நூல் நயம்: சூரனை அழித்த வீரனின் கதை

நூல் நயம்: சூரனை அழித்த வீரனின் கதை
Updated on
3 min read

வன்னிய புராணம்
வழக்கறிஞர் கே.பாலு
பாட்டாளி வெளியீட்டகம்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 9444088866


இந்து புராணங்கள் 18இல் ஒன்று அக்னி புராணம். இது வன்னிய புராணம் என்றும் அழைக்கப்படுவதாக ‘வன்னிய புராணம்’ நூலின் ஆசிரியர் வழக்கறிஞர் கே.பாலு குறிப்பிடுகிறார். அந்த வன்னிய புராணத்தின் சுருக்கத்தை எளிமையான மொழியில் கே.பாலு சொல்லியிருக்கிறார். அக்னி புராணம் அறிமுகத்தை நூலின் முதல் பகுதி விளம்புகிறது. அக்னி என்ற சொல்லுக்கு வன்னி என்று தமிழ்ப் பொருள் உண்டு. யாகம் வளர்த்து உண்டான அக்னியிலிருந்து உதித்தவர் என்பதால் இவர் வன்னிய வீரர் என அழைக்கப்படுகிறார். அந்த யாகம் நடப்பதற்கான சூழல் எவ்வாறு உண்டானது என்பதைப் புராணச் சம்பவங்களின் வழி நூலாசிரியர் சொல்கிறார். விஷ்ணு, சிவன், நாரதர் எனப் புராண காலத் திரு உருக்கள் இதில் வருகின்றன. ஒரு சூரனின் ஆட்சியில் தீமைகள் அதிகரிக்க, அதற்கு முடிவுகட்ட சம்பு மாமுனி யாகம் நடத்துகிறார். சிவன் அந்த யாகத் தீயிலிருந்து வீரவன்னிய ராஜனை உருவாக்குகிறார். அவர் நல்லாட்சி என்ற லட்சியத்துடன் நடைபோடுகிறார். அவரது இந்தப் பாதையை நூலாசிரியர் இந்த நூலில் விவரித்துள்ளார்.


வியக்கவைக்கும் பழந்தமிழர் சிந்தனைகள்

மாத்தளைசோமு
தமிழ்க்குரல் பதிப்பகம், திருச்சி
விலை: ரூ.300
தொடர்புக்கு: mathtalaisomu@gmail.com

பெருமிதப் பெட்டகம்

தமிழ்ச் சங்க இலக்கியம் பண்டைய வரலாற்றை, பண்பாட்டை அறிந்துகொள்ள உதவும் ஒரு கருவி. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழரின் வாழ்க்கை முறை, கல்வி, அரசியல் அறிவு, மருத்துவம் எனப் பலவற்றையும் சங்கப் பாடல்களின் வழி அறியத் தந்திருக்கிறார் மாத்தளைசோமு. இன்றைய தலைமுறையினரால் எளிதாக எடுத்தாளப்படும் ‘அறம்’ என்கிற சொல்லில் தொடங்கி மன்னராட்சி நடைமுறையில் இருந்த ‘மனித உரிமைகள்’ வரை பல்வேறு அம்சங்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. வாணிபத்திலும் மண்ணியலிலும் நீர்மேலாண்மையிலும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சீர்மையோடு தமிழர்கள் விளங்கியிருக்கிறார்கள் என்பதையும் இந்நூல் எடுத்துரைக்கிறது. சங்கப் பாடல்களுக்கு எளிய மொழியில் விளக்கம் கொடுத்திருப்பது அனைவரும் புரிந்துகொள்ள உறுதுணையாக உள்ளது. பழம்பெருமை பேசும் நோக்கில் அல்லாமல் இன்றைக்கும் தேவைப்படுகிற அருஞ்சிந்தனைகளை வாசகருக்குக் கடத்தும்விதத்தில் இந்நூல் இருக்கிறது.


