

எந்த ஒரு தொழில்நுட்பமும் நம் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டுமே தவிர, நாம் காலங்காலமாகப் பின்பற்றும் ஆரோக்கிய வழிமுறைகளைத் தூக்கியெறிவதற்கான காரணமாக மாறிவிடக் கூடாது என்பதை இந்நூலின் மூலம் ஆசிரியர் எடுத்துரைக்கிறார்.
கிராம வாழ்க்கையின் மேன்மைகள், இயற்கை உணவு வகைகள், மருந்துகளுக்குள் மறைந்திருக்கும் அரசியல், குழந்தை களையும் விட்டுவைக்காத மனஅழுத்தம் என இந்நூலின் வழியே இன்றைய காலத்தில் நாம் அவசியம் அறிய வேண்டிய உடல்நலம் சார்ந்த தகவல்களைப் பற்றித் துறைவாரியாக விரிவாக எடுத்துரைத்திருக்கிறார்.
நலக் கண்ணாடி
விக்ரம்குமார்
விலை: ரூ.130
தொடர்புக்கு: 7401296562
அயல்மொழி நூலகம்: தேர்தலின் மறுபக்கம்
இந்தியாவில் தேர்தல்கள் மற்றொரு திருவிழாக்கள். ஆனால், இந்தியத் தேர்தல் நடைமுறை தவறு நிகழ வாய்ப்பே இல்லாததா என்கிற கேள்வி முக்கியமானது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நேரெதிரான கொள்கை கொண்ட கட்சிகளுக்குப் பெரிய வன்முறை இல்லாமல் அதிகாரத்தை மக்கள் கைமாற்றிவிடுவது இந்தியாவில் மட்டுமே சாத்தியம். ஆனால், உண்மையிலேயே இந்த அதிகார மாறுதல் பிரச்சினைகள் இல்லாததா என்பது ஆராயப்பட வேண்டியது.
ஒட்டுமொத்தமாகக் குறைந்த ஓட்டு வாங்கிய கட்சி, பெரும்பான்மைக்கும் குறைவான உறுப்பினர்களையே தன் வசம் வைத்திருக்கும் ஒரு கட்சி ஆட்சியைப் பிடிப்பது இந்தியாவில் எப்படிச் சாத்தியப்படுகிறது? ஒரே ஒரு ஓட்டு அதிகமாகப் பெற்றவர் அல்லது குறிப்பிட்ட தொகுதியில் செல்வாக்கு மிக்கவர் வெற்றிபெறுவதால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்துத் தேர்தல் போக்கு சார்ந்த தரவுகள் அடிப்படையில் இந்த நூல் ஆராய்ந்திருக்கிறது.
- நேயா
ஹு மூவ்டு மை ஓட் (Who Moved My Vote)
யுகாங் கோயல்,
அருண் குமார்
கெளசிக்
வெஸ்ட் லாண்ட் பதிப்பகம்
விலை: ரூ.499
சிற்றிதழ் அறிமுகம்: வள்ளலார் சிறப்பிதழ்
‘இடது’ எனும் பெயரில் இதுவரை வெளியான காலாண்டு இதழ், தற்போது ‘புதுமலர்’ என்கிற பெயரில் வெளிவரத் தொடங்கியிருக்கிறது. சமூக, அரசியல், கலை, இலக்கியப் பண்பாட்டு இதழாக வெளிவரும் ‘புதுமலர்’, தேவைப்படும் தருணங்களில் முக்கிய ஆளுமைகளின் ஆவணச் சிறப்பிதழாகவும் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ‘புதுமல’ரின் முதல் இதழ், ‘வள்ளலார் - 200 ஆவணச் சிறப்பிதழ்’ ஆக வெளியாகியிருக்கிறது.
பழ.நெடுமாறன், கொளத்தூர் மணி, பொதிகைச்சித்தர், கண.குறிஞ்சி, பொழிலன், விடுதலை ராசேந்திரன், வி.தேவேந்திரன், ரெங்கையா முருகன், சிவகுமார் கலைவாணன் ஆகியோர் வள்ளலார் பற்றிய கட்டுரைகள் வழியாகப் பங்களித்துள்ளனர். மூடப்பழக்கங்களுக்கு எதிராக ஒரு சட்டத்தைக் கொண்டுவருவது, வள்ளலாரது 200ஆவது பிறந்த ஆண்டில், அவருக்குச் செலுத்தும் சிறந்த அஞ்சலியாக இருக்கும், என ‘புதுமலர்’ கோரிக்கை விடுக்கிறது.
- அபிபுதுமலர்
சமூக அரசியல் கலை இலக்கியக் காலாண்டிதழ்
ஆசிரியர்: கண.குறிஞ்சி
விலை: ரூ.100
தொடர்புக்கு:9443307681