

இஸ்ரேலைச் சேர்ந்த தமிழ் அறிஞர் டேவிட் ஷுல்மன் வரும் வியாழக்கிழமை (16.02.2023) அன்று மாலை 7 மணிக்கு ‘A South Indian Theory of Consciousness’ என்னும் தலைப்பில் சென்னை, மயிலாப்பூர், பாரதிய வித்யா பவனில் உரை நிகழ்த்தவுள்ளார். பிரக்ருதி அறக்கட்டளை இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கிறது.
இளம் ஆய்வறிஞர் விருது பரிந்துரை: தமிழ் ஆய்வுக் களத்தில் தொடர்ந்து இயங்கிவரும் இளம் ஆய்வறிஞருக்கு ‘தமிழ்த் தடம்’ ஆய்விதழ் பேராசிரியர் பா.ரா.சுப்பிரமணியன் பெயரில் விருது வழங்கிக் கெளரவிக்கிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்குப் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ் மொழி, இலக்கணம், இலக்கியம், அகராதியியல், பண்பாட்டியல், நாட்டார் வழக்காற்றியல், தொல்லியல், மானுடவியல் போன்ற தமிழ் ஆய்வுத் துறைகளில் இயங்குபவராகவும் ஒரு ஆய்வு நூலும் ஆய்விதழில் கட்டுரைகளும் எழுதியவராக இருக்க வேண்டும். 40 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். தொடர்புக்கு: 9382853646
எழுத்தாளர் இமையம் கருத்தரங்கம்: எழுத்தாளர் இமையத்தின் எழுத்துகள் குறித்து செவ்வாய்க்கிழமை (14.02.23) அன்று ஒருநாள் கருத்தரங்கத்தை சென்னைப் பல்கலைக்கழக இலக்கியத் துறை, சென்னைப் பல்கலைக்கழகப் பவள விழாக் கலையரங்கில் ஒருங்கிணைக்கவுள்ளது.
மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி, நீதிபதி பிரபா தேவன், எழுத்தாளர் அரவிந்தன், பேராசிரியர்கள் அ.ராமசாமி, ஸ்டாலின் ராஜாங்கம், சுடர்விழி, மு.சரளா, அருள் செலஸ்டின் பிரேமா, ஆ.ஏகாம்பரம், கோ.பழநி ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
இலக்கியப் போட்டிகள்: ஸீரோ டிகிரி பப்ளிஷிங் 2023ஆம் ஆண்டுக்கான இலக்கிய விருதுக்கான ஆக்கங்களை வரவேற்கிறது. நாவல், குறுநாவல், சிறுகதை ஆகிய மூன்று வடிவங்களுக்கும் போட்டியை அறிவித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் நாவல்களுக்கு மொத்தம் ரூ.2 லட்சம் (5 நாவல்களுக்கு), குறுநாவல்களுக்குத் தலா ரூ.20,000 (5 குறுநாவல்களுக்கு), சிறுகதைகளுக்குத் தலா ரூ.10,000 (10 சிறுகதைகளுக்கு) பரிசுத் தொகைகள் வழங்கப்படவுள்ளன. அனுப்ப வேண்டிய கடைசித் தேதி: மே 31, 2023. யுனிகோடில், வேர்டு ஃபார்மட்டில் மட்டுமே ஆக்கங்களை அனுப்ப வேண்டும். மேலதிகத் தொடர்புக்கு: zerodegreeaward@gmail.com
இ.முத்தையாவுக்குப் பஞ்சு பரிசில்: பேரா.க.பஞ்சாங்கம் பெயரில் எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா நிறுவியுள்ள ‘பஞ்சு பரிசில்-2022’ விருதுக்கு மதுரைப் பல்கலைக்கழகம், நாட்டுப்புறவியல் துறையின் மேனாள் பேராசிரியர் இ.முத்தையா எழுதிய ‘கூட்டாக நிகழ்த்துதலும் தனியாக வாசித்தலும் - வாய்மொழி நிகழ்த்துதல் இலக்கியமான கதை’ என்ற நூல் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இதை தேர்வுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பாரதிபுத்திரன் அறிவித்துள்ளார்.
தீபச்செல்வன் நூல் கூட்டம்: ஈழத் தமிழ் எழுத்தாளர் தீபச்செல்வனின் ‘பயங்கரவாதி’ நாவல் குறித்த உரையாடல் நிகழ்வு நாளை (12.02.2023) மாலை 5:30 மணி அளவில் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் நடைபெறவுள்ளது. நடிகரும் இயக்குநருமான நாசர், ஓவியர் ‘டிராட்ஸ்கி’ மருது ஆகியோர் கலந்துகொண்டு பேசவுள்ளனர்.