பாரதி எழுத்துகள் புதிய துலக்கம்

பாரதி எழுத்துகள் புதிய துலக்கம்
Updated on
2 min read

பாரதி, தமிழ் இதழியல், நவீனக் கவிதையியல், சிறுகதையியல் எனப் பல கலை வடிவங்களுக்கும் முன்னோடி. அதனால் அவர் குறித்த ஆய்வின் வழி கிடைக்கும் எழுத்துகள் தமிழுக்கும் அந்தச் சூழலில் புழங்குபவர்களுக்கும் குணம் செய்யக்கூடியது. கடற்கரய் மத்தவிலாச அங்கதம் தொகுத்திருக்கும் ‘யாமறிந்த புலவன்’ என்கிற இந்நூல் அந்த வகையில் வைத்துப் பார்க்க வேண்டியது.

ரா.அ.பத்மநாபன் தொடங்கி இன்று வரை நீண்டிருக்கும் பாரதியியல் ஆய்வுப் பரம்பரையின் இளம் தலைமுறை; அந்தத் தொடர்ச்சியின் நம்பிக்கை அளிக்கும் கண்ணி கடற்கரய். இதற்கான சான்றை இந்தத் தொகுப்பு விளம்புகிறது. பாரதி எழுத்துகள் குறித்த நூறு ஆண்டு கால விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு இது.

வ.வெ.சுப்பிரமணியம் தொடங்கி ஸ்டாலின் ராஜங்கம் வரை 135 கட்டுரைகளைத் தேடித் தொகுத்துள்ளார் கடற்கரய். அண்ணாதுரை, பாரதிதாசன், டி.கே.சண்முகம் உள்பட எழுவரின் உரைகளும் பாரதியின் தம்பி விசுவநாதர், மகள் சகுந்தலா பாரதி ஆகியோரின் நேர்காணல்களும் இதில் தொகுக்கப் பட்டுள்ளன.

கால வரிசைப்படி தொகுக்கப்பட்டுள்ள இந்தக் கட்டுரைகள் வழி பாரதியின் எழுத்துகளின் பன்முகத்தன்மை வெளிப்பட்டுள்ளது. சாதகமாகவும் பாதகமாகவும் பாரதி எழுத்துகள் நூற்றாண்டு கால தமிழில் விவாதத்துக்குக் களமாகியுள்ளன என்பதையும் இந்தக் கட்டுரைகள் வழி அறிந்துகொள்ள முடிகிறது. இந்தத் தொகுப்பின் முதல் கட்டுரையான வ.வெ.சுப்பிரமணியத்தின் ‘மறுமலர்ச்சிக் கவிஞர்’, பாரதி தேர்ந்துகொண்ட இலக்கியப் போக்கு பற்றி விவாதிக்கிறது.

பண்டிதர்களால் கையாளப்படும் பாணி, சாமானிய ஜனங்களின் பாணி ஆகிய இரண்டைப் பற்றி இதில் வ.வெ.சு சொல்கிறார். அந்தக் காலகட்டத்தில் யாரும் தொடத் துணியாத சாமானிய ஜனங்களின் பாணியைத் தொட்டுத் துலங்கச் செய்திருக்கிறார் பாரதி என அவர் மெச்சுகிறார். இந்தக் கட்டுரை பாரதி உயிரோடு இருந்த காலகட்டத்தில் எழுதப்பட்ட கட்டுரை. இவ்வளவு வருடங்களுக்குப் பிறகு இந்தக் கட்டுரை ஒரு புதிய செய்தியை நமக்குச் சொல்கிறது.

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பாரதி, பால கங்காதர திலகரின் தீவிரவாத முறையை ஆதரித்தவர் எனப் பொதுக் கருத்துண்டு. தொகுப்பிலுள்ள பி.ஸ்ரீ.யின் கட்டுரை பாரதியின் கவிதைகளில் அதற்கான சான்றை நிறுவுகிறது. காந்தியைப் பற்றி ’வாழ்க நீ எம்மான்’ எனப் பாரதி பாடியிருந்தாலும் அந்தப் பாட்டில் அவ்வளவு அந்நியோன்யம் இல்லை என்கிறார் கட்டுரையாளர். தமிழ்ப் பாண்டித்தியம் உள்ள யாரும் எளிதில் எழுதிவிடக்கூடிய கவிதை என்கிறார் அவர். இன்றைக்கு வரலாற்றுடன் ஒன்றாகிவிட்ட ‘வாழ்க நீ எம்மான்’ கவிதையைக் குறித்த இந்தப் பழைய விமர்சனம் புதிய அனுபவத்தை அளிக்கிறது.

