

தேன்மொழியின் ‘அணுக்கி’ என்ற அவருடைய முதல் நாவலை வாசித்தபோது, அவரது புனைவுமொழி, காட்சியாய் எனக்குள் பரந்து விரிந்த அனுபவத்தை உணர்ந்தேன். ஊர்கள் சிறிதாயும் வயல்கள் பெரிதாயும் விரிந்து கிடக்கும் கீழத்தஞ்சையில் உள்ள பிலாவடி மூலை என்கிற கிராமத்தின் கட்டமைப்பை வர்ணிக்கும்போது, அந்த நிலவியலுக்குள்ளேயேநாமும் போய்விடுகிறோம்.
கூடவே, ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களைத் தாங்கிக்கொண்டு, அனாதைபோலக் கிடக்கும் அந்த எண்பது குடும்பங்களாலான கிராமத்துக்கு ஒரு சாலை வந்து வாய்த்தபோது, அங்கு ஏற்பட்ட கல்வி உள்படப் பல்வேறு பண்பாட்டு அசைவுகளையும் நுட்பமாக அவதானித்துத் தன்னுடைய எடுத்துரைப்பிற்குள் கொண்டுவந்துள்ளார் தேன்மொழி.
‘பிலாவடி மூலைக்கும் பெண்கள் ரவிக்கை அணியத் தொடங்கியதற்கும் சாலைக்கும் தொடர்பு இருந்தது’ என்று எழுதுகிறார். இதுவரை அந்தக் கிராமத்திற்குத் திட்டமிட்டுச் சாலை வராமல் பார்த்துக்கொண்டதானது சாதிய இறுக்கத்தைப் பறைசாற்றிக்கொண்டிருப்பதாக இருந்தது.
இன்று அத்தகைய சாதியவாதிகளின் திட்டமெல்லாம் கொஞ்சம்கொஞ்சமாகச் சிதையத் தொடங்கியிருக்கும் சமூக வரலாற்றை எல்லாம் நாவல் பதிவுசெய்துகொண்டே போகிறது. இப்படியான ஒரு கிராமத்தில் இரண்டு மூன்று தலைமுறைகளாக வாழும் மங்களம் ஆத்தாவின் குடும்பக் கதையும் அவர் வாழ்ந்த சமூகக் கதையும்தான் இந்த நாவல்.
சாதி அடிப்படையிலும் பெண் என்ற பாலின அடிப்படையிலும் ஒடுக்கப்பட்ட சமூக வாழ்வில், உயர் சாதிப் பார்வையில் இரண்டு முறை விதவையான ஆத்தாவின் ஆளுமையை வர்ணிப்பதில் புலப்படும் கதைசொல்லியின் நுட்பமான பார்வை, உழைக்கும் பெண்களிடம் கூடிக்கிடக்கும் தன் சூழல் சார்ந்த ஞானத்தையும் நேர்மையையும் துணிச்சலையும் ஓர் இலக்கிய ஆவணம்போல் பதிவு செய்துவிடுகிறது.
கல்வெட்டு கூறும் வரலாற்றைப் புறந்தள்ளி, மக்களின் சொல்கதையின் ஊடே தொடர்ந்து வரும் வரலாற்றை வழிமொழிகிறார். இதன் மூலம் புறக்கணிக்கப்பட்ட மக்களின் சொல்கதைகளை வரலாற்று ஆவணமாக முதன்மைப்படுத்தும் விளிம்புநிலை ஆய்வுப் பார்வையை மேலுக்குக் கொண்டுவருகிறார் எழுத்தாளர்.
திருவாரூர் சித்திரைத் தேரோட்டத்தின்போது, சாமி வீதி உலா புறப்படும் வேளையில், ஒரு தலித்துதான் இந்தச் சாமிக்குக் குடை பிடிக்கிறதும் அதற்காக அவரை யானை மேல் உட்கார வைத்து அழைத்துக்கொண்டு போவதும் இன்றைக்கும் இருக்கிற ஒரு பழக்கம்தான் என்கிறார்.
