

தமிழ் எழுத்தாளர்களின் வாசக வெளியையும் பிரசுர வாய்ப்பையும் விரிவுபடுத்தியதில் இணையத்தின் பங்கு மிக முக்கியமானது. இணையதளங்கள் வழியாக உலக எழுத்தாளர்களைப் போலவே தமிழ் எழுத்தாளர்களும் அதிக அளவிலான வாசகர்களைச் சென்றடைய ஆரம்பித்தார்கள். எனினும், ஒருவர் தனக்குச் சொந்தமாக இணையதளம் வைத்திருப்பதென்பது கொஞ்சம் செலவு பிடிக்கக்கூடியது. அப்படி இருக்கும்போது தமிழ் எழுத்தாளர்களுக்குப் பெரும் வரப்பிரசாதமாக வாய்த்தது வலைப்பூ (ப்ளாக்) எனும் ஊடகம்.
வலைப்பூக்களின் வரவுக்குப் பிறகு பெருமளவிலானவர்கள் எழுத்துத் துறைக்கு வர ஆரம்பித்தார்கள். ஏற்கெனவே எழுதிக்கொண்டிருந்த எழுத்தாளர்களில் ஆரம்பித்து புதிய எழுத்தாளர்கள் வரை பெரும்பாலானோரும் வலைப்பூ என்ற வசதியைச் சிக்கென்று பற்றிக்கொண்டனர். இவர்களின் எழுத்துக்கள் தினமும் ஆயிரக் கணக்கானவர்களால் இணையத்தில் படிக்கப்பட்டன. வாசிப்பு ஆர்வம் கொண்டவர்கள் வலைப்பூக்கள் வந்தபோது தங்களுக்குப் பிடித்த கட்டுரைகள், கதைகள், கவிதைகளைப் பகிர்ந்துகொண்டார்கள். ‘அழியாச்சுடர்’ போன்ற தனிப்பட்ட வலைப்பூக்கள் மூலம் இது போன்ற பகிர்வுகள் மேலும் விரிவடைந்தன. அதுமட்டுமல்லாமல், வெளிநாட்டில் வாழும் எழுத்தார்வமிக்க தமிழர்களுக்கு வலைப்பூக்கள் நல்ல களத்தை அமைத்துக்கொடுத்தன. படைப்புகளை வெளியிட சிற்றிதழ்களையும் வெகுஜன இதழ்களையும் நம்பியிருந்த காலமும் வலைப்பூக்களால் மலையேறியது. அதேசமயம், எழுத்து பெரிய உற்பத்தியாக மாறி, கொஞ்சம் நீர்த்துப்போனதும் வலைப்பூக்களால்தான் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
ஃபேஸ்புக்கின் வரவுக்குப் பிறகு வலைப்பூக்கள் உதிர்ந்து விழ ஆரம்பித்தன. கட்டுரைகள், படைப்புகள், கருத்துகளை ஃபேஸ்புக்கிலேயே பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்கள். இதனால் மேலும் பலரையும் போய்ச்சேர முடிந்தாலும் கட்டுரைகளின் அளவு குறைந்துபோய்விட்டது. கண நேர வாசிப்பையே ஊக்குவிக்கும் வகையிலேயே ஃபேஸ்புக் வெளி இருப்பதால் வலைப்பூக்களில் நீண்ட, ஆழமான கட்டுரைகள் எழுதும் போக்கு குறைந்துவிட்டது. இன்று வெகுசிலரே வலைப்பூக்களைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் வலைப்பூ என்பது எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் சாதகமான பல அம்சங்களை உள்ளடக்கிய பெரும் வெளி! இதன் பொருள், ஃபேஸ்புக்கில் ஆழமாகவும் விரிவாகவும் எழுத முடியாது என்பதல்ல. ஒரு கட்டுரையைப் படிக்கும் விதத்தில் படங்களுடனும் வாக்கிய அமைப்புகள் உள்ளிட்ட வசதிகளுடனும் பதிவிட வலைப்பூக்களே சிறந்தவை என்பதை நம்மால் எளிதில் உணர முடியும்.
ஆகவே, ஆழமான எழுத்து, விரிவான தளத்தில் இடம்பெற வேண்டும் என்றால், மீண்டும் ஆழமான இணைய எழுத்துக் கலாச்சாரத்தை உருவாக்க வேண்டும் என்றால் வலைப்பூக்களுக்குப் புத்துயிர் கொடுப்பது அவசியம். வலைப்பூக்களுக்கு ஃபேஸ்புக்கையும் பயன்படுத்திக்கொள்ளலாம். வலைப்பூக் கட்டுரைகளின் இணைப்பை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துகொள்வதன் மூலம் பெரும் எண்ணிக்கையிலான வாசகர்களை வலைப்பூக்களுக்கு இழுக்கலாம். வலைப்பூ என்ற ஆரோக்கியமான, ஜனநாயக எழுத்து வெளிக்கு எழுத்தாளர்களும் வாசகர்களும் சேர்ந்து உரமூட்டினால் வலைப்பூக்கள் மீண்டும் புத்துயிர் பெறும்.