

சி.சு.செல்லப்பா மதுரை வட்டார மொழியில் எழுதிய கதைகளின் தொகுப்பு இது. கால சுப்ரமணியம் இதைத் தேடித் தொகுத்துள்ளார். இக்கதைகளின் கூற்றுமொழியை பிரமிள் ‘கொச்சை மொழி’ என்று கருதியதாகப் பதிப்பாளர் உரையில் சொல்லப்பட்டுள்ளது கவனம் கொள்ளத்தக்கது. ‘பில்’, ‘திராட்டு’ என்பன வட்டார புழங்குச் சொற்கள் பல இக்கதைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த வட்டார வழக்கையும் பண்பாட்டையும் செல்லப்பா தன் கதைகளில் ஆர்வத்துடன் பயன்படுத்தியிருப்பதைக் கதைகளை வாசிக்கும் வாசகர்கள் உணர்ந்து கொள்வார்கள். இதில் பிரபல நாவலான ‘வாடிவாசல்’, உள்பட 9 சிறுகதைகள், ‘முறைப்பெண்’ நாடகம் ஆகியவை தொகுக்கப்பட்டுள்ளன. செல்லப்பாவின் கட்டுரையும் செல்லப்பா பற்றி பிரமிள் எழுதிய இரு கட்டுரைகளும் தொகுக்கப்பட்டுள்ளன. - ஹுசைன்
கள்ளர் மடம், சி.சு.செல்லப்பா கதைகள்,
தொகுப்பு: கால சுப்ரமணியம்,
கருத்து பட்டறை வெளியீடு,
விலை: ரூ.350
தொடர்புக்கு: +91 98422 65884
துலங்கும் ஆளுமை: புரிசை கண்ணப்பத் தம்பிரான், கூத்தின் தனிச் சக்ரவர்த்தியாகத் திகழ்ந்தவர். கிராமம் சார்ந்த ஒரு சம்பிரதாயக் கலையாக இருந்த இந்தக் கூத்தில் புதுமைகளைப் புகுத்தி, அந்தக் கலையைப் பொது அரங்குக்கு எடுத்துச் சென்றவர் தம்பிரான். இவரைப் பற்றி ஆளுமைகள் ந.முத்துசாமி, வெங்கட் சாமிநாதன், சே.ராமானுஜம், இந்திரா பார்த்தசாரதி, வெளி ரங்கராஜன் மு.ராமசாமி, கே.ஏ.குணசேகரன், கே.எஸ்.கருணா பிரசாத் உள்ளிட்ட பலர் தங்கள் கருத்துகளைக் கட்டுரைகளாகப் பகிர்ந்துள்ளனர்.
கண்ணப்பத் தம்பிரானின் இறப்புச் சடங்கு பற்றிய ந.முத்துசாமியின் கட்டுரை, கண்ணப்பத் தம்பிரான் என்கிற ஆளுமையை ஒரு சிறுகதையைப் போல விவரிக்கிறது. இதில் வெங்கட் சாமிநாதன், தம்பிரானிடம் மேற்கொண்ட நேர்காணலும் தம்பிரான் எழுதிய பஞ்சாலி சபதம் கூத்து வடிவமும் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. வெளி ரங்கராஜன் இந்நூலைத் தொகுத்துள்ளார். - ஜெய்
கூத்துக் கலைஞன் புரிசை கண்ணப்பத் தம்பிரான்
வெளி ரங்கராஜன்
காவ்யா பதிப்பகம்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 9840480232