

மரணத்தோடு போராடிய அனுபவங்களை, நக்சல்பாரி இயக்கத்தில் முழுநேர ஊழியராகப் பணியாற்றிய ஒருவர், இந்த நூலில் பதிவுசெய்துள்ளார். தருமபுரி, திருப்பத்தூர் பகுதிகளில் ‘தீ’ கம்யூனிஸ்ட்டுகள் என்று ஊடகங்களால் பயமுறுத்தப்பட்டு, மர்ம முடிச்சுகளுடன் இது நாள்வரை கட்டிவைக்கப்பட்டிருந்த நக்சல்பாரி இயக்கத்தின் அன்றைய உண்மைச் செயல்பாடுகளை அவிழ்த்துக் காட்டியுள்ளார் நூலாசிரியர் வெ.ஜீவகிரிநாதன்.
1980, ஆகஸ்ட் 6, நக்சல்பாரி இயக்கத்தைச் சார்ந்த ஒருவரை அழைத்து வரும்போது, ஜீப்பில் குண்டு வெடித்து நான்கு காவலர்கள் இறந்தனர். நக்சல்பாரிகளை அடக்குவதற்கென்று ‘கியூ பிராஞ்ச்’ என்ற பிரிவு உருவாக்கப்பட்டது. இதை ஒட்டி, ‘மோதல் கொலை’ கூடுதலாக நடக்கத் தொடங்குகிறது. பட்டப்படிப்பு மாணவரான நூலாசிரியர் வெ.ஜீவகிரிநாதன் இந்த வட்டத்திற்குள் சிக்கிவிட்டார். இது பற்றி நூலாசிரியரின் நேரடி வாக்குமூலம்:
‘எங்கள் அறையின் கதவு பலமாகத் தட்டப்படுகிறது. நானும் ராஜராமும் வெளியே வருகிறோம். இரண்டாவது மாடிக்குப் போகச் சொல்லி எங்கள் இருவரையும் கழுத்தைப் பிடித்துத் தள்ளுகிறார்கள் போலீஸ்காரர்கள். இரண்டாவது மாடியில் தயாராக இருந்த ஒருவர், என் வாயில் பிஸ்டல் ஒன்றை வைத்து அழுத்தி, அதற்கு மேலே இருக்கும் மாடிக்குச் செல்லுமாறு உத்தரவிடுகிறார். அங்கு இருவரையும் மயக்கமடையும் அளவுக்கு நான்கு பேர் தாக்குகிறார்கள். பின்னர் காவல் நிலையத்தில்தான் அந்தக் கொடுமை எங்களுக்கு நேர்ந்தது.
எங்களை அடித்து, உடைகள் மட்டுமல்ல ஜட்டியையும் கழற்றச் சொல்லி நிர்வாணமாக்கினார்கள். மூன்று முறை உட்கார்ந்து எழுந்திருக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டோம். மலவாயிலில் வெடிகுண்டு வைத்திருக்க வாய்ப்புண்டு என்பதற்காகவே இவ்வாறு செய்ததாகப் பின்னர் தெரிந்துகொண்டேன்’ என்பன போன்ற பல விவரங்களை நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.
அறியாப் பருவத்திலுள்ள, அந்த இருவரின் ‘மேலிட என்கவுண்டர் உத்தரவுக்காக’ காவல் துறையினர் காத்திருக்கும் தருணம் வாசிப்பவர்களின் நெஞ்சத்தைப் பதறவைக்கிறது. எப்படியோ இந்த இருவரும் மரணத்தின் பிடியிலிருந்து தப்பிவிட்டனர்.
இயக்கத்தில் முழுநேர ஊழியராகப் பொறுப்பேற்ற பின்னர் நடந்த இரண்டு நிகழ்வுகள் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. எளிய மக்களின் குடியிருப்புகளில் தங்கிக் கட்சிப் பணியாற்றுகிறார். ‘இவர் சோப்பு கேட்க, குடும்பமே வீடு முழுவதும் தேடிப் பாரத்துவிட்டு, துணி துவைக்கும் சிறிய சோப்பைக் கொண்டுவந்து தருகிறார்கள். ஆனால் குளிக்கும் சோப்பு கேட்கிறார். குளிப்பதற்கு சோப்பு எதற்கு தண்ணீர் போதுமே’ என்கிறார்கள்.
நகரத்தின் தூய்மைத் தொழிலாளர்களின் கூரை தரையோடு இருந்த குடிசை வீடு. மலம் அள்ளுவது அன்றைய அவர்களது பணி. ‘டேய் எழுந்திரிடா.. தோழர் வந்திருக்கார்’ என்கிறார். அமைதியுடன் தூங்கிக் கொண்டிருந்த கருவுற்ற பன்றி ஒன்று அங்கிருந்து அகன்று செல்கிறது. வியாழக் கிழமையில் ஒவ்வொரு வீட்டிலும் சோறு வாங்கும் வழக்கம் அவர்களுக்கு இருந்தது. அன்று வியாழக்கிழமை அவர்களோடு சேர்ந்து ஊர் சோறு சாப்பிட்ட அனுபவத்தை நூலில் பதிவுசெய்துள்ளார்.
புகழ் மிக்க வழக்கறிஞர்களான பி.வி. பக்தவத்சலம், பி.வி.ராமானுஜம் ஆகிய இருவரும் நூலாசிரியரின் தாய்மாமன்மார். இவர்களும் இந்தக் காலத்தில் தேசத் துரோக வழக்கில் கைதுசெய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இன்று நூலாசிரியர் சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்கறிஞராகப் பணியாற்றிவருகிறார்.
ஜோலார்பேட்டை, பரிதி பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நூலில் ‘முழுநேர ஊழியராக நான் வாழ்ந்த வாழ்க்கைதான், தான் வாழ்ந்த காலம்’ என்று நூலாசிரியர் குறிப்பிடும் வரிகள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன.
செம்புழுதிப் பாதையில்
வெ.ஜீவகிரிநாதன்
பரிதி பதிப்பகம்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 72006 93200
- சி.மகேந்திரன் மூத்த தலைவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி; தொடர்புக்கு: singaram.mahendran@gmail.com