Published : 23 Sep 2017 10:14 AM
Last Updated : 23 Sep 2017 10:14 AM

‘எவ்வழி செல்லும் நம் மொழி’ கலந்துரையாடல்

தி

இந்து’ தமிழ் நாளிதழ், நான்கு ஆண்டுகளைக் கடந்து 5-ம் ஆண்டில் காலடி எடுத்து வைப்பதை முன்னிட்டு, கடந்த 15 மற்றும் 16-ம் தேதிகளில் ‘யாதும் தமிழே’ நிகழ்வு நடந்தது.

அந்த விழாவின் இரண்டாம் நாளில் ‘எவ்வழி செல்லும் நம் மொழி?’ எனும் தலைப்பில் கலந்துரையாடல் நடந்தது. இதில் ‘கலாம் சாட்’ எனும் சிறிய செயற்கைக்கோளை உருவாக்கிய ‘ஸ்பேஸ் கிட்ஸ்’ அமைப்பின் ஸ்ரீமதி கேசன், சென்னைப் பல்கலைக்கழக மகளிரியல் துறைப் பேராசிரியர் பாரதி ஹரிசங்கர், மீனாட்சி மிஷன் மருத்துவமனைத் தலைவர் டாக்டர் குருசங்கர், மென்பொருளாளர் துரைப்பாண்டி, திரைப்பட இயக்குநர் ராம் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த அமர்வை எழுத்தாளர் சா. கந்தசாமி நெறியாள்கை செய்தார். துரைப்பாண்டி பேசும்போது, “சங்க இலக்கியங்களில் ‘அம்மா’ என்ற சொல்லே கிடையாது. ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான ‘சீவக சிந்தாமணி’யில்தான் அந்தச் சொல் ஒரே ஒரு இடத்தில் தென்படுகிறது. இதுபோல பல வார்த்தைகள், அந்த வார்த்தைகள் வரலாற்றில் எப்படியெல்லாம் உருமாறி வந்திருக்கின்றன என்பதை மக்கள் அறிந்துகொள்வதற்காக ஒரு தளத்தைத் தொடங்கியுள்ளேன்” என்றார். பாரதி ஹரிசங்கர் பேசும்போது, “தமிழ்ப் படைப்புகளை உலகுக்கும், பன்னாட்டு இலங்கியங்களைத் தமிழ் மூலம் வாசிப்பதற்கும் மொழிபெயர்ப்புகள்தான் உதவுகின்றன. எனவே, நாம் மொழிபெயர்ப்புகளில் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

தமிழை முன்னேற்றுவதுடன் தமிழர்களையும் முன்னேற்ற வேண்டும் என்று டாக்டர் குருசங்கர் சொல்ல, “தமிழ் என்றால் மொழி மட்டுமல்ல… அது ஒரு ஆசை!” என்றார் ஸ்ரீமதி கேசன். இறுதியாகப் பேசிய இயக்குநர் ராம், “இன்று தமிழ் மொழிக்கு உலக அளவில் மிகப் பெரிய சந்தை இருக்கிறது. அதற்கு உதாரணம், தமிழ்த் திரைப்படங்களின் வெளிநாட்டு உரிமை நல்ல விலைக்குப் போவதுதான்” என்றார்.

முன்னதாக, இந்த அமர்வுக்கான பேச்சாளர்களை அறிமுகப்படுத்திப் பேசிய எழுத்தாளர் சா.கந்தசாமி, “ஒரு ஜனநாயக நாட்டில் நம்மால் தாய்மொழியில் உரையாட முடியாது என்றால் அது என்ன ஜனநாயகம்?” என்று கேள்வி எழுப்பினார். அவசியமான கேள்விதான் இல்லையா?

-ந. வினோத்குமார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x