

புதுமைப்பித்தனின் ‘சாபவிமோசனம்’ சிறுகதையில் ஒரு காட்சி, ராமனால் அகலிகைக்கு விமோசனம் கிடைக்கிறது. அகலிகை கோதமரிடம் பசிக்கிறது என்கிறாள். கோதமர் ‘பசுவை வலம் வந்து பறித்து வந்ததுதானே இவள்’ என நினைக்கிறார். “கோதமர் பசுவை வலம்வந்து அகலிகையை மணந்தாரா? ராமாயண மூலத்தில் இது இல்லையே! எந்தப் புராணத்தில் இது வருகிறது?” என்று எழுத்தாளர் சுந்தர ராமசாமி தன்னைச் சந்தித்த எழுத்தாள நண்பர்களிடம் கேட்டுக்கொண்டிருந்தார். இது 70-களில் நடந்தது. நானும் இந்த பசுவை கோதமன் வலம் வந்த கதையைத் தேடித்தேடி அலுத்துப் போன சமயத்தில் வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியாரின் ‘அகலிகை வெண்பா’வில் இந்தத் தகவல் இருப்பதை அறிந்தேன். சுப்பிரமணிய முதலியாருக்கு இச்செய்தி கதாகாலட்சேபர்களின் வழி வந்தது; இது அவர்களின் கற்பனைத் துணுக்கு என்றும் மூத்த தமிழறிஞர் ஒருவர் சொன்னார். புராணங்களில்/ இதிகாசங்களில் உள்ள நிகழ்ச்சி என நினைத்து வியக்கும் சில நிகழ்ச்சிகள் கதாகாலட்சேபக்காரரின் கைங்கரியத்தினால் பரவியவை என்பது பலரும் அறியாதவை. கதாகாலட்சேபம் உச்சத்தில் இருந்த காலகட்டங்களில் (1990 - 1950) இப்படிச் சில துணுக்குகள் புகுந்திருக்கின்றன.
ஆதியில்...
ராமாயண உத்தர காண்டத்தில் ராமனின் மக்களான லவன்-குசன் இருவரும் ராமாயணக் கதையை ஜால்ரா அடித்தபடி பாடினார்கள்; நடித்தும் காட்டினார்கள் என வருகிறது. இது காலட்சேபம் எனப் பிற்காலத்தில் குறிக்கப்பட்டது. கதாகாலட்சேபம் என்பது ஹரிகதை, காலட்சேபம், ஹரிகதா காலட்சேபம் என்னும் பெயர்களால் தென்னிந்திய மொழிகளில் அழைக்கப்பட்டிருக்கிறது. பழைய காவியங்களையோ புராணங்களையோ வேறு கதைகளையோ இசை/ உரைநடைவழி குறிப்பிட்ட பாணியில் நிகழ்த்திக் காட்டுவது கதாகாலட்சேபம். தமிழ் மண்ணில் காலட்சேபம் என்பது நேரத்தைப் போக்குதல், வாழ்க்கையை நகர்த்தல் என்னும் பொருளிலும் வழங்குகிறது.
கதை சொல்லும் உத்தி
இந்த வகை நிகழ்த்துதலுக்குப் பொதுவான தன்மை உண்டு. கதை கூறல், துணைக்கதை கூறல், நகைச்சுவைத் துணுக்கு கூறல் முதலியன முக்கியமானவை. நெறிப்படுத்தப்பட்ட இசை, பலவகைப்பட்ட இசை வடிவங்கள், பக்தியைப் புலப்படுத்தும் நோக்கம், நிகழ்வை அலுப்பின்று கொண்டுசெல்லும் முறை, நிகழ்த்துனரின் உடல் பாவனையெல்லாம் கலந்தது கதாகாலட்சேபம்.
மராட்டியத்திலிருந்து தமிழுக்கு...
இந்தக் கலை மராட்டியத்தில் தோன்றியது. மராட்டிய துக்காராம், ராமதாஸ், ஜனேஸ்வரர் போன்றோர் பாகவதம், ராமாயணம், பாரதக் கதைகளைப் பாடிய முறைதான் மராட்டிய மண்ணில் கதாகாலட்சேபம் தோன்றக் காரணம் என்பார்கள். இது பாண்டுரங்க பண்டரிநாத வழிபாட்டு மரபிலிருந்து வந்தது என்றும் கூறுகிறார்கள். தஞ்சை மராட்டிய அரசர்களில் துளாஜாஜி (1763 - 1787) காலத்தில் தியாகப்பிரம்மத்தின் தந்தை ராமப்பிரம்மம் ராமாயணக் கதை நடத்திய முறையே கதாகாலட்சேபத்துக்கு மூலம் என்றாலும் வரகூர் கோபாலபாகவதரும் தஞ்சை கிருஷ்ண பாகவதரும் இந்தக் கலையின் முன்னோடிகள் என்கிறார் கதாகாலட்சேபக் கலையை விரிவாக ஆராய்ந்த முனைவர் பிரமிளா குருமூர்த்தி.
