

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பு 2022ஆம் ஆண்டுக்கான விருதுகளை அறிவித்துள்ளது. ‘மன்னார் பொழுதுகள்’ நாவலுக்காக வேல்முருகன் இளங்கோவுக்கு புனைவு விருதும் ‘மூவந்தியில் சூலுறும் மர்மம்’ கட்டுரைத் தொகுப்புக்காக சாம்ராஜுக்கு அபுனைவு விருதும் ‘சுகிர்தராணி கவிதைகள்’ தொகுப்புக்காக சுகிர்தராணிக்கு கவிதை விருதும் ‘இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’ தொகுப்புக்காக சிவசங்கரிக்கு இலக்கிய ஆய்வு மற்றும் மொழிபெயர்ப்பு விருதும் வ.ந.கிரிதரனுக்கு இலக்கியச் சாதனை விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன. 2021, 2022க்கான இயல் விருது ஏற்கெனவே பாவண்ணனுக்கும் லெ.முருகபூபதிக்கும் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
லஷ்மி சரவணக்குமாருக்கு படிக விழா: எழுத்தாளர் லஷ்மி சரவணக்குமாருக்கு இது படிக விழா ஆண்டு. அதை முன்னிட்டு ஆகுதி அமைப்பு, முழு நாள் நிகழ்வை நாளை (05.02.2013) காலை 10 மணிக்கு சென்னையில் மைலாப்பூர், சி.ஐ.டி. காலனி, கவிக்கோ அரங்கத்தில் நடத்தவுள்ளது. விழாவில் எழுத்தாளர் ஜெயமோகன் சிறப்புரையாற்றுகிறார்.
எழுத்தாளர்கள் சுனில் கிருஷ்ணன், காளி பிரசாத், தமிழ்ப் பிரபா, கார்த்திகை பாண்டியன், செல்வேந்திரன், றாம் சந்தோஷ் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் லஷ்மி சரவணக்குமார் எழுத்துகள் குறித்துப் பேசவுள்ளனர்.
திணைகள் விருது பரிந்துரை: திணைகள் அமைப்பு கவிதை விருதுக்கான பரிந்துரை நூல்களை வரவேற்கிறது. 2022ஆம் ஆண்டு வெளிவந்த கவிதை நூல்களை இந்தாண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க இந்த அமைப்பு கேட்டிருக்கிறது. மூன்று பிரதிகள் அனுப்ப வேண்டும். மொழிபெயர்ப்பு, தொகுப்பு நூல்கள் பரிந்துரைக்கு ஏற்புடையவை அல்ல.
தேர்ந்தெடுக்கப்படும் தொகுப்புக்கு ரூ.25,000 ரொக்கமும் பாராட்டுப் பரிசும் அளிக்கப்படும். நூல்கள் அனுப்ப வேண்டிய முகவரி: பழைய எண்:72 (புதிய எண்:3), குமரன் நகர், 2ஆவது மெயின் ரோடு, சின்மயா நகர், சென்னை 92. மேலதிகத் தொடர்புக்கு: editor@thinaigal.com