பேராசிரியர் க. பஞ்சாங்கம் 75: திறனாய்வுக் கலைஞன்

பேராசிரியர் க. பஞ்சாங்கம் 75: திறனாய்வுக் கலைஞன்
Updated on
3 min read

அமைப்பியல், பின் அமைப் பியல், பெண்ணியம், தலித்தியம், மார்க்சியம், பின் நவீனத் துவம் முதலியன தமிழில் அறிமுகமான பின்பும் கோட்பாடுகளைச் செறித்துக்கொண்டு இலக்கியத் திறனாய்வை மேற்கொள்பவர்கள் தமிழில் மிகவும் குறைவு.

தமிழ்க் கல்வியாளர் களுக்கும் சிறு பத்திரிக்கை யாளர்களுக்கும் மிகப் பெரிய இடைவெளி இருப்பதையும் சுட்ட வேண்டி உள்ளது. இந்த இடைவெளியைக் குறைக்கும் குறியீடாகத்தான் பேராசிரியர் க.பஞ்சாங்கத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. திறனாய்வு என்ற பெயரில் வெறும் அபிப்பிராயங்களே உதிர்க்கப்படும் சூழலில், திறனாய்வு உலகிற்குள் நுழைந்தவர் பஞ்சு என்கிற க.பஞ்சாங்கம்.

ஜெயகாந்தன் நடத்திய ‘ஞானரதம்’ இதழில் எழுதிய ஒரு கவிதையின் மூலம் இலக்கிய உலகில் நுழைந்த பஞ்சாங்கம் ‘ஒட்டுப்புல்’ என்கிற கவிதைத் தொகுப்பின் மூலம் கவனம் பெற்றார். தொடர்ந்து ‘நூற்றாண்டுக் கவலைகள்’, ‘பயணம்’ முதலிய கவிதை நூல்களையும் ‘மத்தியில் உள்ள மனிதர்கள்’, ‘ஒரு தலித் ஒரு அதிகாரி ஒரு மரணம்’, ‘அக்கா’ ஆகிய நாவல்களையும் எழுதியுள்ளார்.

இலக்கியத் தளத்தில் இவ்வாறு இயங்கி இருந்தாலும் க.பஞ்சாங்கத்தை ஒரு திறனாய்வாளராக மட்டுமே தமிழ் உலகம் அடையாளம் கண்டுள்ளது. அதற்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை. கோட்பாடுகளைச் செறித்துக் கொள்ளாமல் மொண்ணையான அபிப்ராயங்களையே இன்றும் உதிர்த்துக்கொண்டிருக்கிற தமிழ்ச் சூழலில், கோட்பாடுகளின் அடிப்படையில் வினைபுரிந்தவர் க.பஞ்சாங்கம்.

திறனாய்வு குறித்துத் தீவிரமாக இயங்கியவர்கள் என்று நா.வானமாமலை, க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, கோ.கேசவன், எம்.ஏ.நுஃமான், கோவை ஞானி போன்ற இடதுசாரிச் சிந்தனையாளர்களையும் தமிழவன், க.பூரணச்சந்திரன், தொ.பரமசிவன், ராஜ்கௌதமன் போன்ற கல்வியாளர்களையும் குறிப்பிடலாம். இவர்கள் அனைவரிடமிருந்தும் மாறுபட்டவர் க.பஞ்சாங்கம்.

கோட்பாட்டு மரபில் ஏற்படுத்திய தாக்கம்: மார்க்சியம், பெண்ணியம், தலித்தியம் போன்ற கருத்தாக்கங்களை அறிந்திருந்தாலும் எந்தவொரு கோட்பாட்டிற்குள்ளும் சிக்கிக்கொள்ளாமல் தனித்து இயங்கியவர் க.பஞ்சாங்கம். தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு என்ற நூலின் மூலம் அடையாளப்படுத்தப்பட்டாலும் நார்த்ராப் ஃப்ரையின் ‘இலக்கியத்தில் தொல்படிவம்’ என்கிற நூலை மொழிபெயர்த்துத் தந்ததன் மூலம் தமிழ்த் திறனாய்வு உலகின் போக்கை மாற்றியமைத்தார்.

