

தாழ்த்தப்பட்ட மக்களின் மீது கொண்டிருந்த பேரன்பின் நீட்சியாக 1933இல் ‘ஹரிஜன்’ எனும் ஆங்கில வார இதழை காந்தி தொடங்கினார். இந்திய இதழியல் வரலாற்றில் முக்கியமானதாகக் கருதப்படும் அந்த இதழின் தமிழாக்கம் ‘தமிழ் ஹரிஜன்’. அதன் முதலாண்டில் வெளியான 52 இதழ்களை கிருங்கை சேதுபதி, அருணன் கபிலன் ஆகியோர் இந்நூலில் முழுமையாகத் தொகுத்து அளித்திருக்கின்றனர்.
பிரசித்தி பெற்ற ‘ஹரிஜன்’ இதழை ‘தமிழ் ஹரிஜன்’ எனும் பெயரில் தமிழுக்குக் கொண்டுவந்தவர் பதிப்பாளர் சின்ன அண்ணாமலை. சுதந்திரப் போராட்டத்தில் பல முறை சிறை சென்றவர் அவர். 1946 மார்ச்சில் காந்தி சென்னைக்கு வந்தபோது ‘தமிழ் ஹரிஜன்’ இதழைத் தொடங்கிவைத்தார். ஏப்ரல் 16, 1946இல் இந்த இதழின் முதல் பிரதியை சின்ன அண்ணாமலை வெளியிட்டார். எட்டுப் பக்கங்களைக் கொண்ட அந்த இதழின் ஆசிரியர் நாமக்கல் கவிஞர்; நிர்வாக ஆசிரியர் சின்ன அண்ணாமலை. அதன் 11ஆவது இதழில் பொ. திருகூடசுந்தரமும் ஆசிரியராக இணைந்துகொண்டார்.
‘ஹரிஜன்’ நாளிதழின் நோக்கம், நாடு முழுவதும் அப்போது நடைபெற்ற தீண்டாமை ஒழிப்புச் செயல்பாடுகளை மக்களிடம் எடுத்துச் செல்வது. சாதியின் பெயரால் மக்களை அடிமைப்படுத்தும் சிறுமைத்தனத்தை அகற்றும் நோக்கில் அறிவுசார் தளத்தில் அது தீவிரமாக இயங்கியது. தீண்டாமை ஒழிப்புக்கு அப்பால் சமகால அரசியல் செயல்பாடுகளும் அதில் காத்திரமாக விவாதிக்கப்பட்டன.
முக்கியமாக, ‘ஹரிஜன்’ இதழில் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமல், செய்திகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அக்டோபர் 20, 1946இல் வெளியான அதன் 28ஆம் இதழ் தொடங்கி, எல்லாப் பக்கங்களின் (கடைசி பக்கம் நீங்கலாக) அடிப்பகுதியிலும் இடம்பெற்ற பொன்மொழிகளும் கவிதைகளும் அர்த்தம் பொதிந்தவையாகத் திகழ்ந்தன.
‘ஹரிஜன்’ இதழுக்கு காந்தியின் பங்களிப்பே அச்சாணி. தலையங்கம், பயண அனுபவங்கள், கேள்வி – பதில், விளக்கங்கள் என இந்த இதழில் அனைத்துத் தளங்களிலும் காந்தி தீவிரமாக இயங்கினார். எழுதுவதற்கு என்று தனியாக நேரம் ஒதுக்க முடியாத சூழலில், ஓடும் ரயிலிலிருந்தபடி எழுதினார் அவர்.
கூட்டங்களில் ஆற்றிய உரையை வீணாக்காமல் செய்தியாகக் காந்தி தொகுத்தளித்தார். இந்த இதழில் எந்தவொரு விளம்பரமும் அனுமதிக்கப்படவில்லை என்பதிலிருந்து காந்தியிடமிருந்த அறத்தின் வீரியத்தை நாம் புரிந்துகொள்ளலாம்.
காந்தியின் இறுதி ஆண்டுகளில் அவரது சிந்தனைப் போக்கு எப்படி இருந்தது என்பதைப் பிரதிபலிக்கும் காலக் கண்ணாடியாக ‘தமிழ் ஹரிஜன்’ தொகுப்பு திகழ்கிறது. இந்து – முஸ்லிம் ஒற்றுமை, அகிம்சை, சத்தியாகிரகம், இயற்கை மருத்துவம், சாதிப் பாகுபாடு, தீண்டாமை, கல்வி, மொழி போன்றவற்றைக் குறித்த காந்தியின் தெளிவான பார்வையும் ஆழமான கருத்துகளும் இத்தொகுப்பில் பொதிந்துள்ளன.
75 ஆண்டுகளுக்கு முந்தைய இந்திய வரலாற்றின் நிலையான ஆவணமாகத் திகழும் இந்நூலை வெறும் வரலாற்றுப் பதிவு என்று சுருக்கிவிட முடியாது; காலத்துக்கும் நிலைத்து நிற்கும் பண்பாட்டு விழுமியங்களையும், மதநல்லிணக்கத்தின் அடிப்படைக் கூறுகளையும் நமக்குக் கற்பிக்கும் மறைநூல் இது.
தமிழ் ஹரிஜன்: காலத்தின் மனசாட்சி
தொகுப்பு: கிருங்கை சேதுபதி, அருணன் கபிலன்,
முல்லை பதிப்பகம்,
விலை: ரூ.1,500 தொடர்புக்கு: 98403 58301
- முகமது ஹுசைன்; தொடர்புக்கு: mohamedhushain@hindutamil.co.in