இதுபோலவே கோயிலுக்கு வந்த கழற்சிங்கன் என்ற பல்லவ மன்னன், கோயிலில் பூசைக்குரிய பூவைக் கையில் எடுத்ததற்காகத் தன் மனைவியின் மூக்கை அறுத்தவர் மேல் கோபப்படாமல் தானும் கூடச்சேர்ந்து பூ எடுத்த கையை வெட்டிவிட்ட நிகழ்வையும் பதிவுசெய்கிறார்.
இந்தக் கொடுமை செய்தவர்கள் நாயன்மார்களாக நிலைபெற்றுவிட்டார்கள். ஆனால், பாதிக்கப்பட்ட அந்தப் பெண் வரலாற்றில் தடம் தெரியாமல் மறைக்கப்பட்டுவிட்டார் என்பதையும் பெண்ணியப் பார்வையில் புனைந்து காட்டிவிடுகிறார்.
நாவலில் தசையைத் தின்னும் ஆண்களுக்கு எதிராகத் தசையற்ற எலும்புக்கூடாகப் பேய் வடிவம் எடுத்த காரைக்கால் அம்மையார் கதையைப் பெண்ணியப் பார்வையில் எடுத்துரைக்கும்போது தேன்மொழியின் கட்டுடைக்கும் நுட்பத்தைக் கையாளும் வீரியத்தைப் பார்க்க முடிகிறது.
நாவலின் கதாபாத்திரமான முல்லையின் மகன் ஆதன், இளம் வயதிலேயே நான்கு பேரோடு சேர்ந்து ஒரு சிறுமியை வேனில் கடத்திச் சென்று சீரழித்த கொடுமை தாங்க முடியாமல், அவனை விஷச் சோறு ஊட்டிக் கொல்லும் காட்சியைச் சித்திரிக்கும்போதும் வாசகர்கள் மொழியின் கமுக்கம் அறிந்த, தேர்ந்த ஒரு கதைசொல்லியைக் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது.
டெல்லி நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் தூக்கில் தொங்கிய செய்தியைக் கேள்விப்பட்ட பின்புலத்தில் மகனைத் தானே கொன்றுவிடுவது நல்லதென்று முடிவெடுப்பதாகப் புனைந்து காட்டுகிறார். மகனோடு தானும் விஷச் சோறு உண்டாலும் சாகாமல் தப்பித்துக்கொண்ட முல்லை, பிறகு எவ்வாறு போராட்டமே வாழ்க்கை என்று வாழத் தொடங்கிவிடுகிறாள் என்பதையும் எழுதிக் காட்டுகிறார்.
இறுதியாகக் காவேரி பாயும் இந்த மண், பொன் விளைந்த பூமி. இத்தகைய மணமகளின் இருதயத்துக்குள் கனிம வளம் தேடிக் குழாய் பதிக்க அனுமதிப்பாளா?அவளுக்குத் துணையாக உழைக்கும் இந்தக் கிராமத்துப் பெண்கள் மேல் கொள்ளுகிற நம்பிக்கையில்தான் இந்த மண்ணின் எதிர்காலம் இருக்கிறது என்று ஒரு நம்பிக்கையோடு முடிகிறது நாவல்.
தேன்மொழி ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுத வேண்டிய பல்வேறு விஷயங்களை 145 பக்கங்களுக்குள் எழுதியிருக்கிறார். வரலாறு, கோயில் கலை, தொன்மம், கவிதை, பெண்ணியம், தலித்தியம் எனக் கலந்து நாவல் தமிழ்ச் சூழலில் ஒரு புதிய பிறப்பாகப் பிறந்திருக்கிறது.
அணுக்கி
தேன்மொழி
மணற்கேணிப் பதிப்பகம்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 04146 - 355746
- க.பஞ்சாங்கம் | பேராசிரியர் தொடர்புக்கு : drpanju49@yahoo.co.in