

இந்திய அளவில் செயல்படும் சாகித்திய அகாதெமி தொகுப்பாசிரியர் பாரதிபாலன் மூலமாக இரண்டு தொகுதிகளாக மொத்தம் 960 பக்கத்தில் தமிழ்ச் சிறுகதைகளைத் தொகுத்துத் தந்துள்ளது. ‘தமிழ்ச் சிறுகதைகள்’ (தமிழ்ப் பண்பாட்டினை அடையாளப்படுத்தும் சிறுகதைகள்), ‘சமகாலத் தமிழ்ச் சிறுகதைகள்’ (2000 -2020 ) ஆகிய தலைப்புகளில் இந்தக் கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
முன்னுரையில் விரிவாகத் தமிழ்ச் சிறுகதை இலக்கிய வரலாற்றை எழுதிச் செல்லும் பேராசிரியார் பாரதிபாலன், 1941 முதல் 2019 வரை சாகித்திய அகாதெமி உள்படப் பல்வேறு பதிப்பகங்களும் வெவ்வேறு விதமாகப் பல்வேறு நோக்கங்களுடன் தமிழ்ச் சிறுகதைகளைத் தொகுத்து வழங்கும் வேலைப்பாட்டில் ஈடுபட்டுள்ளன என்கிற புள்ளி விவரங்களையும் வழங்குகிறார். அத்துடன் தன்னுடைய இந்தத் தொகுப்பிற்கான நோக்கமாகத் ‘தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்களை ஏதோ ஒரு வகையில் பிரதிபலிக்கும் கதைகளை இனம்கண்டு தொகுப்பதுதான்’ என்றும் சுட்டுகிறார்.
இதற்காக ஒரு நூற்றாண்டாக வெளிவந்துள்ள ஆயிரக்கணக்கான கதைகளையும் வாசித்துத் தேர்ந்தெடுப்பதற்குக் கடும் உழைப்பைச் செலுத்தியுள்ளார்.தேர்ந்தெடுத்தலில் உள்ள சிரமங்களை அறிந்தவர்கள் பாரதிபாலனின் உழைப்பினையும் அறிந்துகொள்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அதுவும் எளிதில் ஒரு வரையறைக்குள் உள்படாத பண்பாடு என்ற கோணத்தில் நின்றுகொண்டு செயல்படுவது என்பது எளிதான ஒரு காரியம் அல்ல.
ஏனென்றால், கலை இலக்கியம் எல்லாமே பண்பாட்டின் விளைச்சல்தானே. தானும் ஒரு சிறுகதை படைப்பாளியாக விளங்குவதால் இக்கதை வடிவத்தின் மேல்கொண்ட பேரார்வம்தான் அவரை இப்படி விடாமல் இயக்கியிருக்க வேண்டுமெனக் கருதுகிறேன்.
ஐரோப்பியக் கல்வியினாலும் சீர்திருத்தச் சிந்தனை களாலும் முற்போக்கு இயக்கங்களாலும் தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்ட பண்பாட்டு அசைவுகளையும் அவற்றை எதிர்கொள்ள அனுபவித்த மரபார்ந்த உள்ளங்களின் வாதைகளையும் வலிகளையும் சிறுகதை இலக்கியமாகப் புனைந்து காட்டிய கு.ப.ரா என்கிற சிறுகதை மேதை எழுதிய ‘கனகாம்பரம்’ என்ற கதையை முதலில் தேர்ந்தெடுத்துத் தந்திருக்கிறார்.
நிலவுடைமைச் சமூகம் கட்டமைத்த ஒரு கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் கணவன் கட்டிய தாலியோடு வாழ வந்த ஒரு ‘பொம்மனாட்டி’ தன் மாமனார், மாமியார் முன் கீழேகூட உட்காரக் கூடாது. அதுவாவது பரவாயில்லை. அவர்கள் முன்னால் தனக்குக் கணவனாக வாய்த்தவனோடுகூட ஒரு வார்த்தை பேசி உரையாட முடியாது. அப்படி இருந்த ஒரு குடும்பப் பின்புலத்தில் ஒரு புதிய பெண் தன் கணவனின் நண்பனோடு பேசுகிறாள்.
கூடவே தன் கணவனைத் தேடி வந்த அந்த நண்பனிடம், ‘அவர் கொஞ்சம் வெளியே போயிருக்கிறார்; இப்போ வந்து விடுவார்; உள்ளே வந்து உட்காருங்கோ’ என்று வீட்டுக்குள்ளே அழைக்கவும் செய்கிறாள். இதைத் தாங்குமா ஆண்மையச் சமூகம், இப்படியான ஒரு பண்பாட்டு அசைவைப் படைப்பாக்கிக் காட்டுகிறார் கதை சொல்லி. இந்தக் கதையிலும் கு.ப.ரா வழக்கம்போல் பெண்ணின் கை ஓங்கி வருவதைப் புலப்படுத்தும் விதமாகவே படைத்துள்ளார்.
