

இரா.நாறும்பூநாதன்
கணவனை இழந்த தெற்கத்தி ஆச்சிகளின் வாழ்வியல் அனுபவங்களைத் தேடித்தேடி ‘ஆச்சிகளின் உலகம்’ நூலில் பதிவுசெய்துள்ளார் தங்கம் வள்ளிநாயகம். தனது பேத்திமார்களுக்குக் கூழ்வற்றல் போடுவது, தோசை மாவு அரைப்பது, திருவையில் பாசிப்பருப்பு திரிப்பது, வெண்கலப் பாத்திரத்தைப் புளி போட்டு விளக்குவது எப்படி என்றெல்லாம் சொல்லித்தருவது ஆச்சிமாரின் அன்றாட வழக்கங்கள்.
இது தவிர, நாட்டுப்புறக் கதைகளைப் பேரன், பேத்திகளிடம் உணர்ச்சிபொங்கச் சொல்லும் கலையும் இயல்பாகவே அவர்களிடம் அமைந்திருந்தது. அப்படி, இரண்டு ஆச்சிகளின் கதைகளை நூல் முழுவதும் சொல்கிறார் தங்கம். நூலிற்கு அணிந்துரை எழுதியுள்ள வண்ணதாசனின் வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால், ‘அந்தக் காலத்து அம்மாச்சிகளுக்கு, அப்பாச்சிகளுக்கு ஜாடை என்பது மூக்கு முழி அல்ல. பிரியம் ஒன்றுதான் அவர்களின் ஒரே ஜாடை.
பிரியத்துக்கு ஏது வேறு ஜாடை?’ இந்தப் பெண் பிள்ளைகள் ஆச்சியின் முதுகில் தொங்கி ஊஞ்சல் ஆடுகிறார்கள். ஆச்சியின் தொங்கும் கைச் சதையை ஆட்டிப் பார்த்து ‘ஏன்..?’ என்று கேட்கிறார்கள். பாம்படம் போட்டுத் தூர்ந்துபோன ஆச்சியின் காதுத் துளைகளில் விரலைவிட்டு வேடிக்கை காட்டுகிறார்கள். சின்ன வயதில் உடம்பில் உண்டாகும் மாற்றத்தையும் மனதில் உண்டாகும் பயத்தையும் அம்மாவைவிடவும் ஆச்சியிடம் சொல்லித் தெளிந்துகொள்கிறார்கள்.
ஒரு காலத்தில், போன தலைமுறையில், வளர்ந்து கல்யாணம் ஆகிப்போகிற பெண்பிள்ளைகள் அனைவருக்கும் வெயிலாகவும், மழையாகவும் ஆச்சிகளே இருந்திருக்கிறார்கள் என்று விதந்தோதுகிறார் வண்ணதாசன். இந்த அணிந்துரையையோ முகப்புப் படம் வரைந்த பொன்.வள்ளிநாயகத்தின் ஓவியத்தையோ பார்க்க நூலாசிரியர் தங்கம் வள்ளிநாயகத்துக்குக் கொடுத்துவைக்கவில்லை. புத்தகம் வெளியாவதற்குள் புற்றுநோயின் பாதிப்பில் அவர் இறந்துபோனது விவரிக்கவியலாப் பெரும் சோகம்.
பழங்குடிகளுக்காக வாழ்ந்தவரின் வரலாறு
நந்தன்
பீமா கொரேகான் வன்முறைக்குப் பங்களித்தவர், மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பில் இருந்தவர் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 2020இல் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு (UAPA) தொடர்ந்து பிணை மறுக்கப்பட்டு 2021இல் சிறைவாசத்தின்போதே உயிரிழந்தவர் ஸ்டான் சாமி. அவருடைய மறைவுக்குப் பிறகு செயல்பாட்டாளர் டாக்டர் பிரகாஷ் லூயிஸ் எழுதிய ‘Fr. Stan Swamy: A Maoist or A Martyr’ என்னும் ஆங்கில நூலின் தமிழாக்கம் இந்நூல்.
30 ஆண்டுக் காலம் மத்திய இந்தியாவில் பழங்குடி மக்களிடையே பணியாற்றியவர் யேசு சபைப் பாதிரியாரான ஸ்டான் சாமி. பழங்குடிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அரசமைப்புச் சட்டத்தின் ஐந்தாம் அட்டவணையையும் பிற சட்டங்களையும் தீர்ப்புகளையும் நடைமுறைப்படுத்தப்படுவதற்கும் பழங்குடி மக்களுக்கு எதிரான சட்டங்கள், அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் ஜனநாயகபூர்வமான போராட்டங்களை அவர் ஒருங்கிணைத்திருக்கிறார்.
சிறையில் அடைக்கப்பட்ட பழங்குடிகளை விடுவிப்பதற்கான செயல்பாடுகளையும் முன்னின்று நடத்தியிருக்கிறார். இப்படிப்பட்ட ஸ்டான் சாமியின் வாழ்க்கையை விரிவாகப் பதிவுசெய்கிறது இந்நூல். அவர் மீதான அரசின் குற்றச்சாட்டுகளை மறுத்து அவர் இறுதிவரையில் அறவழியில் மட்டுமே போராடினார் என்பதை நிறுவுவதற்கான தரவுகளும் வாதங்களும் நூலில் இடம்பெற்றுள்ளன.
அவருடைய கைதுக்குப் பிறகு நடந்த சட்டப் போராட்டங்கள், கைதுக்கும் சிறையில் நடத்தப்பட்ட விதத்துக்கும் மரணத்துக்கும் சர்வதேச, தேசிய மனித உரிமை அமைப்புகள், செயல்பாட்டாளர்களின் எதிர்வினைகள், இதழ்களில் வெளியான கட்டுரைகள் ஆகியவையும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. ஸ்டான் சாமியின் வாழ்க்கையையும் அவர் ஒருங்கிணைத்த போராட்டங்களைத் தெரிந்துகொள்வதன் வழியே இந்தியாவின் பழங்குடிகளையும் அவர்களின் பிரச்சினைகளையும் தேவைகளையும் புரிந்துகொள்ளவும் இந்த நூல் உதவுகிறது.