

இயற்கை நமக்கு இலவசமாக வழங்கும் கொடைகளில் முக்கியமான ஒன்று தண்ணீர். மனிதர்களுக்கு மட்டுமல்ல; நீர் இவ்வுலகின் இருப்புக்கும் இன்றியமையாதது. இலவசமாகக் கிடைப்பதாலோ என்னவோ, நீரின் முக்கியத்துவம் பலருக்கும் புரிவதில்லை. நீராதாரத்தைச் சுரண்டுவதோடு, நீர்வளத்தைத் திருடுவதும் வீணடிப்பதும் தொடர்ந்து நடைபெறுகின்றன. நீர்ப் பற்றாக்குறையின் ஆபத்துக்குக் காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பாக அடிக்கடி ஏற்படும் மோதல்கள் ஒரு உதாரணம்.
ஒரு நாட்டிலிருக்கும் இரு மாநிலங்களுக்கு இடையிலான மோதலே வன்முறையில் முடிகிறது; தண்ணீருக்காக இரு நாடுகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்டால் எத்தகைய ஆபத்து ஏற்படுத்தக்கூடும்? இந்தச் சூழலில், நீரின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் நோக்கில் மதுமிதா இந்த நூலைத் தொகுத்திருக்கிறார்.
தண்ணீர் குறித்து எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், சி.மகேந்திரன், மகுடேசுவரன், பொன்னீலன், அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட பலர் எழுதியிருக்கும் கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.
- ஹுசைன்
தண்ணீர்
தொகுப்பு: மதுமிதா
ஸ்நேகா வெளியீடு
விலை: ரூ.500
தொடர்புக்கு: 98401 38767
அமெரிக்க ஆண்டாளின் தமிழக விஜயம்: எமிலி டிக்கின்சனின் படைப்புகள், தமிழில் பல ஆண்டுகளாக விவாதிக்கப் பட்டு வருகின்றன. இப்பிரபஞ்சம் போலவே முடிவற்ற அவரது படைப்பின் பொருண்மையின் ஆழம் அதற்குக் காரணம் எனலாம். நம்முடைய ஆண்டாளும் எமிலியும் ஒரே அலைவரிசையில் சஞ்சரிக் கிறார்கள்.
இந்தக் கவிதைகளில் எளிய நிகழ்வுகள், அவற்றைச் சொல்ல குறுஞ்சொற்கள், எளிய படிமங்கள், இயற்கை, இறப்பு, இறைவன், பருவ காலங்கள், சாவாமை என்று அவருக்குப் பிடித்தமான பருப்பொருள்கள். கத்தரிக்கோலால் காகிதத்தை நறுக்குவதுபோலச் சொற் றொடர்களை நறுக்கிக் கீழே போடுவது, மறைமுகப்பொருள் உணர்த்துவது என்று எமிலி மொழி ஆளுமையால், ஒரு மந்திரக்காளி வித்தை காட்டுகிறார்.
இவற்றைத் தமிழாக்குவது பிரம்மப் பிரயத்தனம். ஆண்டாளின், ’நாச்சியார் திருமொழி’யைப் புரிந்துகொண்டால்தான், நீங்கள் எமிலியைப் புரிந்துகொள்ள முடியும். கவிஞர் ந.ஜயபாஸ்கரனின் மொழிபெயர்ப்பு தமிழுக்கு அணுக்கமாக இருக்கிறது.
- ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ்.ரமேஷ்
சாய்மான வெளிச்சம் எமிலி டிக்கின்சன் (தமிழில்: ந.ஜயபாஸ்கரன்)
காலச்சுவடு
விலை: ரூ.140
தொடர்புக்கு: 04652-278525, 96779 16696