திலகரைப் பாடும்போது பாரதியின் சொல் ஜொலிப்பதாகச் சொல்கிறார் அவர். பாரதியின் நகைச்சுவை குணத்துக்கு அவரது ‘ஆறில் ஒரு பங்கு’ கதையின் ஒரு விவரிப்பை உதாரணமாக மேற்கோள் காட்டுகிறார் கல்கி. ‘தமையனாருக்குக் கோட்டையில் ரெவின்யூ போர்டு ஆபீஸில் உத்தியோகம். அவருக்கு நான்கு வருடங்களுக்கொரு முறை ஆபீஸில் பத்து ரூபாயும், வீட்டில் இரண்டு குழந்தைகளும் ப்ரமோஷன்’. பாரதிக்குச் சற்றும் குறைவில்லாத நகைச்சுவைச் சக்ரவர்த்தி அல்லவா புதுமைப்பித்தன். இதில் தொகுக்கப்பட்டிருக்கும் அவரது ஒரு கட்டுரையில் பாரதி வரிகளைக் கொண்டு அவரைக் கிண்டலடித்துள்ளார்.

‘பாரதியாரும் போலீஸாரும்’ என்ற அந்தக் கட்டுரை, பாரதி புதிய ஆத்திசூடி வரிகளைத் தேர்ந்து எள்ளல் செய்கிறது. ‘கோல் கைக்கொண்டு வாழ்’ என்கிற வரி போலீஸார் லத்தியைக் கைக்கொண்டு வாழ்வதைத்தான் குறிக்கிறது என்கிறார் புபி. போலீசார் ‘கிம்பளம்’ வாங்குவதைப் ‘பணத்தினைப் பெருக்கு’, ‘கவ்வியதை விடேல்’ என்கிற வரிகளால் பாரதி பாடியுள்ளதாகச் சொல்கிறார். இவை யாவற்றுக்கும் சிகரமாக ‘(பிறர்) துன்பம் மறந்திடு’ எனப் பாரதி போலீஸாருக்குப் போதிப்பதாக புபி நக்கலடிக்கிறார்.

புபியின் இன்னொரு கட்டுரையில் பாரதி எழுத்துகளைப் பிரசுரிப்பவர்கள் செய்யும் மாற்றங்களைக் கடுமையாக விமர்சித்துள்ளார். நவபாரதி, பாரதி எழுத்துகளில் மார்க்சியம் குறித்து எழுதியிருக்கிறார். ப.ஜீவானந்தம், நல்லகண்னு, தொ.மு.சி.ரகுநாதன், எஸ்.தோதாத்ரி, தி.க.சிவசங்கரன் போன்ற இடதுசாரிகள், மு.கருணாநிதி, அண்ணாதுரை போன்ற திராவிடத் தலைவர்கள், வல்லிக்கண்ணன், சி.சு.செல்லப்பா, புதுமைப்பித்தன், நகுலன், கா.ந.சுப்ரமண்யம் போன்ற நவீன எழுத்தாளர்கள், சகஸ்ரநாமம், சாரங்கபாணி போன்ற நடிகர்கள், கார்த்திகேசு சிவத்தம்பி, க.கைலாசபதி போன்ற அறிஞர்கள் எனப் பன்முகமாகப் பாரதியின் எழுத்துகளை அலசும் கட்டுரைகளைத் தேடி முத்துகளைப் போல் கவனத்துடன் கடற்கரய் கோத்துள்ளார்.

இந்தக் கட்டுரைகள் பாரதியின் எழுத்து களுக்குப் புதிய துலக்கத்தை அளித்து நெருப்பிலிட்ட வெள்ளியைப் போல் ஜொலிக்கின்றன. கடற்கரயின் இந்தப் பெரும் பணி, பாரதியியல் ஆய்வுப் பாதையில் ஏற்றிவைக்கப்பட்ட மற்றொமொரு திருவிளக்கு.

யாமறிந்த புலவன்
கடற்கரய் மத்தவிலாச அங்கதம்
பதிகம் பதிப்பகம்
விலை: ரூ.1500 (பக்.:1360)
தொடர்புக்கு: 8778502585

மண்குதிரை; தொடர்புக்கு: jeyakumar.r@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in