

காலம் துடைத்துப் போடும் எல்லா மனித நிகழ்வுகளைப் பற்றியும் நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறது தமிழ் இலக்கியம். அந்தத் தொடர்ச்சியின் ஒரு கண்ணியாக வருபவர்தான் இமையம். மனுசனின் கிறுக்குத்தனங்கள், ஆற்றாமை, துரத்தும் மாயமான்கள், தனக்குத்தானே உருவாக்கிக் கொண்ட சில பொருளில்லாத லட்சியங்கள், அவனை எப்போதும் ஆட்கொள்ளும் அவலங்கள் என்ற அவரது எழுத்து அக்கறை மிக நீண்டது.
இமையத்தின் ஏழாவது சிறுகதைத் தொகுப்பு ‘தாலிமேல சத்தியம்’. காசு குடுத்து ஓட்டு வாங்கியும் தோத்துப்போய்விட்டால் ‘குடுத்த காசத் திருப்பிக் குடுங்க’ என்று கேட்கும் காலம். மனித நாகரிகத்தின் அடையாளமாகத் தோற்றுவிக்கப்பட்ட ஒரு மரபு,அதிலிருந்து சீரழிந்து அதற்கு நேர் எதிரான ஒரு கேடுகெட்ட பழக்கமாக மாற்றப்பட்டு விட்டது என்பதுதான் இந்த நகைமுரண்.
இதைத்தான் ‘தாலி மேல சத்தியம், கதையில் சொல்லியிருக்கிறார் இமையம். ‘களவாடப்போவதாக இருந்தால்கூட சாமியின் அருளும் ஆசீர்வாதமும் வேண்டும்’ என்று ‘ஆகாசத்தின் உத்தரவு’ கதையில் சொல்லப் பட்டிருப்பது இன்னொரு வகையான நகைமுரண்.
தனது மாணவனிடமே தனது பாலியல் வக்கிரத்தைத் தீர்த்துக்கொண்டு அவனது சாவுக்கும் காரணமாயிருந்த ஆசிரியரைத் தண்டிப்பதற்கு சட்டத்தின் இழைகளில் புகுந்து வரும் வசதியோ, நேரமோ பத்து வயது மாணவனின் தாய் வசந்தாவுக்கு இல்லை. நூறு நாள் வேலைத்திட்டம் அவளுக்கு அந்த அளவுக்கு வசதியைத் தரவில்லை. அவளுடைய தங்கையாலும் உதவ முடியாது.
‘அவன் ஆம்பள... நான் பொம்பள... எங்கிட்ட வந்து அவனோட வீரத்தக் காட்டச்சொல்லு பாக்கலாம்’ என்று சவால் மட்டுமே விடலாம். அல்லது வசந்தா மாதிரி ‘சாமி இருந்தா கேக்கும்...’ என்று புலம்பி விட்டு ஒதுங்கிக்கொள்ளலாம். ‘இது ஏன் இப்படி ஆயிற்று?’ என்று கேட்கிறவர்கள்கூட இமையத்தின் கதையைப் படித்த பிறகு ‘இது இப்படித்தான்’ என்று ஒதுங்கிக்கொள்வார்கள்.
இமையத்தின் இந்த ‘ரவநேரம்’ கதையின் வேலை, அவர்கள் மீது பரிதாபப்படுவதல்ல. நம்மிடம் பரிதாபத்தை உண்டு பண்ணுவதும் அல்ல. மாயத்தோற்றம் தரும் இந்தப் பேரமைப்புக்குள் இருக்கும் நுண் அமைப்புகள் எப்படிச் செயல்படுகின்றன என்று காண்பிப்பதுதான் இதன் வேலை. உதறித் தள்ளிவிடும்.
தனது காதலை நேரில் சொல்வதற்குத் துணிவு இல்லாமல், அவள் மனதை அறியாமல் ஒரு பெண்ணுக்குக் காதல் கடிதம் கொடுத்து, அது அவள் அப்பனிடம் சிக்கினால் அவளது வாழ்க்கை என்ன ஆகும்? பல்லாண்டுகளுக்குப் பிறகு ஒரு மூதாட்டியான அவளைச் சந்திக்கும்போது அவளிடம் செல் நம்பர் கேட்டு என்ன பயன்? ‘ஒங்க சுடுகாடு ஒங்களுக்காகக் காத்திருக்குது...
என்னோட சுடுகாடு எனக்காகக் காத்திருக்குது...’ என்றுதான் சொல்வாள். கேள்விப்படக்கூட வாய்ப்பு இல்லாத மனிதர்களைப் பற்றித்தான் இமையத்தின் கதைகள் பேசுகின்றன.
மாயத்தோற்றம் தரும் இந்தப் பேரமைப்புக்குள் இருக்கும் நுண் அமைப்புகள் எப்படிச் செயல்படுகின்றன என்று காண்பிப்பதுதான் இமையத்தின் வேலை!
தாலிமேல சத்தியம் (சிறுகதைத்தொகுப்பு)
ஆசிரியர்: இமையம்
க்ரியா வெளியீடு,
விலை: ரூ.325
தொடர்புக்கு: 72999 05950
- ப.சகதேவன் | மொழிபெயர்ப்பாளர்; தொடர்புக்கு: krishnaswamip@yahoo.com