

எழுத்தாளர் பாவண்ணனுக்கு இந்த ஆண்டுக்கான கனடா இலக்கியத் தோட்டம் வழங்கும் ‘வாழ்நாள் சாதனைக்கான இயல் விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர் பாவண்ணன்.
1980களில் எழுதவந்த பாவண்ணன், இதுவரை ‘வாழ்க்கை ஒரு விசாரணை’, ‘சிதறல்கள்’, ‘பாய்மரக் கப்பல்’ ஆகிய மூன்று நாவல்கள், 20 சிறுகதைத் தொகுப்புகள், மூன்று கவிதைத் தொகுப்புகள், 25க்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புகள், சிறார் கதைகள், இலக்கியக் கட்டுரைத் தொகுதிகள் போன்ற இலக்கியப் பங்களிப்பைச் செய்துள்ளார்.
கரோனா பொது ஊரடங்கு காரணமாக 2020க்குப் பிறகு விருதுகள் வழங்கப்படாததால் இந்த ஆண்டு இரு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாழ்நாள் சாதனைக்கான மற்றொரு இயல் விருது ஈழ எழுத்தாளர் லெ.முருகபூபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சு.வேணுகோபாலுக்கு
தன்னறம் விருது
இந்த ஆண்டுக்கான தன்னறம் இலக்கிய விருது சு.வேணுகோபாலுக்கு வழங்கப்பட்டது. தமிழின் சிறப்புமிக்க யதார்த்தவாத எழுத்தாளர் சு.வேணுகோபால். இவரது ‘வெண்ணிலை’, ‘கூந்தப்பனை’ ஆகிய சிறுகதைகள் கவனம் பெற்றவை. ‘நுண்வெளிக் கிரகணங்கள்’, ‘பால்கனிகள்’ ஆகிய நூல்களும் கவனம் பெற்றவை. இம்மாதத் தொடக்கத்தில் சென்னையில் நடைபெற்ற விழாவில் இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டது.
ஏழாம் உலகம் ஆங்கிலத்தில்!
ஜெயமோகனின் கவனம்பெற்ற நாவல்களில் ஒன்று ‘ஏழாம் உலகம்’. இந்த நாவல் ஜக்கர்நாட் பதிப்பக வெளியீடாக ஆங்கிலத்தில் வெளியாகவுள்ளது. மொழிபெயர்ப்பு, சுசித்ரா. கீழை ஆசிய நாடுகள் முழுக்க இந்நாவலை வெளியிடும் உரிமையை ஜக்கர்நாட் பதிப்பகம் பெற்றுள்ளது. இயக்குநர் பாலாவின் ‘நான் கடவுள்’ திரைப்படத்தின் ஒரு பகுதி இந்த நாவலை அடிப்படையாகக் கொண்டது. சாலை ஓரங்களில் பார்க்கும் பிச்சைக்காரர்கள் என அழைக்கப்படும் மனிதர்களின் வாழ்க்கை, கொண்டாட்டம், துயரம் எனப் பல விஷயங்களைப் பேசுகிறது இந்த நாவல்.