தூத்துக்குடி மாவட்டத்தில் அறியப்படாத தியாகிகள்
முத்தாலங்குறிச்சி காமராசு
தூத்துக்குடி மாவட்டம் நிர்வாக வெளியீடு
விலை: ரூ.550
தொடர்புக்கு: 8760970002, 9442834236

அறியப்படாத தியாகிகள்

தூத்துக்குடி மாவட்டம் இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின் முக்கியக் களமாக இருந்தது. ஆனால், கட்டப்பொம்மன், பாரதியார், பூலிதேவன், வாஞ்சிநாதன், அழகுமுத்துக்கோன், வ.உ.சி, வ.வே.சு போன்ற போராட்டத் தியாகிகளில் சிலரை மட்டும்தான் நினைவில் வைத்திருக்கிறோம். நாம் நினைவஞ்சலி செலுத்த மறந்த தியாகிகள் பலர் உள்ளனர். அந்தத் தியாகிகளை நினைவுகூர்கிறது இந்நூல். தியாகி பெஞ்சமின், முத்துப்பட்டவராயன், ஆறுமுகநேரி தங்கவேல், மதுரகவி பாஸ்கரதாஸ், எம்.சி. வீரபாகு, செந்தில் பெருமாள், லெட்சுமி, மாசிலாமணி, ஜெபமணி போன்ற கவனம் பெறாமல் போன தியாகிகளை இந்நூல் கண்முன் நிறுத்துகிறது. இந்தத் தியாகிகளின் விடுதலைப் போராட்டங்கள் குறித்த சான்றுகளை இந்நூல் கவனத்துடன் பதிவுசெய்கிறது. ஆஷ், லோன் ஆகிய ஆங்கிலேயே அதிகாரிகள் கொல்லப்பட்ட சம்பவங்களும் தரவுகளுடன் இந்நூலில் சொல்லப்பட்டுள்ளன. இந்தக் கொலைச் சம்பவங்களால் விடுதலைப் போராட்ட வீரர்கள் மீது பிரிட்டிஷ் அரசு பிரயோகித்த வன்முறையையும் நூலாசிரியர் முத்தாலங்குறிச்சி காமராசு சொல்லத் தவறவில்லை. வ.உ.சிதம்பரனாரின் சிறைவாசம் காட்சிகளாக நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. உடன்குடி விடுதலைப் போராட்ட வீரர்களால் கொல்லப்பட்டவர்தான் பிரிட்டிஷ் அதிகாரி லோன். இவருடைய சகோதரிகள் தங்களுடைய சகோதரனைக் கொன்றவர்களுக்கு அளிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை ரத்துசெய்யக் கோரி வைஸ்ராய்க்குக் கடிதம் எழுதியுள்ளனர். இந்த அரிய தகவலை இந்நூல் வழி அறிந்துகொள்ள முடிகிறது. எளிய எழுத்து நடையில் சொல்ல வந்த விஷயத்தை அழகாகச் சொல்லியிருக்கிறார் காமராசு. அறியப்படாத தியாகிகள் 200க்கும் மேற்பட்டோரின் ஒளிப்படங்களைச் சேகரித்து இணைத்திருப்பதும் இறுதியில் குலசை சுதந்திர போர் என்ற தலைப்பில் லோனின் கொலை வழக்கை நாடகமாக எழுதிச் சேர்த்திருப்பதும் இந்நூலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது.

- த.ஜான்சி பால்ராஜ்


வாசிக்க வேண்டிய சமகால வரலாறு


கொரியப் போர்: ஒரு வரலாறு
புரூஸ் கம்மின்ஸ்
தமிழில்: க.விஜயகுமார்
தமிழோசை பதிப்பகம்
கோயமுத்தூர்
விலை: ரூ.350
தொடர்புக்கு: 9788459063