கோபால பாகவதர்
தஞ்சையிலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள வரகூர் கிராமத்தில் பிறந்த கோபால பாகவதர் (1815 - 1877) மராட்டிய அரசர் இரண்டாம் சிவாஜியின் காலத்தவர். கிருஷ்ணபக்தியைப் பரப்பியவர்களில் இவர் முக்கியமானவர். இவர் தஞ்சைப் பகுதிகளில் கோயில் கோயிலாகச் சென்று நிகழ்ச்சி நடத்தியவர். கையில் தம்புரா ஏந்திக் காலில் சலங்கையும் கட்டிச் சென்றவர். நிகழ்ச்சிக்கு ஏற்ப அபிநயம் பிடிக்கவும் செய்தவர்.
கிருஷ்ண பாகவதர்
கோபால பாகவதர் கதாகாலட்சேபத்தைத் தமிழ் மண்ணுக்கு அறிமுகப்படுத்தினாலும் அதைத் தமிழுக்கேற்ப வடிவமைத்தவர் கிருஷ்ண பாகவதர்தான் (1841 - 1905). இவர் ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர். தந்தை வெங்கட சாஸ்திரி இறந்தபின் அம்மாவுடன் தஞ்சைக்கு வந்தார். அப்போது மராட்டிய அரசரின் அமைச்சராயிருந்த பெரியண்ணன் உதவியால் முறையாகச் சங்கீதம் படித்தார். மராத்திய கீர்த்தனைகளைத் தமிழ் காலட்சேபத்துக்காக மாற்றிய இவரின் இறுதிக்காலத்தில் இந்தக் கலையை நிகழ்த்த பலர் வந்தார்கள். இவர் தியாகையரின் பாடல்களிலிருந்தும் மேட்டூர் பாகவத மேளா நிகழ்ச்சிகளிலிருந்தும் இசை வடிவங்களை எடுத்துக்கொண்டார்.
இசைக்கருவிகளும் கலைஞர்களும்
கதாகாலட்சேபத்துக்குரிய இசைக்கருவிகள் ஆர்மோனியம் அல்லது வயலின், மிருதங்கம், சிப்ளாக்கட்டை, ஜால்ரா என்பது பொதுமரபு. கிருஷ்ண பாகவதர் குழுவில் கடம், கஞ்சிரா போன்றவையும் இருந்தன. சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் குழுவில் இருந்த சரபசாஸ்திரி என்பவர் புல்லாங்குழலை இசைத்தார். ஆந்திரக் கதாகாலட்சேப நிகழ்வில் வீணை, கிளாரிநெட், புல்லாங்குழல், கடம் போன்றவற்றையும் பயன்படுத்தினார்கள்.
கதாகாலட்சேப நிகழ்வில் கலைஞர்கள் அமரும்/ நிற்கும் முறையில் ஒரு மரபும் நியதியும் உண்டு. பொதுவாகக் காலசேபம் நிகழ்த்தும் முக்கியக் கலைஞர், மிருதங்கம் அடிப்பவர், ஆர்மோனியம் அல்லது வயலின் இசைப்பவர், தம்பூரா மீட்டுபவர், ஜால்ரா அடிப்பவர் என ஐந்து கலைஞர்கள் இக்கலையில் பங்கு கொள்ளுகின்றனர். முக்கியமான பாடகர் கையில் சிப்ளாக்கட்டையுடன் நின்றுகொண்டிருப்பார். இவரது வலதுபுறம் மிருதங்கம் அடிப்பவரும் இடதுபுறம் ஹார்மோனியம் இசைப்பவரும் அமர்ந்திருப்பார்கள். இவ்விருவருக்கும் பின்னே வலது புறம் ஜால்ரா அடிப்பவரும் இடதுபுறம் தம்புரா இசைப்பவரும் நின்றுகொண்டிருப்பார்கள். இந்த முறைகளில் விதிவிலக்குகளும் உண்டு.
கதாகாலட்சேப நிகழ்ச்சி ஐந்துமணி நேரம்கூட நிகழ்வதுண்டு. தமிழ், சமஸ்கிருத கலப்பில் பிராமணப் பேச்சு வழக்கில் கதை விளக்கம் அமைந்திருக்கும், பாட்டுகள் கர்னாடக, இந்துஸ்தானி இசையிலும் நாட்டார் இசை வடிவிலும் இருக்கும், பார்சி அரங்கின் செல்வாக்கும் இதில் உண்டு.