ஹெலன் சிக்சூ என்கிற பெண்ணியலாளரைத் தமிழில் அறிமுகப்படுத்தியதன் வழி, பெண்ணியம் வெறும் ஒரு சூத்திரமாக மாறிவிடாமல் அதற்கொரு கோட்பாட்டு அடையாளத்தை ஏற்படுத்தினார். பெண்ணியம் என்றாலே ஆண்களுக்கு எதிரானது, ஆண் மைய வாதத்திற்கு எதிரானது என்ற புரிதல் உருவான சூழலில் க.பஞ்சாங்கத்தின் ‘ஹெலன் சிக்சூ’ என்னும் நூல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம்.

தலித் கவிதைகள், தலித் அரங்கியல், தலித் நாவல்கள் குறித்தெல்லாம் தன்னுடைய கருத்துகளைப் பதிவு செய்தவர் க.பஞ்சாங்கம். அவ்வகையில் ‘தலித்துகள் - பெண்கள் - தமிழர்கள்’ என்ற நூல் குறிப்பிடத்தகுந்தது. தலித் இலக்கியத்தைத் தலித்துகள்தான் படைக்கவேண்டும் என்றும் தலித் அல்லாதவர்களும் படைக்கலாம் என்றும் வாதப் பிரதி வாதங்கள் தோன்றிய காலகட்டத்தில் வரலாற்றுரீதியாக இப்பிரச்சினையை எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும் என்பதை இந்த நூலில் ஆழமாகப் பதிவுசெய்துள்ளார் க.பஞ்சாங்கம்.

ஒரு கொள்கை, கோட்பாடு என்று இயங்கும் இலக்கியம் திரும்பத் திரும்ப ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் சிக்கி, ஒற்றைப் பரிமாணம் பெற்று வாழ்க்கையின் பன்முகங்களைக் கண்டுகொள்ளத் தவறிவிடுகிற விபத்திற்குள் மாட்டிக் கொள்ளாமல், தன் பயணத்தைத் தொடர வேண்டும் என்கிற கொள்கையைத் தன் திறனாய்வு வாழ்வில் தவறாமல் கடைப்பிடித்தவர் க.பஞ்சாங்கம்.

அதனால்தான் ழான் பொத்திரியார், ழூலியா கிறிஸ்தெவா, ஜார்ஜ் லூயி போர்ஹே, உம்பர்டோ ஈகோ, சிக்மெண்ட் ஃபிராய்டு, நார்த்ராப் ஃப்ரை, ரெமன் செல்டன், டோரிஸ் லெஸ்ஸிங், சப்னா ஆஸ்மி, ஆர்தர் க்ளேன்மான் - ஜோன் க்ளேன்மான், அருந்ததி ராய், மார்க்கண்டேய கட்ஜு, சுபோச்சி ஷோயோ, ஜியார்ஜ் லூகாக்ஸ் போன்ற சிந்தனையாளர்களின் கோட்பாடுகளையும் சிந்தனைகளையும் மொழிபெயர்த்துள்ளார்.

தமிழில் சமூகச் சிந்தனை வரலாறு குறித்து எந்தவித அக்கறையும் இல்லாமல் பெரும்பாலான இலக்கியவாதிகளின் விமர்சனங்கள் அபிப்பிராயங்கள் என்கின்ற எல்லையிலேயே நின்றுவிடுகின்றன. மேலை நாட்டினரின் சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டு, தமிழ்ச் சூழலில் பொருத்திப் பார்த்து அதற்கொரு கோட்பாட்டு முகத்தைத் தந்ததே க.பஞ்சாங்கத்தின் சாதனை.

இலக்கியமும் கோட்பாடும்: சிலப்பதிகாரத் திறனாய்வுகள் குறித்து முனைவர் பட்டத்தை மேற்கொண்டாலும் ‘சிலப்பதிகாரத்தில் பயணங்கள்’ என்கின்ற வித்தியாசமான நூலைப் பஞ்சுவால் எழுத முடிந்ததற்குக் காரணம் அவருடைய இடைவிடாத தேடல்தான். பாதிக்கப்பட்டவர்களின் சார்பாகவே அவருடைய அனைத்துச் செயல்பாடுகளும் இருந்தன. அதே சமயத்தில் வாழ்க்கை புனைவுகளால் கட்டப்பட்டது என்கிற தெளிவான புரிதலும் பஞ்சாங்கத்திற்கு இருந்தது.