தென்கொரியா-வடகொரியா இடையில் 1950-53 காலகட்டத்தில் நடந்த கொரிய உள்நாட்டுப் போர் குறித்து, அமெரிக்காவைச் சேர்ந்த வரலாற்றாய்வாளரான புரூஸ் கம்மின்ஸ் 2010இல் எழுதிய நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு இது. சிகாகோ பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைத் தலைவராகப் பணியாற்றிய கம்மின்ஸ், கொரிய வரலாற்றில் நிபுணத்துவம் வாய்ந்தவர். போரின் வெற்றி தோல்வி குறித்து மட்டுமல்லாமல், போரினூடாக கொரிய மக்களின் வரலாறு, பண்பாடு ஆகியவற்றையும் இந்நூல் பதிவு செய்திருக்கிறது. இதுவொரு உள்நாட்டுப் போர் என்பதால் அமெரிக்க, ஸ்பானிய உள்நாட்டுப் போர்களைப் பற்றியும் கம்மின்ஸ் தொட்டுச் செல்கிறார். ‘கொரியப் போர் குறித்த இந்நூல் அமெரிக்கர்களுக்காக, ஓர் அமெரிக்கரால் எழுதப்பட்டது,’ என முன்னுரையில் கம்மின்ஸ் குறிப்பிட்டாலும், சமகால வரலாறு மீது ஈடுபாடுள்ள எவரும் வாசிக்க வேண்டிய நூலாக இது அமைந்திருக்கிறது.

- அபி


உலகப் பார்வையை மேம்படுத்தும் நூல்

கிழக்கும் மேற்கும்
(பன்னாட்டு அரசியல் கட்டுரைகள்)
மு.இராமனாதன்
காலச்சுவடு பதிப்பகம்
விலை: ரூ.290
தொடர்புக்கு: 4652 278525, 96779 16696

ஹாங்காங்கின் பதிவுபெற்ற பொறியா ளரான மு.இராமனாதன் ‘இந்து தமிழ் திசை’ நடுப்பக்கத்திலும் வேறு சில அச்சு, இணைய இதழ்களிலும் கட்டுரைகளை எழுதிவருகிறார். பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகளை எழுதிவரும் இராமனாதன், சர்வதேச அரசியல் தொடர்பாக வெவ்வேறு இதழ்களில் எழுதிய 34 கட்டுரைகள் - கிழக்காசியா, தென்கிழக்காசியா/தெற்காசியா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா என பிராந்தியவாரியாக - இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. ஒரே விஷயம் குறித்து வெவ்வேறு இதழ்களில் எழுதப்பட்ட கட்டுரைகள் ஒன்றாக இணைக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்ட வடிவத்தில் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. பணி நிமித்தம் பல நாடுகளுக்குச் சென்றுள்ள நூலாசிரியர் உலக நாடுகளின் சமூக வரலாற்றுப் பின்னணி குறித்த புரிதலுடனும் நேரடி அனுபவத்துடனும் உரிய தரவுகள், வாதங்களை முன்வைத்து தமிழ் வாசகர்கள் சர்வதேச நிகழ்வுகள் குறித்த சரியான புரிதலையும் பார்வையையும் பெற உதவும் வகையில் இந்தக் கட்டுரைகளைப் படைத்துள்ளார். சில கட்டுரைகள் இந்தியாவுக்கும் உலக நாடுகளுக்கும் இடையிலான உறவுகள், அவை தொடர்பான வரலாற்றுரீதியான தகவல்களால் நிரம்பியுள்ளன. இந்தியா - சீனா இடையிலான எல்லைக் கோட்டு உரசல்கள் தொடர்பானவை உள்பட நாடுகளுக்கிடையிலான பிணக்குகள் தொடர்பான அனைத்து கட்டுரைகளும் நல்லுறவையும் சமாதானத்தையும் அந்தந்த நாடுகளின் எதிர்கால நலன், வளர்ச்சி ஆகியவற்றுக்கு உகந்த பரிந்துரைகளை வழங்குவதாக அமைந்துள்ளன. பொது அறிவை வளர்த்துக்கொள்ளவும் சர்வதேச அரசியல், இந்தியாவுக்கும் உலக நாடுகளுக்கும் இடையிலான உறவு ஆகியவை தொடர்பான மேம்பட்ட புரிதலைப் பெறவும் இந்த நூல் பெரிதும் உதவும்.


-நந்தன்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in