

கு.அழகிரிசாமியின் நூற்றாண்டில் அவரது ‘நான் கண்ட எழுத்தாளர்கள்’ நூல் மூன்றாவது பதிப்பைக் கண்டிருக்கிறது. பதிப்பாசிரியர் பழ.அதியமான். முதலிரு பதிப்புகளைவிட இம்மூன்றாவது பதிப்பு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. டி.கே.சி. முதல் டி.எஸ்.சொக்கலிங்கம் வரையான பத்து எழுத்தாளர்கள் குறித்த அணுக்கமான பதிவுகளாக மட்டுமே முதலிரு பதிப்புகள் இருந்தன.
இம்மூன்றாம் பதிப்பில் பழ.அதியமான் இரு பின்னிணைப்புகளைக் கொடுத்திருக்கிறார். இலக்கிய வட்டம், கல்கி, நவசக்தி, தமிழ்நேசன் ஆகிய இதழ்களிலிருந்தும் கு.அழகிரிசாமியின் கையெழுத்துப் படியிலிருந்தும் காருகுறிச்சி அருணாசலம், ‘சக்தி’ வை.கோவிந்தன், தொ.மு.சி.ரகுநாதன், மஞ்சேரி எஸ்.ஈஸ்வரன், துறைவன், ர.பா.மு.கனி ஆகியோர் குறித்த கட்டுரைகளையும் தேடிச் சேர்த்திருக்கிறார்.
மற்றொரு பின்னிணைப்பில் மக்ஸிம் கார்க்கி எழுதி, கு.அழகிரிசாமி மொழிபெயர்த்த இரு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இவ்விரண்டு பின்னிணைப்புகளும் நூலை வாசிக்கும்போது ஆங்காங்கே எழும் சந்தேகங்களுக்குப் பதிப்பாசிரியர் கொடுத்துள்ள மேலதிகக் குறிப்புகளும் புதிய பதிப்புக்கு நியாயம் சேர்த்திருக்கின்றன. கு.அழகிரிசாமி கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை, மொழிபெயர்ப்பு, பதிப்பு என எழுத்தின் அனைத்துத் தளங்களிலும் செயல்பட்டிருக்கிறார்.
ஆனாலும் அவர் சிறுகதையாசிரியராகவே அடையாளப்படுத்தப்படுகிறார். அவரது அபுனைவுகளும் புனைவுகளுக்கு நிகராகப் பொருட்படுத்தத்தக்கவையே, இதற்கு இந்நூலையே சான்றாகக் கூறலாம். கு.அழகிரிசாமி, இந்நூலினூடாக எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை; அவர்களது தனிப்பட்ட பண்புகளையும் பலரும் அரியாத நிகழ்வுகளையும் புனைவுக்குரிய படைப்பூக்கத்துடன் எழுதியிருக்கிறார்.
கு.அழகிரிசாமியின் சிறுகதைகள் தரும் வாசிப்பு அனுபவத்தைவிட இந்நூல் ஏற்படுத்தும் ஆச்சரியங்கள் குறிப்பிடத்தக்கவை. கு.அழகிரிசாமி, தன்னை வெளியில் நிறுத்தியே இக்கட்டுரைகளை எழுதியிருக்கிறார். தவிர்க்க முடியாத இடங்களில் மட்டுமே ‘நான்’ என்று எழுதியிருக்கிறார். தான் கண்ட எழுத்தாளர்களின் தனிப்பட்ட நற்குணங்களை கட்டுரைகளில் வெளிப்படுத்துவதே இவரது நோக்கமாக இருந்திருக்கிறது.
ரசிகமணி டி.கே.சி.யைப் பற்றி எழுதும்போது, எத்தனை நாள்கள் அவர் வீட்டில் தங்கியிருந்தாலும் ‘இன்னும் இரண்டு நாள்கள் இருந்துதான் போக வேண்டும்’ என்று டி.கே.சி. வற்புறுத்தாமல் இருக்க மாட்டார் என்று குறிப்பிடுகிறார். இவ்வரி சங்ககால மன்னர்களை நினைவுபடுத்துகிறது. ஆற்றுப்படை நூல்கள் இது பற்றி விரிவாகப் பேசியிருக்கின்றன. டி.கே.சி., ரசனைமுறை விமர்சனத்தைத் தமிழில் அறிமுகப்படுத்தியவர் என்பதையெல்லாம் கடந்தது இளையவர்களையும் தனக்கு நிகராக வைத்து உரையாடும் அவரது குணத்தை இதில் சொல்லியிருக்கிறார் அழகிரிசாமி.