பிரேம் ரமேஷ், தமிழவன், எம்.ஜி.சுரேஷ் ஆகியோரின் எழுத்துகளை மிக இயல்பாக வாசகர்களிடம் கொண்டு சேர்க்கின்ற திறனும் பஞ்சாங்கத்திற்கு உண்டு. சுருக்கமாகச் சொல்வதென்றால், தொல்காப்பியம் முதல் மாலதி மைத்ரி வரை தமிழின் நீண்ட இலக்கியப் பரப்பை ஆழமாகக் கற்று, கோட்பாட்டுப் பின்புலத்தில் விளக்கம் தந்து, உரையாடலாக மாற்றுகின்ற ஒரு சிந்தனைப் போக்கை மேற்கொண்டார். அதனால்தான் கல்வியாளர்களும் பஞ்சுவைக் கொண்டாடுகின்றனர். சிறுபத்திரிகையாளர்களும் பஞ்சுவின் விமர்சனங்களை ஏற்றுக்கொள்கின்றனர்.

கி.ரா.வுடன் இணைந்து ‘கதைசொல்லி’ என்னும் இதழைக் கொண்டுவந்தார் க.பஞ்சாங்கம். பஞ்சு பரிசில் என்னும் பெயரில் தமிழில் காத்திரமாகப் பங்களிப்புச் செய்பவர்களுக்கு இலக்கிய விருதுகள் அவருடைய நண்பர்களால் வருடந்தோறும் வழங்கப்படுகின்றன. எனினும் விருதுகளின் மீது பஞ்சுவிற்கு நாட்டமில்லை என்பதையும் இங்கு பதிவுசெய்தாக வேண்டும்.

வாழ்க்கையை ஒரு புனைவாகவும், இலக்கியத்தை மொழி விளையாட்டாகவும், வரலாற்றை அதிகாரக் கட்டமைப்பாகவும், திறனாய்வை அரசியல் செயல்பாடாகவும் புரிந்துகொள்ள பஞ்சுவின் எழுத்துக்கள் உதவுகின்றன. மார்க்சியம், தமிழ்த் தேசியம், தலித்தியம், பெண்ணியம், பெரியாரியம் ஆகிய முற்போக்குச் சிந்தனைகள் இன்றைய தமிழ் ஆய்வாளர்களுக்குத் தேவை என்பதை எப்பொழுதும் வலியுறுத்தி வருபவர் பஞ்சு.

கோட்பாடுகளைச் சூத்திரங்களாகச் சுருக்கி, இலக்கியத்தித்தின் அழகியலை அழித்து, வெறுமனே பழைய இலக்கியங்களையும் கோட்பாடுகளையும் சமப்பட இணைத்துவிடுகிற போக்கு இன்றைய ஆய்வாளர்களிடம் வெளிப்படுவதைச் சுட்டி அவர்களைத் தன் நேர்காணல்களில் அன்பாக எச்சரிக்கிறார் பஞ்சு.

க.பஞ்சாங்கம் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர் இல்லை. ஆனால், அவருடைய மேற்கோள்கள் இல்லாமல் இன்று தமிழில் எந்த ஆய்வேடுகளும் வெளிவருவதாகத் தெரியவில்லை. பஞ்சுவை ஒரு சிறு பத்திரிகையாளராகச் சுருக்கிவிட முடியாது. ஆனால், காத்திரமாக நடைபெறும் கருத்தரங்குகளில் பஞ்சுவின் சிந்தனைகள் பேசப்படாமல் இருப்பதில்லை.

ஆரவாரமின்றி மொழிக்கு உழைத்துக் கொண்டிருக்கிற க.பஞ்சாங்கம் போன்றவர்களால்தான் தமிழ் ஜீவித்துக்கொண்டிருக்கிறது என நம்புகிறேன் என நாகரத்தினம் கிருஷ்ணா ஒருமுறை குறிப்பிட்டார். க.பஞ்சாங்கத்தின் தமிழ்ப் பங்களிப்புக்குப் பொருத்தமான கூற்று இது.

- பா.இரவிக்குமார் | இணைப்பேராசிரியர், புதுவைப் பல்கலைக்கழகம்; தொடர்புக்கு: paa.ravikumar1@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in