மையப்பொருள்
கதாகாலட்சேபத்துக்குரிய கதைகள் ராமாயணமும் பாரதமும் புராணங்களும்தான். டி.வி.எஸ். மகாதேவ சாஸ்திரி என்பவர் மராட்டியத்திலிருந்து சில புராணக் கதைகளை கதாகாலட்சேப நிகழ்ச்சிக்கென்றே தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். ராதா கல்யாணம், கணேச ஜென்மம், கருட கர்வ காரணம், ருக்மாங்கதன் சரிதம், குசேலபாக்யானம், அகல்யா சாபவிமோசனம் என்னும் இந்தக் கதைகள் 1925–28 வாக்கில் அச்சில் வந்துவிட்டன. மகாதேவ சாஸ்திரியின் ‘ஹரிகதா ரத்னாவழி’ கதாகாலட்சேபம் பற்றியது. தமிழில் கதாகாலட்சேபத்துக்கென்று திட்டமிட்டு எழுதப்பட்ட பனுவல் எதுவும் இல்லை என்கின்றனர். ஆனால், கோபாலகிருஷ்ண பாரதியின் ‘நந்தனார் கீர்த்தனை’ (1848) காலட்சேபத்துக்குரிய தளத்தை விரிவுபடுத்தியது. இந்த நூலில் உள்ள சிந்துப் பாடல்கள் இக்காலகட்டத்துக்கு ஏற்ப லாவணி, கடகா என்றும் மராட்டிய இசை வடிவுடன் பாடப்பட்டது.
கிறிஸ்தவ கதாகாலட்சேபம்
தனபாண்டியன் என்பவர் பழைய ஏற்பாட்டின் கதைகளைக் கதாகாலட்சேபமாக நடத்தினார். இதற்கு வேதநாயகம் சாஸ்திரியின் பாடல்களை இசையுடன் பாடினார். 60-களில் உடல்நலம் பேணல், எழுத்தறிவு விழிப்புணர்வு போன்ற கதாகாலட்சேபம் வழி பிரச்சாரம் செய்யப்பட்டது.
இரு கலைஞர்கள்
தமிழகத்துக் கதாகாலட்சேபக் கலைஞர்களில் பண்ணைபாய், எம்பார் இருவரும் குறிப்பிடத் தகுந்தவர்கள். பண்ணை பாய் தஞ்சை கிருஷ்ணபாகவதரின் பாணியைப் பின்பற்றியவர். சம்ஸ்கிருதம், இந்தி, கன்னடம், ஆங்கிலம் எனப் பலமொழி அறிவு உடையவர். இவர், ‘சாந்தா சக்குபாய்’ என்னும் படத்தில் நடித்திருக்கிறார்; தென்னிந்தியாவில் புகழ்பெற்ற கலைஞர். எம்பார் விஜயராகவாச்சாரியார் 1909-ல் பிறந்தார். இவரும் தமிழ், தெலுங்கு எனப் பல மொழிகள் அறிவுடையவர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சம்ஸ்கிருதம் படித்தவர். சினிமா பாடகர் சிதம்பரம் ஜெயராமனின் தந்தை வழுவூர் சுந்தரம் பிள்ளையிடம் சங்கீதப் பயிற்சி பெற்றவர்.
கேரளத்தில் கதாகாலட்சேபம்...
மராட்டியரின் கதாகாலட்சேப வடிவம் தென்னிந்திய மொழிகளையெல்லாம் பாதித்திருக்கிறது. கேரளம் தவிர்த்த பிற இடங்களில் இசைவடிவம், முனைப்புடன் நின்றது. கேரளத்தில் கதை விளக்கத்தில் நாடகத்தன்மை அதிகம். இங்கு பழம் இலக்கியங்களும், பிரபலமான நாவல்களும் பாடுபொருளாக இருந்தன. உள்ளுர் பரமேஸ்வர அய்யர், வள்ளத்தோள், குமாரன் ஆசான் கவிதைகளைக்கூட எடுத்துக்கொண்டு விளக்கினார்கள். கேரள மார்க்ஸிஸ்ட்டுகள் தேர்தல் பிரச்சாரத்துக்குக் கூட இந்தக் கலை வடிவைப் பயன்படுத்தினார்கள்.
-அ.கா. பெருமாள், நாட்டுப்புறவியலாளர்,
‘சடங்கில் கரைந்த கலைகள்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: perumalfolk@yahoo.com