின்றன.
மக்களின் மேன்மைக்காக ஓய்வின்றிக் களப்பணியாற்றிய அத்தகைய உயரிய தொண்டர்களை இந்நூல் நமக்கு ரத்தமும் சதையுமாக அறிமுகப்படுத்துகிறது. சி.பாலன், என்.ாமகிருஷ்ணன், டி.செல்வராஜ் உள்ளிட்ட பலரைப் பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஜி.ராமகிருஷ்ணன் இதில் எழுதியுள்ளார். - நிஷா
பொதுவுடைமை இயக்கத்தில் பூத்த மலர்கள்
ஜி.ராமகிருஷ்ணன்
பாரதி புத்தகாலயம்
விலை: ரூ.250
தொடர்புக்கு: 87780 73949
வில்லிசை வேந்தரின் சுவாரசியங்கள்: வில்லிசை வேந்தர் பிச்சைக்குட்டி தென்பகுதியில் பிரபலமான பெயர். வில்லுப்பாட்டை நவீனப் படுத்தியவர். அதனால் அந்தக் கலை வளர்ச்சிக்கு வழியமைத்துத் தந்தவர் என இவரைச் சொல்லலாம். நல்ல வாசிப்பு, ரசனை, சங்கீத அறிவு, குரல் வளம் ஆகிய திறமைகள் உள்ளவர்.
அறிஞர்கள் பலரை ரசிகராகப் பெற்ற ஆளுமை அவர். பிச்சைக்குட்டியின் பலதரப்பட்ட இயல்புகளைச் சாகித்திய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் சுவாரசியமாக இந்த நூலில் சொல்லியிருக்கிறார்.
சென்னையில் வேந்தர் செய்த வில்லிசை நிகழ்ச்சியைக் கேட்க கே.பி.சுந்தராம்பாள், கொத்தமங்கலம் சுப்பு உள்ளிட்ட பலர் வந்திருக்கிறார்கள். வேந்தர் அன்று கண்ணகி கதையைப் பாடியிருக்கிறார்.
அதை மெய்மறந்து கேட்ட கே.பி.எஸ். பாதியில் எழுந்து வேந்தருக்கு விடை சொல்ல, முழுவதும் கேட்டுப் போக வேண்டும் என வேந்தர் சொல்லியிருக்கிறார். அதற்கு ‘நீ அருமையாகத்தான் செய்வாய் என்று எனக்குத் தெரியும்.
ஆனால், எனக்கு வயசாயிடுச்சு, துக்கத்தைப் பார்க்கவோ கேட்கவோ என்னால் முடியாது தம்பி’ எனக் கிளம்பிவிட்டார். ‘என்ன பெரிய சோகம் வரப்போது?’ எனக் கொத்தமங்கலம் சுப்பு உட்கார்ந்திருக்கிறார்.
ஆனால், கண்ணகியின் துன்பத்தை வேந்தர் பாடிய விதம் கண்டு தாங்காமல் சுப்பு அங்கவஸ்திரத் துண்டால் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே இருந்தாராம். இப்படி சுவாரசியமான பல விஷயங்களை இந்தப் புத்தகத்தில் தர்மன் சொல்லியிருக்கிறார். - விபின்
வில்லிசை வேந்தர் பிச்சைக்குட்டி
சோ.தர்மன்
அடையாளம் வெளியீடு
விலை: ரூ.150
தொடர்புக்கு: 043 32273444
மக்கள் எழுச்சியின் கதை: புகழ்பெற்ற இத்தாலிய எழுத்தாளர் இட்டாலோ கால்வினோவின் நாவல், ‘சிலந்திகளின் கூடுகளுக்குச் செல்லும் பாதை’. இத்தாலியின் வடமேற்குப் பகுதியிலுள்ள ஒரு நகரத்திலுள்ள ஒரு சிறுவன்தான் இந்த நாவலின் மையம். அவன் ஆதரவற்றவன்.
செருப்புத் தொழிலாளியின் கையாள். பிறகு இவன் பாலியல் தொழில் தரகராகிறான். இவன் ஒரு நாஜியின் கைத்துப்பாக்கியைத் திருடுகிறான். முசோலினியின் இத்தாலிக்கு எதிரான படையுடன் இணைகிறான். இந்தச் சிறுவனைச் சாரமாகக் கொண்டு அந்தக் காலகட்டத்தில் பாசிச ஆட்சிக்கு எதிரான வெகு மக்கள் எழுச்சியை இந்த நாவல் பேசுகிறது. - ஜெ
சிலந்திகளின் கூடுகளுக்குச் செல்லும் பாதை
இட்டாலோ கால்வினோ
(தமிழில்: மூ.அப்பணசாமி)
தமிழ்வெளி வெளியீடு
விலை: ரூ.240
தொடர்புக்கு: 9094005600
வ.உ.சி. என்னும் போராளி: வ.உ.சி. என்றதும் ‘கப்பலோட்டிய தமிழர்’ என்ற சிறப்புப் பெயர் நம் நினைவுக்கு வரும். ஆனால், அது வெறும் தொழில் அன்று. அதற்குப் பின்னால் வ.உ.சிக்கு இருந்த தொலைநோக்குப் பார்வையைப் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் இதில் விவரிக்கிறார்.
கப்பல் நிறுவனத்தின் தலைவராக பாலவநத்தம் ஜமீன் பாண்டித்துரையை அவர் தேர்ந்தெடுத்தார். பங்குதாரர்கள் வழி இந்நிறுவனத்துக்கான முதலீட்டுத் தொகை ரூ.10 லட்சத்தைத் திரட்ட வ.உ.சி முயன்றார். கப்பல் தொழிலை எல்லாருக்கும் அறியச் செய்வது உள்படப் பல உயர்வான நோக்கங்கள் அந்நிறுவனத்துக்கு இருந்தன.
ஒரு நாடு விடுதலை பெற அரசியல், பொருளாதார, பண்பாட்டுப் போராட்டங்கள் அவசியம். அதைத்தான் வ.உ.சியின் திரிசூலம் என நூலாசிரியர் குறிப்பிடுகிறார். வ.உ.சி.யின் பங்களிப்பு பற்றிய தெளிவான சித்திரத்தை இந்த நூல் அளிக்கிறது. - குமார்
வ.உ.சியின் திரிசூலம்
ஆ.சிவசுப்பிரமணியன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,
விலை: ரூ. 95
தொடர்புக்கு:
044 26251968