இதுபோலவே தமிழ்ப் பண்பாட்டில் நிலைபெற்றுள்ள தேர்த் திருவிழாவைப் புலப்படுத்தும் வண்ணதாசனின் (1946) நுட்பமான சித்தரிப்போடு கூடிய ‘நிலை’ என்ற கதை, சாவுச் சடங்கு, (ஆ.மாதவனின் ‘நாயனம்’) இறந்தோர்க்குத் திவசம் செய்யும் சடங்கு (பிரபஞ்சனின் ‘அப்பாவின் வேஷ்டி’) முதலிய பல்வேறு திருவிழாக்கள், சடங்குகள் விரதங்கள், பூஜைகள், முதலியவை சார்ந்த கதைகளை எல்லாம் தொகுத்துள்ளார். மேலும், வாசகர்களுக்குப் பண்பாட்டு நோக்கில் இக்கதைகளைப் பார்ப்பதற்குப் பயன்படும் விதமாகத் தனது 32 பக்கம் கொண்ட முன்னுரையில் ஏறத்தாழ ஒவ்வொரு கதைக்குள்ளும் செயல்படும் பண்பாட்டுக் கூறுகளையும் எடுத்துக்காட்டுகிறார்.
ஒன்றைச் சொல்லத் தோன்றுகிறது. தொகுப்பாசிரியரே தன் முன்னுரையில் எடுத்துக்காட்டுவதைப் போல அறிஞர் அண்ணா 89 சிறுகதைகள் படைத்துள்ளார்; மு.கருணாநிதி ‘16 கதையினிலே’ தொகுப்பும் வெளியிட்டுள்ளார். அவற்றில் தமிழ்ப் பண்பாட்டைப் புலப்படுத்தும் ஒரு சிறுகதை கூடவா இல்லாமல் போயிற்று, இத்தகைய தொகுப்பு வேலையில் விடுபடல் என்பது இயல்பானதுதான். ஆனால், இந்த விடுபடல் திராவிட இயக்க எழுத்துகளை அங்கீகரிக்காத நவீனத்துவவாதிகள் தமிழ்ச் சூழலில் கட்டமைத்துவிட்ட ஒரு கருத்தியலின் செல்வாக்கு, தொகுப்பாளர்க்குள்ளும் அவர் அறியாமலேயே வினைபுரிந்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
‘சமகாலத் தமிழ்ச் சிறுகதைகள்’ என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ள எழுத்தாளர்கள் 36பேரில் 23 பேர் 2000க்கு முன்பே சிறுகதை எழுதி அடையாளம் பெற்றவர்கள் என்ற தகவலையும் தந்துவிடுகிறார். ஆனால், இந்த இருபது ஆண்டுகளில் சமூகத்திற்குள் நிகழ்ந்துள்ள பல்வேறு மாற்றங்களைப் பதிவுசெய்துள்ள கதைகளைத் தேடித் தொகுத்துள்ளார் பாரதிபாலன். உமா மகேஸ்வரியின் ‘கரு’ என்ற கதை நவீன கணினி யுகத்தில், புதிதாகப் பெண்களை அலைக்கழிப்புக்கு உள்ளாக்கும் நவீனக் கருத்தரித்தல் முறை, பிள்ளைப்பேறு, மருத்துவமனை, ஆண்மையச் சமூகம் எனப் பன்முக நோக்கில் புதிய நேர்க்கோட்டில்லா மொழியில் எடுத்துரைக்கிறது.
இன்று நம் வாழ்வு ஊடகங்கள் கையில் சிக்கிய எறும்புகளாக நசுக்குண்டு கிடக்கிறது. செய்திகளை உற்பத்தி செய்வதற்கான கருவிகளாக மனிதர்களைப் பயன்படுத்தும் மனிதாபிமானமற்ற ஒரு காலத்தில் நமது இருப்பு நிகழ்ந்துவருகிறது. இத்தகைய ஊடகத்தை, அதன் தன்மையை, பின் நவீனத்துவப் பாணியில் பகடி செய்கிற கதைதான் அஜயன் பாலாவின் ‘வினோத செய்தியாளனின் ஞாபகக் குறிப்பு’ என்ற கதை. கார்த்திக் பாலசுப்ரமணியனின் ‘இரு கோப்பைகள்’ என்ற கதை நம் காலத்தின் சாபக்கேடான புலம்பெயர் வாழ்வின் கொடூரத்தை ஆஸ்திரேலியா, சீனா, இத்தாலி, போலந்து முதலிய உலக அளவிலான களத்தின் பின்புலத்தில் எடுத்துரைக்கிறது.
புலியூர் முருகேசனின் கதை, நிகழ் காலத்திலுள்ள ஒரு டீச்சர் வாழ்வைப் பழங்காலக் காரைக்கால் அம்மையார் தொன்மத்தோடு இணைத்துப் புதிய முறையில் பெண்மையின் ஆவேசத்தைப் படம் பிடிக்கிறது. சிறுகதை என்பது கதையல்ல, மாறாக வாழ்க்கை மேல் நிகழ்த்தும் விசாரணை என்கிற பார்வையில் இவை தொகுக்கப்பட்டிருக்கின்றன.
- க.பஞ்சாங்கம், பேராசிரியர்; தொடர்புக்கு: drpanju49@yahoo.co.in