

அறிவியலும் ஆன்மிகமும் எப்போதுமே எதிரெதிர் துருவங்களில் பயணிப்பவை. அமெரிக்க அறிவியலாளரும் வரலாற்று ஆய்வாளருமான ஜான் வில்லியம் டிராப்பர் மதங்களுக்கும் அறிவியலுக்கும் இடையேயான கருத்து மோதல் குறித்து, ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதிய, ‘History of the conflict Between Religion and Science’ நூலின் தமிழாக்கம் இது.
உலகம் முழுவதும் மதங்கள் எப்படித் தோற்றுவிக்கப்பட்டன, அவை முன்மொழிந்த கருத்துகள் அறிவியலின் வளர்ச்சியால் எப்படிக் கேள்விக்கு உட்படுத்தப்பட்டன போன்றவற்றை ஆதாரங்களோடு நிறுவியுள்ளார் ஜான் டிராப்பர். தொழில்நுட்ப வளர்ச்சியிலும் செயற்கை நுண்ணறிவிலும் உச்சத்தைத் தொட்டிருக்கும் இந்நாளுக்கும் மிகப் பொருத்தமானதாக இருக்கிறது இந்நூல்.
கிரேக்கத் தத்துவவியலாளர்களிலிருந்து தொடங்கு கிறது இந்நூல். தகுதியற்ற தெய்விகத்துக்கும் இயற்கையின் இயக்க ஆற்றலுக்கும் இடையேயான மாறுபாட்டை உணர்ந்து, அதன் வழியில் அனைத்தையும் அவர்கள் அனுமானித்தனர். உலகம் முழுவதும் வெவ்வேறு மதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வந்த நிலையில், கிறிஸ்துவத்தின் தோற்றத்துக்குப் பிறகு அது ஏற்படுத்திய மாற்றத்தை இந்நூல் கவனப்படுத்துகிறது.
மதக் கோட்பாடுகள், சடங்குகள் போன்றவை எதேச்சதிகாரத்தையும் தூய்மைவாதத்தையும் எப்படிக் கட்டமைத்தன என்பதும் விவாதிக்கப்பட்டுள்ளது. காலந்தோறும் பேரரசுகளும் அவை முன்மொழிந்த கடவுளர்களும் இருந்ததைப் போலவே அறிவியலைத் துணைகொண்டு அதை மறுபரிசீலனைக்கு உட்படுத்தச் சொன்ன அறிவியலாளர்களும் இருந்தனர்.
ஆனால், போதிய விழிப்புணர்வும் கல்வியறிவும் இல்லாத சூழலில் மக்களையும் அவர்களது கடவுள் நம்பிக்கையையும் பகடைக்காயாக்கிப் பல அறிவியலாளர்களும் கோட்பாட்டு அறிஞர்களும் கொல்லப்பட்டனர். பின்னாளில் உலகம் மறுமலர்ச்சியை நோக்கி மெல்ல நகர்ந்தபோது, கொல்லப்பட்டவர்களின் கொள்கைகளும் கண்டுபிடிப்புகளும் காலத்தைத் தாண்டி விஞ்சி நின்றன. இதைக் கால, நிலவியல் அடிப்படையில் வில்லியம் டிராப்பர் விளக்கியுள்ளார்.
நெஸ்டோரியன்கள், யூதர்கள் ஆகியோரின் தாக்கத்தால் அராபியர்கள் அறிவியல் வளர்ச்சியின் பக்கம் திரும்பியது மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. கலிபாக்கள் மிகப் பெரிய நூலகங்களை அமைத்தார்கள். அறிவியல், இலக்கியம் போன்றவற்றை ஆதரித்தார்கள்.
கிரேக்கக் கணிதவியல், வானியல் கண்டுபிடிப்புகளைத் தொகுத்து மொழிபெயர்த்தார்கள். இது மனித குலம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர உதவியது. உலகம் தட்டை என்றும் சொர்க்கம் - நகரம் போன்ற கருத்தாக்கங்கள் குறித்தும் மதங்கள் போதித்தபோது, உலகம் உருண்டை என்று அறிவியல் நிரூபித்தது.
அறிவியல் கண்டுபிடிப்புகள் போலியான கருத்தாக்கங்களைத் தவிடுபொடியாக்கின. ஆன்மா குறித்த தெற்காசிய நாடுகளின் கருத்தாக்கம் போதுமான ஆதாரங்கள் இல்லாத நிலையில் ‘ஆவி’ குறித்த அச்சம் மக்களிடையே பரவலாக இருந்தது. மனித உடற்கூறு குறித்த அறிவியல் பார்வை விசாலமானபோது ஆத்மா சர்ச்சை, ஆன்மிகத்துக்குள் புகுத்தப்பட்டுக் கேள்விகளுக்கு அப்பாற்பட்டதாக ஆக்கப்பட்டது. இதையும் அறிவியல்தான் களைய வேண்டியிருந்தது.
தொழில்நுட்ப வளர்ச்சி, பயணங்கள், அச்சுக் கலைக் கண்டுபிடிப்பு, அறிவியல் கழகங்கள் போன்றவை உலக அளவிலான அறிவியல் மறுமலர்ச்சிக்கு வித்திட்டன. கிரகணங்களையும் கடல் சீற்றத்தையும் நிலநடுக்கத்தையும் தெய்வத்தின் கோபம் என்று நம்பிக்கொண்டிருந்த மனிதனுக்குக் கோள்களின் அமைவிடம், நட்சத்திரங்களின் தொலைவு, பூமியின் வயது போன்ற கண்டுபிடிப்புகள் புதிய பாதையைக் காட்டின.
இவ்வளவு நெடிய பயணத்தைப் பற்றி நாம் அறிந்துகொள்ளாத வரையில், நாம் தற்போது எவ்வளவு வசதியான உலகத்துக்குள் இருக்கிறோம் என்பது விளங்காது. அறிவியலின் அனைத்து வசதிகளையும் அனுபவிக்கும் இந்தச் சமூகம், இன்னும் பழைய கருத்தாக்கங்களை இறுகப்பற்றிக்கொண்டிருப்பது விசித்திரமானது என்பதைத்தான் இந்த நூல் உணர்த்துகிறது.
கடினமான கருத்துகளையும் அறிவியல் சொற்களையும் எளிய நடையில் மொழிபெயர்த்துள்ளார் ஓவியா. ஒவ்வொரு காலகட்டத்தையும் 12 நெடும் அத்தியாயங்களாகப் பிரித்துத் தந்திருப்பது வாசிப்பை எளிதாக்குகிறது.
மதத்துக்கும் அறிவியலுக்குமான மோதலின் வரலாறு
ஜான் வில்லியம் டிராப்பர் (தமிழில்: ஓவியா)
கருஞ்சட்டைப் பதிப்பகம்
விலை: ரூ.450
தொடர்புக்கு: 044-24726408
- தொடர்புக்கு: brindha.s@hindutamil.co.in