மேலும், கம்பராமாயணப் பதிப்பிலுள்ள குறைபாட்டைச் சுட்டிக்காட்டிப் பேசும் அளவுக்கு டி.கே.சி., அவருக்கு இடமளித்திருக்கிறார். ‘என்னை எல்லோரும் கவி என்கிறார்கள். பாரதிக்குப் பிறகு நான் என்கிறார்கள். இதெல்லாம் பைத்தியக்காரத்தனம்.
பாரதி எங்கே? நான் எங்கே?’ என்று தன்னைத் தாழ்த்திக்கொள்ளும் கவிமணியின் தன்னடக்கம் கு.அழகிரிசாமியை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது. தன்னைச் சந்திக்க வந்தவர்களை முடியாத வயதிலும் வாசல்வரை வந்து வழியனுப்பும் கவிமணியின் பண்பு அவரெழுதிய கவிதைகளுக்கும் மேலானது. இதே குணம் காருகுறிச்சி அருணாச்சலத்திடம் இருந்ததையும் நினைவுகூர்ந்திருக்கிறார் கு.அழகிரிசாமி.
மகாத்மா காந்தியுடன் ‘அடிகள்’ சேர்த்து எழுதிய பெருமை திரு.வி.க.வையே சாரும். சிலப்பதிகாரத்தின் சமணத் துறவியான கவுந்தியடிகளைப் பற்றி படித்தபோது திரு.வி.க.வுக்கு இந்த யோசனை உருவாகியிருக்கிறது. காந்தியடிகள் என்ற பெயர் தற்போது நிலைபெற்றுவிட்டது. ஆனால் அன்னி பெசன்ட் அம்மையாரை ‘அன்னை வஸந்தை’ என்று திரு.வி.க. எழுதியிருக்கிறார். இது நிலைபெறவில்லை.
இதுபோன்ற நுணுக்கமான பல தகவல்களை கு.அழகிரிசாமி இக்கட்டுரைகளில் தருகிறார். ஒவ்வொரு எழுத்தாளரது தோற்றத்தையும் அவ்வளவு நுட்பமாக எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார். இதனைப் படித்துவிட்டு, பழ.அதியமான் நூலின் இறுதியில் சேர்த்துள்ள அவர்களது புகைப்படங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் அப்படியே பொருந்திப் போகிறது.
ஆசிரியர் - உதவியாசிரியர் வேறுபாடு காட்டாத டி.எஸ்.சொக்கலிங்கம் குறித்த கட்டுரையும், முதலாளி - தொழிலாளி பாகுபாடு பார்க்காத ‘சக்தி’ வை.கோவிந்தன் பற்றிய கட்டுரையும் தவறவிடக் கூடாதவை. கொள்கைக்காகத் தன் நிறுவனத்தையே இழந்தவர் வை.கோவிந்தன். உதவியாசிரியர்களின் நலனுக்காகத் தன் ஆசிரியர் பதவியைத் துறந்தவர் டி.எஸ்.சொக்கலிங்கம். இவர்களது வரலாற்றை அதிகாரத்தில் இருப்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
டி.கே.சி., எஸ்.வையாபுரியார், வெ.ப.சுப்பிரமணியர், வ.ரா., புதுமைப்பித்தன், தொ.மு.சி.ரகுநாதன் உள்ளிட்டோர் அவ்வப்போது வெளிப்படுத்திய நகைச்சுவையான சம்பவங்கள் நூலில் இடம்பெற்றுள்ளன. இவை நூலுக்குச் சமகாலத் தன்மையை அளிக்கின்றன. ‘ரகுநாதனின் நாவல் என்று சொல்லத்தக்கது இனிமேல்தான் அவரிடமிருந்து வெளிவர வேண்டும்’ என்று தொ.மு.சி.ரகுநாதனை விமர்சித்திருக்கிறார்.
இதனை எழுதியபோது ‘பஞ்சும் பசியும்’ நாவல் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்நூலை வெறும் பாராட்டுரைகளாக மட்டும் கருத இயலாது. தான் விமர்சனமாகக் கருதியதைத் தயக்கம் இல்லாமல் கு.அழகிரிசாமி எழுதியிருக்கிறார்.
நான் கண்ட எழுத்தாளர்கள்
கு.அழகிரிசாமி (பதிப்பாசிரியர்: பழ.அதியமான்)
காலச்சுவடு பதிப்பகம்
விலை: ரூ.275
தொடர்புக்கு: 04652-278525, 96779 16696
- சுப்பிரமணி இரமேஷ், இலக்கிய விமர்சகர்; தொடர்புக்கு: ramesh5480@gmail.com